search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலசபாக்கம் அருகே கணவன் - மனைவி வெட்டிக் கொலை
    X

    கலசபாக்கம் அருகே கணவன் - மனைவி வெட்டிக் கொலை

    கலசபாக்கம் அருகே கணவன் மற்றும் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murder

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த குன்னத்தூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58), விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (52). இவர்களது மகன் வெங்கடேசன், மகள் சுகுணா ஆகியோர் திருப்பூரில் வசித்து வருகின்றனர்.

    கண்ணனுக்கு குன்னத்தூரில் சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பயிர் செய்ய அவரும், அவரது மனைவியும் அங்கேயே வீடு கட்டி தங்கி உள்ளனர். கண்ணனின் மனைவி வள்ளியம்மாள் சாதாரண நேரத்திலும் கழுத்தில் சுமார் 10 பவுன் நகை அணிந்து இருப்பது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று அவர்களது வயல் வழியாக விவசாயிகள் சிலர் சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள கிணற்றில் கண்ணன், வள்ளியம்மாள் இருவரும் பிணமாக தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கண்ணனுக்கு தலையிலும், அவரது மனைவி வள்ளியம்மாளுக்கு நெற்றியிலும் வெட்டுக்காயங்கள் இருந்தன.

    சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

    கண்ணனும், வள்ளியம்மாளும் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வந்து கதவை தட்டி எழுப்பியுள்ளனர். கண்ணன் கதவை திறந்தபோது அடுத்த நொடியில் கொலையாளிகள் கண்ணனையும், அவருடைய மனைவியும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

    மேலும், அரிவாளால் 2 பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் வள்ளியம்மாள் வீட்டுக்குள்ளே இறந்துள்ளார். கண்ணன் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இருந்து வெளியே ஓடியுள்ளார்.

    அப்போது, அவரை துரத்தி பிடித்த கொலையாளிகள், தலையில் பாறாங்கல்லை போட்டு கொன்றுள்ளனர். இதில் கண்ணன் தலைநசுங்கி இறந்தார். இதையடுத்து வள்ளியம்மாளின் காதில்இருந்த 2 பவுன் கம்மலை காதுடன் அறுத்தும், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினையும் பறித்து உள்ளனர்.

    பிறகு, கணவன்- மனைவி உடலை அவர்களது விவசாய கிணற்றிலேயே சாவகாசமாக தூக்கிச்சென்று கொலையாளிகள் வீசியுள்ளனர்.

    பின்னர், கொலையை மறைக்க வீட்டுக்குள்ளும், கண்ணன் ஓடியபோது விவசாய நிலத்தின் வரப்பில் படிந்த ரத்தக்கறை மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றியும், மிளகாய் பொடியை தூவி விட்டும் கொலையாளிகள் தப்பியது தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம், நகைக்காக நடந்ததை போல் தெரியவில்லை. கொடூரமாக வெட்டி கொன்று கிணற்றில் பிணத்தை வீசும் அளவிற்கு கொலையாளிகள் வெறித்தனமாக இருந்துள்ளதை பார்த்தால், சொத்து உள்ளிட்ட முன்விரோத தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த இரட்டை கொலை குறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிந்து, அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் பக்கத்து நில விவசாயி பாபு மற்றும் அப்பகுதி மக்கள், உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், கொடூர கொலையாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. வனிதா மேற் பார்வையில், டி.எஸ்.பி.க்கள் அண்ணாதுரை, சின்னராஜ், குணசேகரன் ஆகியோரது தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

    போதிய பாதுகாப்பின்றி தனிமையில் வசிக்கின்ற முதியவர்கள் விலை உயர்ந்த நகைகளை அணிந்து கொண்டு செல்வதை தவிர்க்கவேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×