search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்காமல் இருப்பது ஏன்? -  ராமதாஸ் அறிக்கை
    X

    லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்காமல் இருப்பது ஏன்? - ராமதாஸ் அறிக்கை

    சட்டம் இயற்றி 50 நாட்கள் ஆன பிறகும் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்காமல் இருப்பது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #lokayukta

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஊழல் சேற்றில் ஊறித் திளைக்கும் அரசு ஒருபோதும் ஊழலை ஒழிக்காது என்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை உறுதியாகியிருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்கான் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், அச்சட்டத்தின்படி லோக்ஆயுக்தா அமைப்பை தமிழக அரசு இன்னும் ஏற்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவில் 22 மாநிலங்களில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பு நடைமுறையில் இருக்கும் நிலையில், தமிழகத்திலும் அத்தகைய அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திராவிடக் கட்சிகள் திட்டமிட்டு அத்தகைய அமைப்பை ஏற்படுத்தாமல் இருந்து விட்ட நிலையில், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

    இதை வலியுறுத்தி எனது தலைமையில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றமும் இந்த வி‌ஷயத்தில் கண்டிப்புக் காட்டியதால் வேறு வழியின்றி கடந்த ஜூலை 9-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பெயரளவில் விவாதம் நடத்தி இதற்கான சட்டத்தை பினாமி அரசு நிறைவேற்றியது. நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர் நடவடிக்கைகளின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    லோக் ஆயுக்தா சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 9-ந்தேதியே நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், உரிய அனுமதிகள் பெறப்பட்டு லோக் ஆயுக்தா சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும்.

    அதனடிப்படையில் லோக் ஆயுக்தா தேர்வுக்குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அக்குழுவின் கூட்டத்தை உரிய முன் அவகாசத்தில் கூட்டி, லோக் ஆயுக்தாவை தேர்ந்தெடுத் திருக்க வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் ஜூலை மாதம் 10-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.


    ஆனால், உச்சநீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில், கெடு முடிவதற்கு ஒரு நாள் முன்பாக லோக்ஆயுக்தா சட்டத்தை பினாமி அரசு நிறைவேற்றியது. இதனால் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான கெடுவை செப்டம்பர் 10-ந்தேதி வரை நீதிபதிகள் நீட்டித்தனர்.

    நீட்டிக்கப்பட்ட கெடு முடிவதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றியதைத் தவிர பினாமி அரசு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. லோக் ஆயுக்தா சட்டத்தை அரசிதழில் நிறைவேற்றுதல், தேர்வுக்குழுவுக்கான அரசாணை வெளியிடுதல், தேர்வுக்குழு கூட்டத்தை அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒத்து வரும் நாளில் கூட்டுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளுமே கால அவகாசம் தேவைப்படுபவை என்பதால் உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமல்ல.

    உச்சநீதிமன்றம் பலமுறை எச்சரித்தும், கண்டித்தும் கூட லோக் ஆயுக்தாவை அமைக்க அரசு முன்வர வில்லை என்றால், அந்த அமைப்புக்கு தமிழகத்தை ஆளும் பினாமி ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு அஞ்சுகின்றனர் என்பதை அறியலாம்.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா சட்டம் பல் இல்லாத சட்டம்; அச்சட்டத்தில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவது ஒப்பந்தங்களை வழங்குவதிலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும் தான்.

    ஆனால், இவை இரண்டிலும் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் லோக் ஆயுக்தாவுக்கு இல்லை. அதேபோல், அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்த புகார்களை லோக் ஆயுக்தா நேரடியாக விசாரிக்க முடியாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியோ, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியோ தான் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கூட லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்படலாம் என்று அரசு கூறுகிறது.

    இதற்கெல்லாம் மேலாக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோரடங்கிய குழு தான் லோக் ஆயுக்தாவை தேர்ந்தெடுக்கும் என்ற அளவுக்கு லோக் ஆயுக்தா சட்டம் வலுவற்றதாக உள்ளது.

    இத்தகைய பொம்மை அமைப்பை ஏற்படுத்துவதற்கே தமிழக ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள் என்றால், அவர்கள் எந்த அளவுக்கு ஊழல் செய்திருக்க வேண்டும்; பொது நிதியை கொள்ளையடித்திருக்க வேண்டும் என்பதை மக்கள் யூகித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

    லோக் ஆயுக்தாவை அமைப்பதற்குத் தவறியதற்காக வரும் செப்டம்பர் 10-ந்தேதி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் கூட, அதை அரசு துடைத்துக் கொள்ளுமே தவிர லோக் ஆயுக்தா அமைத்து மாட்டிக் கொள்ளாது.

    அதே நேரத்தில் ஊழலில் திளைக்கும் இந்த அரசு வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #lokayukta

    Next Story
    ×