search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்
    X

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

    தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் ஜருகு பகுதியை சேர்ந்தவர் மாதையன். பெங்களூருவில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி ( வயது 35). இவர்களுக்கு திருவரசு(11), புகழரசு(7) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மகேஸ்வரி நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது மகன்களுடன் வந்தார்.

    மண்எண்ணெயை ஒரு பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த அவர் தர்மபுரி கலெக்டர் அலுவலக போர்டிகோ முன்பு திடீரென தனது உடலிலும், தனது மகன்களின் உடலிலும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடிச்சென்று மகேஸ்வரியின் கையில் இருந்த தீப்பெட்டியை பறித்தனர். இதை பார்த்த போலீசார் அங்கு வந்து மகேஸ்வரியின் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து தரையில் மகன்களுடன் அமர்ந்து மகேஸ்வரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2003-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் பாகலஅள்ளியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை எனக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரியும்,என்னையும், எங்கள் 2 மகன்களையும் தவிக்க விட்டு பிரிந்து சென்றுள்ள எனது கணவருடன் எங்களை சேர்த்து வைக்க கோரியும் கடந்த 2013-ம் ஆண்டு முதல் மனு அளித்து வந்தேன்.

    இதுதொடர்பாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவெடுத்து இங்கு வந்தேன் என்று தெரிவித்தார். எனக்கும், எனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து மகேஸ்வரியையும் அவருடைய 2 மகன்களையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றிய போலீசார் தர்மபுரி போலீஸ் நிலையத்திற்கு அவர்களை அழைத்து சென்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.  #tamilnews
    Next Story
    ×