search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லணையில் உள்ள மதகுகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ள காட்சி.
    X
    கல்லணையில் உள்ள மதகுகளுக்கு வர்ணம் பூசப்பட்டுள்ள காட்சி.

    காவிரி டெல்டா பாசனத்துக்கு கல்லணை 22-ந்தேதி திறப்பு - அமைச்சர்கள் பங்கேற்பு

    காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வருகிற 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கல்லணைக்கு வந்து சேருகிறது.

    பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந் தேதி காலை 11 மணியளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன், குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர் மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    கல்லணையில் தண்ணீர் திறப்பு நிகழ்வின் போது முதலில் கொள்ளிடத்தின் கீழ்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    பின்னர் கல்லணை கரிகாலன் சோழன் சிலை அருகில் உள்ள ஆதிவிநாயகர் கோவிலில் வழிபாடு நடைபெறும். அதன் பின்னர் முக்கிய பிரமுகர்கள் காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து காவிரியில் தண்ணீரை திறந்து விடுவார்கள்.

    இதைதொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும். நிறைவாக கருப்பண்ணசாமி கோவிலில் வழிபாடு நடைபெற்ற பின்னர் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படும்.

    கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


    Next Story
    ×