என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    • பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
    • அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பமான கம்பேக் கொடுக்கும்

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்ற பெங்களூரு அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள். இந்த கனவை பல ஆண்டுகளாக சுமந்து வந்து கிங் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானது. அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பமான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    • ஆர்சிபி வீரர்கள் இன்று மில்லியன் கணக்கான ரசிகர்களின் கனவை நனவாக்கினர்
    • இது ஒரு வரலாறு படைக்கும் நாள் என்று பதிவிட்டுள்ளார்.

    ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஐ.பி.எல். போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள்.

    கனவு கடைசியில் நனவாகி உள்ளது. ஈ சாலா கப் நமதே! மின்சாரம் போன்ற செயல்பாடு முதல், கலங்காத மனவுறுதி வரை, இந்த வெற்றியானது, கர்நாடகாவின் பெருமையை  உயர்த்தி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

    ஆர்சிபி வீரர்கள் இன்று மில்லியன் கணக்கான ரசிகர்களின் கனவை நனவாக்கினர், முழு போட்டியிலும் ஒரே அணியாக செயல்பட்டனர்.

    இந்த ஆர்சிபி வெற்றி விராட் கோலியின் 18 ஆண்டுகால தவம், விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பின் பலன். ஆர்சிபியின் ஒவ்வொரு வீரரும் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் போன்ற அனைத்து துறைகளிலும் சாம்பியன் செயல்திறனை வழங்கியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. இது ஒரு வரலாறு படைக்கும் நாள் என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்த வெற்றி எனக்கும், விராட் கோலிக்கும், அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    • எங்களுக்கு விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் நான் அவரைத் தேடுகிறேன்.

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது. கோப்பை வென்ற ஆர்சிபிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடி வழங்கப்பட்டது.

    இதற்கிடையே வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி கேட்பன் ரஜத் படிதார், "இந்த வெற்றி எனக்கும், விராட் கோலிக்கும், அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    தகுதிச் சுற்றுக்குப் பிறகு, நாங்கள் கடந்து செல்ல முடியும் என்று நினைத்தோம். இந்தப் பாதையில் 190 ரன்கள் ஒரு நல்ல ஸ்கோராக இருந்தது.

    பந்து வீச்சாளர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவது பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது. குருணால் ஒரு விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர், எங்களுக்கு விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் நான் அவரைத் தேடுகிறேன்.

    சுயாஷ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் சீசன் முழுவதும் சிறப்பாக இருந்தனர். ஷெப்பர்ட் இன்றிரவு முக்கிய விக்கெட்டைக் கொடுத்தார்.

    இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு மற்றும் கோலியிடன் கேப்டனாக கற்றுக்கொள்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு. அவர் வேறு யாரையும் விட அதற்கு தகுதியானவர். அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு வரியைச் சொல்ல விரும்புகிறேன் - ஈ சாலா கோப்பை நமது," என்று தெரிவித்தார். 

    • அவர்கள் சிறப்பாக பந்து வீசினர். க்ருணால் அற்புதமானவர்.
    • நிறைய இளைஞர்கள் தங்கள் முதல் சீசனை விளையாடினார்கள்

    ஐபிஎல் 2025 சீசனில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இதுகுறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், "சோகமாக இருந்தது, ஆனால் நாங்கள் இதுவரை வருவதற்காக வாய்ப்பை பெற்றதற்கான பாராட்டுகள் நிர்வாகத்திற்கும் ஒவ்வொரு வீரருக்கும் சேரும்.

    நாங்கள் இங்கு விளையாடிய கடைசி ஆட்டத்தை கருத்தில் கொண்டால், 200 ரன்கள் வரலாம் என தனிப்பட்ட முறையில் நினைத்தேன்.

    அவர்கள் சிறப்பாக பந்து வீசினர். குருணால் அற்புதமானவர், தனது அனுபவத்தைப் பயன்படுத்தினார், அதுதான் திருப்புமுனை.

    எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு நபரைப் பற்றியும் பெருமைப்படுகிறேன், நிறைய இளைஞர்கள் தங்கள் முதல் சீசனை விளையாடினார்கள். அவர்களின் அச்சமின்மை அற்புதமானது.

    வேலை பாதி முடிந்துள்ளது, அடுத்த ஆண்டு நாம் அதை வெல்ல வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் மாறிய விதம் நேர்மறையானது, அவர்கள் நிறைய அனுபவத்தைப் பெற்றுள்ளனர், அடுத்த ஆண்டு அதை நாம் கட்டியெழுப்ப முடியும்," என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார். 191 ரன்கள் இலக்கு என்ற நிலையில் 184 ரன்களில் பஞ்சாப் தோற்றது குறிப்பிடத்க்கது.  இதற்கிடையே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இரண்டாம் இடம் பிடித்ததற்கான பரிசுத் தொகையாக ரூ.12.5 கோடி வழங்கப்பட்டது.

    • இறுதிப்போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    • 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதைப் பெறுகிறார்.

    ஐபிஎல் 2025 சீசனில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் சீசனில் திறமையை வெளிப்படுத்திய வெவ்வேறு அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

    அதன்படி, குருணால் பாண்டியா ஆட்ட நாயகன் விருதுக்கு தேவானார். அதிக ரன் அடித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பி மற்றும் அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கான ஊதா நிற தொப்பியை குஜராத் அணியின் சாய் சுதர்சன் (759 ரன்) மற்றும் பிரசித் கிருஷ்ணா (25 விக்கெட்) ஆகியோர் கைப்பற்றினர்.

    சாய் சுதர்சன் போட்டியின் வளர்ந்து வரும் வீரராக தேர்வானார். மேலும் அதிக 4 (ரன்கள்) (88 பவுண்டரிகள்) அடித்ததற்கான விருதை சாய் சுதர்சன் வென்றார்.

    ஃபேர்பிளே விருது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வழங்கப்படுகிறது. சீசனில் அதிக சிக்ஸர்கள் (40 சிக்ஸர்கள்) அடித்ததற்கான விருதை நிக்கோலஸ் பூரன் பெறுகிறார்.

    சீசன் முழுவதும் 206 ஸ்ட்ரைக் ரேட்டிற்காக 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதைப் பெறுகிறார். சீசனின் சிறந்த கேட்சுக்கான விருதை கமிந்து மெண்டிஸ் பெறுகிறார்.

    • என் இதயம், என் ஆன்மா பெங்களூருவுடன் உள்ளது.
    • ஏலத்தில், பலர் எங்கள் முடிவுகளை கேள்வி எழுப்பினர்.

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.

    இந்த வெற்றி குறித்து அவ்வணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியதாவது, "இந்த வெற்றி ரசிகர்களுக்கும் அணிக்கும் சமர்ப்பணம். இந்த அணிக்கு எனது இளமை முழுவதையும் நான் அளித்துள்ளேன். ஒவ்வொரு சீசனிலும் வெற்றி பெற முயற்சித்தேன், என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன்.

    இந்த நாள் வரும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, நாங்கள் வென்ற பிறகு உணர்ச்சிவசப்பட்டேன். நான் இந்த அணிக்கு விசுவாசமாக இருந்தேன். என் இதயம், என் ஆன்மா பெங்களூருவுடன் உள்ளது. இன்றிரவு, நான் ஒரு குழந்தையைப் போல தூங்குவேன்.

    ABD அணிக்காகச் செய்தது மகத்தானது. நான்கு ஆண்டுகளாக ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் அணியில் பல முறை POTM ஆக இருந்து வருகிறார். அவர் மேடையில் இருக்கவும், கோப்பையை உயர்த்தவும் தகுதியானவர்.

    ஏலத்தில், பலர் எங்கள் முடிவுகளை கேள்வி எழுப்பினர். ஆனால், எங்களிடம் இருந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். மேலும் இந்த அணியின் வலிமையில் எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. அணியில் உள்ள ஒவ்வொருவரும் இல்லாமல் இது சாத்தியமில்லை" என்று தெரிவித்தார்.

    ஐபிஎல் கோப்பையை வெல்வது ஆர்சிபியின் 18 வருட நிறைவேறா கனவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
    • இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது.

    18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி- சால்ட் களமிறங்கினர். விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சால்ட் அதிரடியாக விளையாடி 9 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த மயங்க் அகர்வால் 24, பட்டிதார் 26 என ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி வந்த விராட், அதிரடியாக விளையாட ஆரமித்தார். ஆனால் அதற்குள் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 35 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து லிவிங்ஸ்டன் - ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2 சிக்சர்கள் விளாசிய லிவிங்ஸ்டன் 25 ரன்னிலும் 2 பவுண்டரி 2 சிக்சர் விளாசிய ஜித்தேஷ் 10 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது.  இதைத்தொடர்ந்து 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி திறமையுடன் விளையாடியது. பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் இறங்கினர்.

    இதில் பிரியன்ஷ் ஆர்யா 24 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தொடர்ந்து களத்திற்கு வந்த இங்கிலிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 39 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    தொடர்ந்து இளம் வீரர்களான நேஹல் வதேரா மற்றும் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் வதேரா 15 ரன்னிலும், அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 6 ரன்னிலும், ஓமர்சாய் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இறுதிப் போட்டியை வென்று தொடரை கைப்பற்றி உள்ளது.  இந்த வெற்றியின் மூலம் அவ்வணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்துள்ளது.

    • ஆர்சிபி தரப்பில் விராட் கோலி 43 ரன்கள் விளாசினார்.
    • பஞ்சாப் அணி தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி- சால்ட் களமிறங்கினர். விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சால்ட் அதிரடியாக விளையாடி 9 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த மயங்க் அகர்வால் 24, பட்டிதார் 26 என ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி வந்த விராட், அதிரடியாக விளையாட ஆரமித்தார். ஆனால் அதற்குள் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 35 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து லிவிங்ஸ்டன் - ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2 சிக்சர்கள் விளாசிய லிவிங்ஸ்டன் 25 ரன்னிலும் 2 பவுண்டரி 2 சிக்சர் விளாசிய ஜித்தேஷ் 10 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    • ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக கிறிஸ் கெய்ல் விளையாடியுள்ளார்.
    • இரு அணிகளுக்கும் தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக வித்தியாசமான கெட்டப்பில் வந்துள்ளார்.

    18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் பெங்களூரு அணி இதுவரை 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்த போட்டியை காண பல முன்னாள் வீரர்களும், பல்வேறு பிரபலங்களும் அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    அந்த வகையில் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் வீரரான கிறிஸ் கெயில் வித்தியாசமான கெட்டப்பில் வந்துள்ளார்.

    அதாவது இரு அணிகளுக்கும் தனது ஆதரவை தெரிவிக்கும் விதமாக பெங்களூரு அணியின் ஜெர்சியையும், தலையில் தலைப்பாகையும் அணிந்து வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

    • ஐ.பி.எல். இறுதிப்போட்டியைக் காண பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அகமதாபாத் வந்தார்.
    • பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்தபடி ஆர்சிபி அணிக்கு அவர் உற்சாகம் கொடுத்தார்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியைக் காண பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அகமதாபாத் வந்துள்ளார். மைதானத்தில் இருந்தபடி ஆர்சிபி அணிக்கு அவர் உற்சாகம் கொடுத்தார்.

    முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக் கூறியதாவது:

    லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை இடம்பெற செய்ததில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டை மாற்றம் காண செய்துள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் இதில் விளையாட வேண்டும் என விரும்புகின்றனர். மகளிரையும் இதில் ஈடுபட செய்யும் வகையில் மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. அது வரவேற்கத்தக்கது.

    நான் விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகர். அவர் ஒரு ஜாம்பவான். நான் பிரிட்டன் பிரதமராக இருந்தபோது கோலி ஆட்டோகிராப் உடன் கூடிய பேட் ஒன்றை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தீபாவளி பரிசாக அளித்தார்.

    இங்கிலாந்துக்கு இந்தியா கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அது சிறப்பான தொடராக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    நான் பெங்களூருவை சேர்ந்த குடும்பத்தில் இருந்து பெண் எடுத்துள்ளேன். அதனால் ஆர்சிபி அணிக்கு தான் எனது ஆதரவு என தெரிவித்தார்.

    • ஒருவேளை மழை காரணமாக இன்று போட்டி நடைபெறவில்லையென்றால் நாளை (ரிசர்வ் டே) போட்டி நடைபெறும்.
    • ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்

    அகமதாபாத்:

    18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்றுகளின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    இந்த நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    • 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும்.
    • 3-வது இடத்துக்கு ரூ.7 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.6.5 கோடி பரிசு தொகையும் கிடைக்கும்.

    அகமதாபாத்:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கான இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதுவரை சாம்பியன் பட்டம் பெறாத அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதனால் முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது பெங்களூரா? பஞ்சாப்பா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.சி.பி. 4-வது தடவையாகவும், பஞ்சாப் 2-வது முறையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகின்றன.

    இரு அணிகளும் சம்பலம் பொருந்தியவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இரு அணிகளும் இன்று மோதுவது 37-வது முறையாகும். இதுவரை நடந்த 36 ஆட்டத்தில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியுடன் தலா 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த சீசனில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. முதல் ஆட்டத்தில் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றன.

    'குவாலிபையர்1' ஆட்டத்தில் பஞ்சாப்பை 101 ரன்னில் சுருட்டி பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்படுகிறது. 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும்.

    3-வது இடத்துக்கு ரூ.7 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.6.5 கோடி பரிசு தொகையும் கிடைக்கும். கடந்த 2022 முதல் இதே பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 

    ×