என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 3-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
    • 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    ஹராரே:

    இந்தியா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது.

    அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் 2-வது டி20 போட்டியின் போது கள நடுவர் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்த போது 8-வது ஓவரை பிஷ்னோய் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை இடது கை பேட்ஸ்மேனான காம்ப்பெல் வலது பக்கம் திரும்பி அடிக்க முயற்சிப்பார். பந்து பேட்டில் படாமல் கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. இதற்கு கள நடுவர் வைடு என அறிவிப்பார். உடனே பிஷ்னோய் வைடா என மிரட்டலாக கேட்க சுதாரித்து கொண்ட நடுவர் மன்னிக்கவும் என கூறி அறிவிப்பை மாற்றி விடுவார். இது களத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • காலிறுதிச் சுற்று போட்டியில் இத்தாலி வீரர் முசெட்டி வென்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.

    இதில் முசெட்டி 3-6, 7-6 (7-5), 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் முசெட்டி, ஜோகோவிச்சுடன் மோதுகிறார்.

    • இந்திய அணியின் இளம்வயது தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை கவுதம் கம்பீர் பெற்றுள்ளார்.
    • இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

    இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்கவுள்ளார்.

    இதன்மூலம் இந்திய அணியின் இளம்வயது தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை கவுதம் கம்பீர் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் அறிவிக்கப்படுவதற்கு முன்பு விராட் கோலியிடம் பிசிசிஐ கலந்தோலோசிக்கவில்லை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித், கோலி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இனிமேல் டி20 போட்டிகளுக்கு பாண்ட்யா தான் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தலைமை பயிற்சியாளராக கம்பீரை நியமனம் செய்வதற்கு முன்பு ஹர்திக் பாண்டியாவிடம் பிசிசிஐ கலந்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கம்பீருக்கும் கோலிக்கும் இடையே கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருவரும் கட்டிப்பிடித்து பிரச்சனையை முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வென்றது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் முதல்முறை நடத்த உள்ளது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் தொடர் "சாம்பியன் டிராபி," இது மினி உலகக் கோப்பை தொடர் என்றும் அழைக்கப்படுகிறது. முதன் முதலில் 1998 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. அறிமுக தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வென்றது.

    அதன்பிறகு, இதுவரை எட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில், ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. இதனை பாகிஸ்தான் முதல்முறையாக நடத்த உள்ளது.

    பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்த தொடரில் பாகிஸ்தான் பரிந்துரைக்கும் அட்டவணையை ஐசிசி அறிவிக்கும். ஒருவேளை பாகிஸ்தான் உருவாக்கிய அட்டவணையில் திருத்தங்கள் இருப்பின் அதுகுறித்து போட்டி நடத்தும் நாட்டிற்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனிடையே 2025 ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்த தொடரின் முதல் 20 நாளில் 15 போட்டிகள் நடைபெற உள்ளன. லாகூரில் அதிகபட்சம் ஏழு போட்டிகள் நடைபெறவுள்ளன. மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியும் லாகூர் மைதானத்திலேயே நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தினமும் ஏதேனும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதனிடையே 2025 ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியா விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த ஐசிசி-க்கு பிசிசிஐ வலியுறுத்தும் என்று பிசிசிஐ சார்ந்த தகவல்கள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    • யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பேயர்ன் முனிச் அணியுடன் ஒரு தொடரில் விளையாடுவதற்காக தாமஸ் முல்லர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதில், ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் ஜெர்மனி தோல்வியடைந்தது.

    இதனையடுத்து, அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி க்ராஸ் அறிவித்தார்.

    டோனி க்ராசை தொடர்ந்து ஜெர்மனி அணியின் மற்றொரு முன்னணி வீரரான தாமஸ் முல்லரும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    பேயர்ன் முனிச் அணியுடன் மேலும் ஒரு தொடரில் விளையாடுவதற்காக தாமஸ் முல்லர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் ஜெர்மன் அணிக்காக இனிமேல் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது.
    • முதல் பாதியில் கொலம்பியா அணி முன்னணி வகித்தது.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கி இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜென்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா என நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்டது. இதனிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் களம்கண்டன.

    இந்த போட்டி துவங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். போட்டியின் 39-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் லெர்மா தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இதன் மூலம் போட்டியின் முதல் பாதியில் கொலம்பியா அணி முன்னணி வகித்தது.

    முதல் பாதி வரை இதே நிலை நீடித்தது. 0-1 என்ற கணக்கில் முன்னிலையுடன் இரண்டாம் பாதியில் விளையாடியது கொலம்பியா. மறுப்பக்கம் உருகுவே அணி பதில் கோல் அடிக்கும் முயற்ச்சிகளை தீவிரப்படுத்தியது. எனினும், அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

    இதன் காரணமாக போட்டி முடிவில் 0-1 என்ற கணக்கில் கொலம்பியா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோத உள்ளன.

    கோப்பா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன. முன்னதாக ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கனடா மற்றும் உருகுவே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மூன்றாவது இடம் பிடிக்கும்.

    • தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.
    • கிப்ஸ் பற்றி விராட் கோலி பேசிய அந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    2008 ஆம் ஆண்டு 19 வயதிற்குப்பட்டோருக்கான உலகக்கோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.

    அப்போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிப்ஸ் தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார்.

    கிப்ஸ் பற்றி விராட் கோலி பேசிய அந்த பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த வீடியோ குறித்து தென்னாபிரிக்க வீரர் கிப்ஸ் இடம் கேள்வி எழுப்பட்டபோது.

    அதற்கு பதில் அளித்த அவர், கோலியின் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பலரும் என்னை டேக் செய்கிறார்கள். அப்போது தன அந்த வீடியோவை நான் பார்த்தேன். எனக்கு அது இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். சர்வதேச கிரிக்கெட்டில் அவருடைய சிறப்பான விளையாட்டால் அவருக்கு சிறப்பான மரியாதையை கிடைத்துள்ளது.

    குறிப்பாக ஒருநாள் கிரிக்கெ போட்டியின் சேஸிங்கில் ரன்களை துரத்தி வெற்றி பெறுவதில் அவர் காட்டும் உத்வேகம் தான் மற்ற வீரர்களை விட கோலியை தனித்துவமானவராக காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது பி.சி.சி.ஐ.
    • இந்திய அணி வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

    டி20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடந்தது. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    இதையடுத்து டி20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணி, ஊழியர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் என 42 பேர் கொண்ட குழுவுக்கு 125 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது பி.சி.சி.ஐ.

    இதில், இந்திய அணி வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த பட்டியலில் ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்களும் உள்ளனர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ரூ.5 கோடியும், அவரது பயிற்சியாளர் ஊழியர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. பிசியோ, த்ரோ டவுன் நிபுணர்கள் போன்றவர்களுக்கு தலா ரூ. 2 கோடியும், தேர்வாளர்களுக்கு தலா ரூ.1 கோடி என பரிசு தொகை பிரித்து வழங்கப்பட்டது.

    இந்நிலையில், தனக்கு மற்றவர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் எனவும், 2.5 கோடி ரூபாயே போதும் என ராகுல் டிராவிட் பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, ராகுல் தனது மற்ற துணை ஊழியர்களுக்கு வழங்கிய அதே பரிசு தொகையை (ரூ. 2.5 கோடி) விரும்பினார். அவரது உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

    ராகுல் டிராவிட்டின் இந்த பெருந்தன்மையை பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இதுதான் ஒரு மனிதனின் அடையாளம். இதை தான் எல்லாரும் ரோல் மாடல் என்று அழைக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது.
    • பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் அடித்தார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது.

     


    முதல் பாதி போட்டி முடிவில் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இதன் மூலம் போட்டி இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன.

    போட்டியின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடித்து வெற்றி பெறும் முனைப்பில் விளையாடினர். மாற்று வீரராக களமிறங்கிய ஒல்லி வேட்கின்ஸ் போட்டியின் 89-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    போட்டி முடிவில் நெதர்லாந்து வீரர்கள் மற்றொரு கோலை அடிக்க முடியாமல் தவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

    • முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது.
    • ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். திருப்பூர் அணி தரப்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி சேப்பாக் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மற்ற வீரர்கள் ஒருபுறம் தங்களது விக்கெட்டை பறிகொடுக்க இன்னொருபுறம் திருப்பூர் வீரர் கணேஷ் சேப்பாக் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து கொண்டிருந்தார்.

    ஆனாலும் இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிரடியாக விளையாடிய கணேஷ் 35 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். சேப்பாக் அணி தரப்பில் கணேசன் பெரியசாமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இப்போட்டியில் 67 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட ப்ரதோஷ் ரஞ்சன் ஆட்டநாடகனாக தேர்நதெடுக்கப்பட்டார்.

    முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.

    • ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார்.
    • கம்பீர் மூன்றரை ஆண்டுகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மும்பை :

    டி20 உலக கோப்பையுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவி காலம் முடிவடைந்தது. அது மட்டுமல்லாமல் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, பில்டிங் பயிற்சியாளர் தீலிப் ஆகியோரின் காலமும் முடிவடைந்துவிட்டது.

    இதனையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினார். இந்த சம்பளத்தை விட கூடுதலாக தமக்கு வேண்டும் என கம்பீர் கேட்டு இருக்கிறார். இதனால்தான் அவரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் கவுதம் கம்பீருக்கு எவ்வளவு சம்பளம் மட்டும் சலுகைகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அவருக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடியை விட அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் சென்றால் நாள் ஒன்றுக்கு தினப்படியாக ரூ. 21 ஆயிரம் வழங்கபட உள்ளது.

    இதை தவிர வெளிநாட்டிற்கு சென்றால் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதியும் மற்றும் சலவை செலவுகள் ஆகியவற்றிற்கும் அலவன்ஸ் வழங்கப்படுகிறது. கம்பீர் மூன்றரை ஆண்டுகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய இந்தியா 182 ரன்கள் குவித்தது.
    • கேப்டன் சுப்மன் கில் அரை சதம் கடந்தார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 39 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தத்தளித்தது. அடுத்து ஆடிய டியான் மியர்ஸ் - கிளைவ் மடாண்டே ஜோடி பொறுப்புடன் ஆடியது. டியான் மியர்ஸ் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டி வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி பெற்றது.

    பாகிஸ்தான் 142 வெற்றியுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து 111 வெற்றியுடன் 3வது இடத்திலும் உள்ளது.

    ×