search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் கலெக்டர் சாந்தா
    X
    பெரம்பலூர் கலெக்டர் சாந்தா

    எச்ஐவி பாதித்த மாணவன் 10 நாட்களுக்கு பிறகு அரசு பள்ளியில் சேர்ப்பு - கலெக்டர் நடவடிக்கை

    பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவின் அதிரடி நடவடிக்கையால் எச்.ஐ.வி. பாதித்த மாணவன் 10 நாட்களுக்கு பிறகு வேறு அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் கேரளாவில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். லாரி டிரைவரின் 15 வயது மகனுக்கும் எச்.ஐ.வி. நோய் பாதிப்பு இருந்தது.

    இந்தநிலையில் அங்குள்ள ஊர் கோவிலில் தங்கியிருந்து வந்த மாணவன் 10-ம் வகுப்பு படிப்பதற்காக கொளக்காநத்தம் அரசு பள்ளியில் சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்தான். ஆனால் எச்.ஐ.வி. பாதித்து இருப்பதால் அந்த பள்ளியில் மாணவனை சேர்க்க தலைமையாசிரியர் மறுத்து விட்டார்.

    இதுகுறித்து மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள் கடந்த 11-ந்தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தாவிடம் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

     தேசிய மனித உரிமை ஆணையம்

    இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் அரசு பள்ளியில் எச்.ஐ.வி. பாதித்த மாணவனை சேர்க்காதது குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க கோரி தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இதனால் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவனை முதலில் சேர்த்து கொண்டதாகவும், வகுப்பில் அவனது கற்கும் திறன் சரியாக இல்லாததால்தான் மாணவன் தொடர்ந்து படிக்க அனுமதிக்கவில்லை என்றும் தலைமையாசிரியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தேசிய மனித உரிமை ஆணையம் அளித்த நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதால் நடந்த சம்பவம் குறித்து விரிவான விளக்கம் கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், தலைமையாசிரியரிடம் கோரியிருந்தது.

    இதனால் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கொளக்காநத்தம் அரசு பள்ளியில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று எச்.ஐ.வி. பாதித்த மாணவனின் உறவினர்களிடம் கடிதம் கேட்டு பள்ளி தரப்பில் மிரட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய கலெக்டர் சாந்தா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கனிடம் மாணவனை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால் மாணவனின் தந்தை அதே பள்ளியில் தனது மகனை சேர்க்க விரும்பவில்லை.

    மாணவனுக்கு எச்.ஐ.வி. இருப்பது அனைவருக்கும் தெரிந்ததாலும், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் இடையே பிரச்சினை ஏற்பட்டதாலும் தங்களுக்கு மன உளைச்சல் இருப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாணவன் மற்றொரு பள்ளியில் சேர்க்கப்பட்டார். மேலும் அரசு பள்ளி மாணவர் விடுதியிலும் அவன் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து முதன்மை கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, கொளக்காநத்தம் பள்ளியில் மாணவனை சேர்க்க தாமதம் மட்டுமே ஏற்பட்டதாகவும், மாணவனின் உறவினரிடம் தந்தை நேரில் வரவேண்டும். அப்போதுதான் மாணவனை சேர்க்க முடியும் என்று கூறியதை அவர்கள் தவறுதலாக புரிந்து கொண்டதால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

    எச்.ஐ.வி. பாதித்த மாணவனின் தந்தை இதுகுறித்து கூறும்போது, கலெக்டரிடம் புகார் தெரிவித்ததும், 10 நாட்களுக்கு பிறகு எனது மகனை அதே பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் நான் அந்த பள்ளியில் மகனை சேர்க்க விரும்பவில்லை. வேறொரு பள்ளியில் சேர்த்து விட்டேன் என்றார்.
    Next Story
    ×