search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சரோஜா மீது பெண் அதிகாரி புகார்: வேலையில் நீடிக்க ரூ. 30 லட்சம் கேட்டு மிரட்டல்
    X

    அமைச்சர் சரோஜா மீது பெண் அதிகாரி புகார்: வேலையில் நீடிக்க ரூ. 30 லட்சம் கேட்டு மிரட்டல்

    பணி நிரந்தரம் செய்ய ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு தர்மபுரி பெண் அதிகாரியை சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மிரட்டியதாக புகார் எழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    பணி நிரந்தரம் செய்ய ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு தர்மபுரி பெண் அதிகாரியை சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மிரட்டியதாக புகார் எழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ராஜம் மீனாட்சி நிருபர்களிடம் கூறியதாவது-

    தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஒப்பந்த அதிகாரியாக பணிப்புரிந்து வரும் எனக்கு இந்த வேலை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது கிடைத்தது. எனக்கு கடந்த சில மாதங்களாக பல்வேறு ரூபங்களில் எதிர்ப்பு வந்தது. எதற்காக இப்படி நடக்கிறது என்று பல முறை யோசித்தேன்.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி சென்னையில் உள்ள வீட்டிற்கு வருமாறு சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா எனக்கு அழைப்பு விடுத்தார். குழந்தைகள் நல புத்தகம் தொடர்பாக அமைச்சரை பார்க்க அனுமதி கேட்டு இருந்ததால் உடனே நானும் சென்னைக்கு புறப்பட்டு சென்றேன். மேலும் துறை ரீதியாகவும் பேசுவார்கள் என்று நினைத்தேன்.

    அமைச்சர் வீட்டிற்கு சென்றதும் அங்குள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றனர். உள்னே நுழைந்ததும், அமைச்சர் சரோஜாவும், அவரது கணவரும் தொடர்ந்து எனக்கு பல்வேறு கோணங்களில் மிரட்டல் விடுத்தனர்.

    என்ன சொன்னாலும் வேலையை விட்டு போக மாட்டேங்கற, நீ இந்த வேலையை எந்த பணமும் கொடுக்காமல் வாங்கி உள்ளாய், தற்போது இந்த பதவி ரூ. 30 லட்சத்திற்கு விலை போகிறது. தொடர்ந்து பணியில் நீடிக்க வேண்டுமானால் ரூ.30 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர்.

    தொடரும் பிரச்சினைகளால் வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி செல்லலாம் என்று நினைத்து டிரான்ஸ்பர் செய்யுமாறு கேட்டேன். அதற்கும் அவர் பணம் கொடுக்க வேண்டும் என்றார். மேலும் உனது நடத்தை சரியில்லை என்று பரப்புவதாக கூறிய அவர் கொலை மிரட்டலும் விடுத்தார்.

    நான் ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி ஹெர்ணியா பாதிப்புப்காக ஒப்பன் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் மிகவும் தளர்ச்சியாக இருந்தேன். அறுவை சிகிச்சையின் போது வைத்த பிளேட் வேறு விலகி விட்டது.

    இந்த நிலையில் ஒரு சமூக நலத்துறை அமைச்சர் இப்படி பேசியதால் தேம்பி, தேம்பி அழுதேன். கடவுள் புண்ணியத்தில் அங்கிருந்து உயிர் பிழைத்து தப்பித்து வந்தேன். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருக்கும். அதனை பார்த்தால் தெரியும்.

    நான் வேலை பார்க்கும் துறை பெண்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் பயன் அடையும் துறை. சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு இரண்டரை லட்சம் வாங்குகிறார்கள். முட்டை டெண்டருக்கு பணம் வாங்குகிறார்கள். இந்த சமூகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.

    இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி, கவர்னர் உள்பட பலருக்கு மனு அனுப்ப உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×