search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மழை
    X

    பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் - வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மழை

    பாலமேட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அதேபோல் வீரர்களின் கையில் சிக்காமல் சென்ற காளை உரிமையாளர்களுக்கும் பரிசு அளிக்கப்பட்டது. #Jallikattu #Palamedu

    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை யொட்டி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை.

    அதன்படி பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

    மாட்டுப் பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதற்காக அங்குள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் உள்ள வாடிவாசல் அல கரிக்கப்பட்டு இருந்தது. காலை 8.25 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

    கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போட்டியை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், மூர்த்தி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

    போட்டி தொடங்கியவுடன் முதலில் மகாலிங்க சுவாமி கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

    வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, வீரர்கள் உற்சாகத்துடன் விரட்டி பிடித்து அடக்க முயன்றனர். காளைகள் களத்தில் நின்று வீரர்களுக்கு நிகராக விளையாடியது. சில காளைகள் வீரர்களின் கையில் சிக்காமல் போக்கு காட்டியது.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கு அப்போது பரிசு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அதேபோல் வீரர்களின் கையில் சிக்காமல் சென்ற காளை உரிமையாளர்களுக்கும் பரிசு அளிக்கப்பட்டது.

    மோட்டார் சைக்கிள், சைக்கிள், பீரோ, பாத்திரங்கள், தங்க, வெள்ளி நாணயம், பட்டு வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டு போட்டி 8 சுற்றுகளாக நடைபெற உள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் 100 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். விதிகளை மீறிய வீரர்கள் உடனடியாக களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். போட்டியில் பங்கேற்பதற்காக 1188 வீரர்கள் பெயர்களை பதிவு செய்து உள்ளனர்.

    இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1080 காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. காளைகளுக்கு 65 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின் தான் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. இதே விதிமுறை மாடு பிடி வீரர்களுக்கும் கடை பிடிக்கப்பட்டது.

    காயமடைந்த காளைகளுக்கும், வீரர்களுக்கும் உடனடி முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக 21 மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் ஆம்புலன்சு வசதிகளுகம் செய்யப்பட்டு உள்ளன.

    ஜல்லிக்கட்டு போட்டியை காண இன்று அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள், இளைஞர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பார்வையாளர்களின் வசதிக்காக கேலரிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    பாலமேட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று பாலமேட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பாலமேடு, அலங்காநல்லூரில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பறக்கும் கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர்.

    போட்டியை காணவந்த பொதுமக்களுக்கு குடிநீர், சுகாதார வசதிகளை பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு, துப்புரவு மேற்பார்வையாளர் கனகராஜ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். #Jallikattu #Palamedu #tamilnews

    Next Story
    ×