search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
    X

    அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

    அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். #JactoGeo

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல், ஒரு ஆசிரியர் பல வகுப்புகளை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.

    ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பல தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில கிராமங்களில் உள்ள பள்ளிகளில் அந்த ஊரில் உள்ள பட்டதாரி இளைஞர்கள், பெண்கள் வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 66 அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இவர்களில் 4 ஆயிரத்து 456 ஆசிரியர்கள் நேற்று முன்தினம் வரை பணிக்கு வராததால் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தஞ்சை தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் இதில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண கோரியும் இன்று காலை சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோ‌ஷ மிட்டப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    எங்களது பள்ளியில் 17 ஆசிரியர்களில் 7 ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வருகிறார்கள். இதனால் பாடங்கள் நடத்துவதில் சிரமம் உள்ளது. ஆசிரியர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பிப்ரவரி 1-ந் தேதி செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 1-ந் தேதி பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷம் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை மாவட்ட இந்திய மாணவர் சங்க செயலாளர் பிடல் காட்ரோ, பிரவீண் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். #JactoGeo

    Next Story
    ×