search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை காரணமாக வால்பாறை கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்.
    X
    மழை காரணமாக வால்பாறை கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்.

    தொடர் மழை எதிரொலி: வால்பாறையில் இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை

    தொடர்மழை எதிரொலியாக வால்பாறையில் இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    வால்பாறை:

    கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவும் மழை பெய்தது. இன்று காலையும் இந்த மழை நீடித்தது.

    இதனை தொடர்ந்து வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வால்பாறை சின்கோனா பகுதியில் 78 மில்லி மீட்டரும், சின்ன கல்லாரில் 82 மி.மீட்டரும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பகுதியில் 42 மி.மீட்டரும், வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 44 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    கோவை பீளமேடு ஏர்போர்ட் பகுதியில் 3 மில்லி மீட்டரும், பொள்ளாச்சியில் 12 மி. மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மழை காரணமாக சோலையார் அணைக்கு வினாடிக்கு 4136.57 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து சேடல் பாதை வழியாக 2994.21 கன அடி தண்ணீ சேடல் பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

    சோலையார் மின் நிலையம் -2 இயக்கப்பட்டு 596.61 கன அடி தண்ணீர் கேரளாவிற்கு திறந்து விடப்படுகிறது.

    அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை தாண்டி 162.72 அடியாக உள்ளது.

    நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் 100 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர் மட்டம் 92 அடியை எட்டியது.

    மேலும் மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்கியதால் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ஆற்றில் வெள்ள பெருக்கு குறித்து வருவாய் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் நேற்று மழை பெய்தது. இரவில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குளிர் வாட்டி வதைத்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    Next Story
    ×