search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள்.
    X
    விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள்.

    திருச்சி- சிங்கப்பூர் விமானத்தில் இரவு முழுவதும் தவித்த பயணிகள்

    திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரம் வரை விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருந்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    கே.கே.நகர்:

    திருச்சி- சிங்கப்பூர் இடையே ஸ்கூட் நிறுவனம் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி வந்து மீண்டும் திருச்சியில் இருந்து 1.30 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும்.

    அதேப்போல் இந்த விமானம் நேற்றிரவு 12.35 மணிக்கு திருச்சி வந்தது. அந்த விமானத்தில் சிங்கப்பூர் செல்ல 113 பயணிகள் காத்திருந்தனர். அதிகாரிகளின் சோதனை முடிந்த பிறகு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், விமானிகள் விமானத்தை இயக்கி பார்த்தனர். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து தொழில் நுட்ப வல்லுனர்கள், விமானத்தில் ஏற்பட்டிருந்த கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் விமானத்தில் அமர்ந்து இருந்த நிலையிலேயே பணிகள் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் வரை போராடி என்ஜினீயர்கள் கோளாறை சரி செய்தனர். அதன்பிறகு இன்று அதிகாலை 3.30மணிக்கு விமானம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.

    இருப்பினும் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றதாலும், 2 மணி நேரம் வரை விமானத்திற்குள்ளேயே அமர்ந்து இருந்ததாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இரவு முழுவதும் தூங்க முடியாமல் விமானத்திற்குள்ளேயே தவித்தனர்.

    விமானம் புறப்படுவதற்கு முன்பே விமானிகளின் சாதுர்யத்தால் தொழில் நுட்பகோளாறு கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. வானில் பறக்கும் போது கோளாறு ஏற்பட்டிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இதன் மூலம் 113 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

    கடந்த வாரம் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த ஸ்கூட் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன்பிறகு சரிசெய்யப்பட்டு விமானம் புறப்பட்டு சென்றது. ஸ்கூட் விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு வருவது அதிகாரிகள்- பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×