search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு போர் - நாராயணசாமி
    X

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு போர் - நாராயணசாமி

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு இந்திய மக்களின் மீது தொடுக்கப்பட்ட 2-ம் பொருளாதார சீர்குலைப்பு போர் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார். #PetrolDiesel #Narayanasamy
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

    இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த விண்ணைமுட்டும் விலை ஏற்றம் மத்திய அரசால் அனைத்து தரப்பு மக்களின் மீதும் கடுமையாக திணிக்கப்பட்டுள்ளது.

    இந்த விலை ஏற்றம் பால், காய்கறி என அன்றாட தேவைக்கான பொருட்கள் மற்றும் அனைத்து பொருட்களின் விலை ஏற்றத்துக்கும் வழி வகுத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை உயர்த்தப்படாத போது, திடீரென இவ்வாறு பெட்ரோலிய பொருட்களின் விலை அவசியமின்றி தினந்தோறும் உயர்த்தப்படுவது நியாயமில்லாத ஒன்றாகும்.

    ஏற்கனவே பண மதிப்பிழப்பு எனும் தோல்வியுற்ற திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர இந்திய மக்களின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்தது.

    அதன் பாதிப்பில் இருந்தே இன்னும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீளாமல் இருக்கும் போது இப்போதைய பெட்ரோலிய பொருட்களின் தொடர் விலை உயர்வை, இந்திய மக்களின் மீது தொடுக்கப்பட்ட 2-ம் பொருளாதார சீர்குலைப்பு போராகவே கருத வேண்டி உள்ளது.

    இதனால் பொதுமக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கும், கடும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி உள்ளனர். மத சார்பற்ற கூட்டணி அரசின் ஆட்சியின்போது வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர், உள்நாட்டு போர் ஆகியவற்றின் காரணமாக கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்த போதும், பொதுமக்களின் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

    பொதுமக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்வதுடன், அதனை உடனடியாக குறைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #PetrolDiesel #Narayanasamy 

    Next Story
    ×