search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் தடையை தள்ளி வைக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை
    X

    பிளாஸ்டிக் தடையை தள்ளி வைக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை

    பிளாஸ்டிக் தடையை தள்ளி வைக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிளாஸ்டிக் சங்க தலைவர் ஜி.சங்கரன் கோரிக்கை விடுத்துள்ளார். #EdappadiPalaniswami

    சென்னை:

    தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர் ஜி.சங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் தமிழக சட்ட சபையில் 5.6.2018 அன்று 110-வது விதியின் கீழ் எந்தவித விவாதமும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் 1.1.2019 முதல் தமிழகத்தில் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    அதை பின்பற்றி 25.6.2018 அன்று அரசாணை எண். 84 மூலம், தமிழக அரசு தடை செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் என்று ஒரு தெளிவில்லாத அரசாணை வெளியிட்டது. அந்த அசாரணையில் ஒரு வி‌ஷயம் தெளிவாக புலப்பட்டது.

    அதாவது சுற்றுச்சூழலை காப்பாற்ற இந்த தடையாணை பிறப்பிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள சிறு, கறு பிளாஸ்டிக் தொழில் முன்வோர்கள் தயாரிக்கும், விற்பனை செய்யும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் தடை செய்யப்படுகிறது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய பெரு முதலாளிகளும் தயாரிக்கும், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதுவும் தடை கிடையாத என்ற வி‌ஷயம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிந்தது.

    தமிழக அரசின் இந்த தடையால் பதிவு பெற்ற சிறு, குறு நிறுவனங்கள் 10 ஆயிரமும், பதிவு பெறாத சிறு, குறு நிறுவனங்கள் 15 ஆயிரமும் பாதிக்கப்டும். இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், மூன்று லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை இழப்பார்கள்.

     


     

    பிளாஸ்டிக் தடைஇல்லாத ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் இதர மாநிலங்களுக்கு தமிழக பிளாஸ்டிக் சந்தை முழுவதுமாக திறந்து விடப்படும்.

    தமிழகத்தின் ஜி.எஸ்.டி. வரி வருவாய் மற்றும் தமிழ்நாடு, மின்சார வாரியத்துக்கும் சேர்த்து சுமார் 2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். தமிழக அரசின் நஷ்டம், பிற மாநிலங்களுக்கு லாபம்.

    பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில் முனைவோர்கள், பல நிதி நிறுவனங்களில் சொத்துக்களை அடமானம் வைத்து வாங்கி உள்ள கடன்களை எப்படி திருப்பி செலுத்துவது, அவர்களின் வாழ்வாதாரம் என்னாவது? தடை அமுலானால் கடன் பெற்று வாங்கிய எந்திரங்களை பழைய இரும்பு விலைக்கு தான் விற்பனை செய்ய முடியும்.

    அந்நிலையில் கடன் வாங்கியவர்கள் கடனை அடைக்க வழி தெரியாமல் அந்த நிறுவனத்தின் உரிமையாளரும், அவரை நம்பி உள்ள தொழிலாளர்களும், சொந்த மாநிலத்திலேயே அகதிகளாகி விடுவார்கள்.

    பிளாஸ்டிக் கழிவுகள் பிரச்சினையை தீர்க்க, பிளாஸ்டிக்கையே தடை செய்வது என்பது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை எரிப்பதற்கு சமமாகும்.

    மேலும் இந்த தடையால் எங்கள் தொழில் எவ்வாறு பாதிக்கும் என்பதை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக முறையில் எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

    வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மற்றும் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தெழில் சங்க தலைவர் அன்புராஜனும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

    நாளை தமிழகம் மற்றும் பாண்டியில் உள்ள அனைத்து பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் அனைத்தையும் கதவு அடைப்பு செய்து விட்டு பிளாஸ்டிக் தொழிலை நடத்தி வரும் சிறு, குறு தொழில் முனைவோர்களும், தொழிலாளர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    மத்திய அரசு பிளாஸ்டிக் தொழில் சம்பந்தமாக ஒரு இறுதி கொள்கை முடிவு எடுத்து இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும் வரை தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை முதல்-அமைச்சர் தள்ளி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #EdappadiPalaniswami

    Next Story
    ×