என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்த ஸ்டான்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.
    • நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது எப்போதும் நிலைத்து நிற்கப்போகிறது.

    மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.

    மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் வான்கடே மைதானம் குறித்த நினைவுகளை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    ரெயிலில் இவ்வழியாக செல்லும் போதெல்லாம் வான்கடே மைதானத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே பயணித்த நாட்களை நினைவுகூர்கிறேன். இந்த ஸ்டான்ட் மிகவும் ஸ்பெஷல். நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது எப்போதும் நிலைத்து நிற்கப்போகிறது.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு வருகிற 19-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • கேப்டன் பதவிக்கான போட்டியில் வேகப்பந்து வீரர் பும்ரா, தொடக்க வீரர் சுப்மன்கில் ஆகியோர் இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகிய 3 சீனியர்கள் இல்லாமல் முதல் முறையாக இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது. அஸ்வின் ஆஸ்திரேலியா பயணத்தில் பாதியில் ஓய்வு முடிவை அறிவித்தார். ஐ.பி.எல். போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சமீபத்தில் ஓய்வு முடிவை அறிவித்தனர்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு வருகிற 19-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு கூடி இந்திய வீரர்களை அறிவிக்கப்படுகிறது.

    ரோகித் சர்மாவின் ஓய்வால் புதிய டெஸ்ட் கேப்டனாக யார் தேர்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கேப்டன் பதவிக்கான போட்டியில் வேகப்பந்து வீரர் பும்ரா, தொடக்க வீரர் சுப்மன்கில் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் சுப்மன்கில்லுக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    பந்து வீச்சாளரான பும்ராவால் 5 டெஸ்டுக்கு கேப்டனாக பணியாற்றுவது கடினமானது. இதனால் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு சுப்மன்கில்லாக இருக்கிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்மன் கில்லை பயிற்சியாளர் காம்பீர் சந்தித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுப்மன்கில் கேப்டனாக தேர்வு செய்யப்படவே அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அவர் 3-வது வரிசையில் விளையாடலாம்.

    சுப்மன்கில்லும், ஜெய்ஷ்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். விராட் கோலியின் இடமான 4-வது வரிசையில் கே.எல். ராகுல் விளையாடுவார்.

    நிதிஷ்குமார் ரெட்டி, ஈஸ்வரன், ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் தேர்வுக்கான வாய்ப்பில் இருக்கிறார்கள். சுழற்பந்து வீரர்கள் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் தேர்வு பெறலாம்.

    • போர் சூழல் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டபோது பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பி விட்டனர்.
    • மீண்டும் ஐபிஎல் போட்டி இன்று தொடங்குகிறது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தால் இந்தப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். கொல்கத்தா தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    போர் சூழல் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டபோது பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பி விட்டனர். அவர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்குள் மீண்டும் திரும்ப தயக்கம் காட்டினார்கள். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்த அழுத்தம் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.

    அதன்படி 57 வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் ஆடுகிறார்கள். மும்பை அணியில் 8 பேரும், குஜராத், பெங்களூரு தலா 7, கொல்கத்தா, ராஜஸ்தான் தலா 6, பஞ்சாப், ஐதராபாத், லக்னோ தலா 5, டெல்லி, சென்னை தலா 4 பேரும் ஐ.பி.எல்.லில் விளையாட இந்தியாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

    இவர்களில் சிலர் தங்களது நாடுக்கான போட்டியில் பங்கேற்பதால் பிளே ஆப் சுற்றில் ஆட மாட்டார்கள்.

    ஸ்டார்க், ஹசில்வுட், ஜோஸ் இங்கிலீஷ், ஸ்டோய்னிஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரண் உள்ளிட்ட சில வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.லில் மீண்டும் ஆடவில்லை.

    மாற்று வீரர்களாக ஒப்பந்தமான பேர்ஸ்டோவ், முஷ்தாபிசுர் ரகுமான், குசால் மெண்டிஸ், ஜேமிசன், ரிச்சர்டு கிளீசன், வில் ஓ ரூர்க் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் ஆடுகிறார்கள்.

    • ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.
    • 90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.

    தோகா:

    16-வது டைமண்ட் லீக் தடகள போட்டி கடந்த 26-ந் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 28-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. 15 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 3-வது சுற்று கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று நடைபெற்றது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.

    அவர் முதல் முறையாக 90 மீட்டருக்கு மேல் எறிந்து புதிய வரலாறு நிகழ்த்தினார். இதற்கு முன்பு 2022 ஸ்டாக் ஹோம் டைமன்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் தூரம் எறிந்ததே அவரது சிறப்பான நிலையாக இருந்தது.

    90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இதற்கு முன்பு இந்த இலக்கை எட்டிய மற்ற இரண்டு ஆசிய வீரர்கள் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (92.97 மீ.) மற்றும் சீன தைபேயின் சாவோ-சுன் செங் (91.36 மீ.) ஆவார்கள். சர்வதேச அளவில் 25-வது வீரர் ஆவார்.

    90.23 மீட்டர் எறிந்தாலும் நீரஜ் சோப்ராவால் 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.64 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜெனோ கிஷோர் 78.60 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடத்தை பிடித்தார்.

    புதிய சாதனை குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:-

    90 மீட்டரை தாண்டியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது ஒரு சிறந்த அனுபவமாகும். பயிற்சியாளர் 90 மீட்டர் இலக்கை எட்ட முடியும் என்று என்னிடம் கூறினார். இந்த இலக்கை தொட எனக்கு காற்று உதவியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    27 வயதான நீரஜ் சோப்ரா 2 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கப் பதக்கமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளிப் பதக்கமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய சாதனை நிகழ்த்திய நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    இது ஒரு அற்புதமான சாதனை. தோகா டைமன்ட் 'லீக்' போட்டியில் 90 மீட்டரை தாண்டி எறிந்ததற்காகவும், தனது சிறந்த நிலையை எட்டியதற்காகவும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தின் விளைவாகும். அவரால் இந்தியா மகிழ்ச்சி அடைந்து பெருமை கொள்கிறது.

    இவ்வாறு மோடி அதில் தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் தொடரின் மூலம் அவர்களுக்கு கேப்டனாக அனுபவம் உள்ளது.
    • அவர்கள் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

    இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன.

    இந்நிலையில் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அனுபவம் வாய்ந்தவர் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் யாரையேனும் கேப்டன் பதவிக்காக தயார்படுத்த விரும்பினால், நிச்சயம் அது சுப்மன் கில் என்று தான் நான் கூறுவேன். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. அவர் தற்போது 25, 26 வயது தான் ஆகிறது. அதனால் அவருக்கு தேவையான நேரம் உள்ளது. மேலும் அவருடன் ரிஷப் பண்டும் உள்ளார்.

    அவர்களுக்கு கேப்டன்களாக அனுபவம் உள்ளது. இப்போது அவர்கள் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சுப்மனின் சிறிய அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிகிறது. மேலும் அவர் மிகவும் அமைதியானவர். அவருக்கு எல்லா குணங்களும் உள்ளன.

    ஆனால் அனைவரும் அவர் வெளிநாடுகளில் ரன்களைச் சேர்க்கவில்லை என்று கூறுவது எனக்கு தெரியும். மேலும் ஒவ்வொரு முறையும் இந்த விமர்சனம் எழுந்து வருகிறது.

    சில நேரங்களில் நான் அவர்களிடம், நீங்கள் வெளிநாட்டில் எவ்வளவு ரன்கள் குவித்தீரிகள் என்ற கேள்வியை கேட்பேன். அதனால் வெளிநாடு, வெளிநாடு என்று கூறாமல் அவரை விளையாட அனுமதிக்க வேண்டும். மேலும், இந்த சுற்றுப்பயணங்களில் ஒன்றில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    என்று ரவி சாஸ்திரி கூறினார்.

    • இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன.
    • சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன.

    பெங்களூரு:

    திரில், பரபரப்பு என சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் திடீரென ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. மீண்டும் அதே உத்வேகத்துடன் இன்று தொடங்கினாலும் ஆட்டம் முழுவீச்சில் சூடுபிடிக்க சில நாட்கள் ஆகலாம். மேலும் முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிக்காக கடைசி கட்டத்தில் கிளம்புவது அணிகளின் சரியான கலவையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதை எல்லாம் கணக்கு போட்டே சில அணிகள் தற்காலிகமாக மாற்று வீரர்களை சேர்த்து வியூகங்களை தீட்டுகின்றன.

    இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. 13 லீக் மட்டுமே மிஞ்சியுள்ளது. ஆனால் இன்னும் எந்த அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) உறுதி செய்யவில்லை. முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன. மற்ற 7 அணிகள் பிளே-ஆப் சுற்றின் 4 இடத்துக்கு மல்லுக்கட்டுகின்றன.

    புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி காணும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.

    3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் தோற்கும் அணி மூட்டையை கட்டும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சந்திக்கும். இந்த ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இனி பிளே-ஆப் சுற்றை எட்டுவதற்கு வாய்ப்புள்ள அணிகள் எவை என்பதை பார்க்கலாம்.

    குஜராத் டைட்டன்ஸ் (16 புள்ளி): புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் குஜராத் அணிக்கு மீதமுள்ள 3 ஆட்டங்களில் (டெல்லி, லக்னோ, சென்னைக்கு எதிராக) ஒன்றில் வென்றால் போதும். அடுத்து சுற்றை எட்டி விடும். மூன்றில் தோற்றால் கூட மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் வாய்ப்பு உண்டு. இதில் உள்ளூரில் இரு ஆட்டங்களில் ஆடுவது நிச்சயம் அனுகூலமாக இருக்கும். ஏனெனில் இந்த சீசனில் ஆமதாபாத்தில் ஆடிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றிருக்கிறது.

    பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (16 புள்ளி): குஜராத் போன்றே பெங்களூரு அணியும் பிளே-ஆப் சுற்றை எட்டும் தூரத்தில் நிற்கிறது. அந்த அணிக்கு தேவை ஒரு வெற்றி. கொல்கத்தா, ஐதராபாத், லக்னோ அணிகளிடம் மோத வேண்டி இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருப்பதால் பெங்களூரு அணி அடுத்த சுற்றை அடைவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது.

    பஞ்சாப் கிங்ஸ் (15 புள்ளி): தற்போதைய சூழலில் மீதமுள்ள 3 ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி, மும்பைக்கு எதிராக) பஞ்சாப் அணி 2-ல் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவை எதிர்நோக்கி இருக்க வேண்டும். மூன்றிலும் தோற்றால் ஏறக்குறைய அவுட் தான். 2014-ம் ஆண்டுக்கு பிறகு பஞ்சாப் அணி பிளே-ஆப் சுற்றுக்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை இந்தியன்ஸ் (14 புள்ளி): ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி இரு லீக்கில் டெல்லி, பஞ்சாப்பை பதம் பார்த்தால் கம்பீரமாக பிளே-ஆப் சுற்றுக்குள் பயணிக்கலாம். ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் தயவை தேட வேண்டி இருக்கும். ரன்ரேட்டில் (+1.156) நல்ல நிலையில் இருப்பது பலமாகும். இரண்டிலும் தோற்றால் அத்துடன் வெளியேற வேண்டியது தான்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் (13 புள்ளி): கடைசி 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ள அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி எழுச்சி பெற்றால் தான் தப்பிக்க முடியும். எஞ்சிய 3 ஆட்டத்திலும் (குஜராத், மும்பை, பஞ்சாப்புக்கு எதிராக) வாகை சூடினால் பிளே-ஆப் கனவு நனவாகும். மாறாக இரண்டில் மட்டும் வெற்றி கிடைத்தால் 17 புள்ளியை அடையும். அப்போது மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (11 புள்ளி): நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு நூலிழை அளவுக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது. முதலில் அந்த அணி தனது கடைசி இரு லீக்கிலும் (பெங்களூரு, ஐதராபாத்துக்கு எதிராக) வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு மும்பை அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் மண்ணை கவ்வ வேண்டும். டெல்லி அணி 3 ஆட்டங்களில் 2-ல் அடங்க வேண்டும். லக்னோ அணி 3-ல் ஒன்றில் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் கொல்கத்தா, டெல்லி அணிகள் தலா 15 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு போட்டியிடும். அப்போது ரன்ரேட்டில் வலுவாக இருந்தால் கொல்கத்தாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (10 புள்ளி): உத்வேகத்தை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கும் லக்னோ அணி கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை தழுவியது. தங்களுக்குரிய இறுதி 3 ஆட்டங்களிலும் (ஐதராபாத், குஜராத், பெங்களூருவுக்கு எதிராக) வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும். அதுவும் மற்ற அணிகளின் முடிவுகள் கைகொடுக்கவேண்டும். ஒன்றில் தோற்றாலும் அம்பேல் தான்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • கொல்கத்தா 20 ஆட்டங்களிலும், பெங்களூரு 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    நடப்பு தொடரில் இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெறவில்லை. 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. 4 பிளே-ஆப் இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததால் இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் கடந்த 8-ந்தேதி இரவு நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டம் (58-வது லீக் ஆட்டம்) பாதியில் கைவிடப்பட்டது. அத்துடன் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் தள்ளிவைக்கப்படுவதாக அடுத்த நாளில் அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, இந்தியா- பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமை உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் எஞ்சிய ஐ.பி.எல். போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறும் என்று கடந்த 12-ந் தேதி அறிவித்தது. எஞ்சிய ஆட்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணையும் வெளியிடப்பட்டது.

    இதன்படி பாதியில் ரத்து செய்யப்பட்ட பஞ்சாப்- டெல்லி அணிகள் இடையிலான மோதல் உள்ளிட்ட 13 லீக் ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. லீக் சுற்று வருகிற 27-ந் தேதி நிறைவு பெறுகிறது. முதலாவது தகுதி சுற்று 29-ந்தேதியும், வெளியேற்றுதல் சுற்று 30-ந்தேதியும், இரண்டாவது தகுதி சுற்று ஜூன் 1-ந் தேதியும், இறுதிப்போட்டி ஜூன் 3-ந்தேதியும் நடைபெறுகிறது. 'பிளே-ஆப்' சுற்று நடைபெறும் இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், 8 நாள் இடைவெளிக்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையின்படி 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

    ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்து வீறுநடை போடுகிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.

    சென்னைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தின் போது கைவிரலில் காயம் அடைந்த கேப்டன் ரஜத் படிதார் முழு உடல் தகுதியை எட்டி இருப்பது பெங்களூரு அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். போட்டி ஒத்திவைக்கப்படாமல் இருந்திருந்தால் அவர் இரண்டு ஆட்டங்களை தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். அதே சமயம் போட்டி தள்ளிவைக்கபட்டதால் தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்தியா வரவில்லை. 18 விக்கெட்டுகள் (10 ஆட்டம்) வீழ்த்திய அவர் ஒதுங்கி இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாகும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (505 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் ஆடும் முதல் ஆட்டம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கேப்டன் ரஜத் படிதார், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், லுங்கி இங்கிடி, சுயாஷ் ஷர்மா பலம் சேர்க்கின்றனர்.

    கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நல்ல ரன்-ரேட்டுடன் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான கதவு திறக்கும்.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வெங்கடேஷ் அய்யரின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. ஆல்-ரவுண்டர்களாக சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் அவ்வப்போது கைகொடுக்கிறார்கள். பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்திஷ் ராணா மிரட்டக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி (இங்கிலாந்து) விலகி இருப்பது பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த பெங்களூரு அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக நுழைய தீவிரம் காட்டும். அதேநேரத்தில் பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை இழக்காமல் இருக்க கொல்கத்தா அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 20 ஆட்டங்களிலும், பெங்களூரு 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    பெங்களூருவில் நேற்று மழை பெய்தது. இதேபோல் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டால் கொல்கத்தாவின் அடுத்த சுற்று கனவு தகர்ந்து விடும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல் அல்லது மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.

    கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி அல்லது மனிஷ் பாண்டே ,ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அன்ரிச் நோர்டியா அல்லது ஸ்பென்சர் ஜான்சன்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் பயணம்செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    இதற்கிடையே, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த 7-ம் தேதி ஓய்வு பெற்றார். இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட இருக்கிறார். சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது யூ டியூப் சேனலில் பேசியதாவது:

    இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் சுப்மன் கில் என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பதவிக்கு நல்ல தேர்வாக இருப்பார். அதே நேரத்தில் இந்திய அணியில் மிகவும் அனுபவமிக்க வீரரான ரவீந்திர ஜடேஜாவை மறந்து விடக்கூடாது. அவரது பெயரும் கேப்டன்ஷிப்புக்கான பரிசீலனையில் இருக்க வேண்டும்.

    நீங்கள் ஒரு இளம் வீரரை கேப்டனாக உருவாக்க நினைத்தால், அவரை முதலில் 2 ஆண்டுகள் துணை கேப்டனாக நியமித்து பயிற்சி அளியுங்கள். அதன்பிறகு அவரிடம் முழு நேர கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கலாம்.

    அடுத்த 2 ஆண்டுக்கு ஜடேஜாவை கேப்டனாக நியமித்து அவரது தலைமையின் கீழ் கில்லுக்கு பயிற்சி அளிக்கலாம். ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று நம்புகிறேன். இதனால் கில்லுக்கு கவுரவம் கிடைத்தால் அது அவர் கேப்டனாக மாறுவதற்கு எளிதாக இருக்கும்.

    ஐ.பி.எல். தொடரில் ஒரு சீசனில் நன்றாக செயல்பட்டதை வைத்துக் கொண்டு டெஸ்ட் போட்டியில் கேப்டன்ஷிப்பை செய்து விட முடியாது. டெஸ்ட் கேப்டன் உள்ளூர் முதல் தர போட்டியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய டாமி பால் முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சின்னர் 6-0 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சின்னர் 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.

    3 மாத தடைக்குப் பிறகு களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஜானிக் சின்னர் இறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டயமண்ட் லீக் தடகளப் போட்டி கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.
    • பாருல் சவுத்ரி 3000 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்தார்.

    தோஹா:

    டயமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடந்து வருகிறது. இதன் 3-வது சுற்று கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.

    இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என 4 பேர் களமிறங்கினர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் பாருல் சவுத்ரி பெண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் 9:13:39 நிமிடத்தில் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.

    இந்தப் போட்டியில் பாருல் சவுத்ரி தேசிய சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல், ஆறாவது இடத்தையும் பிடித்தார்.

    நடப்பு ஆண்டின் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (3000 மீட்டர்) பாருல் சவுத்ரி போட்டியிடுவார்.

    • டயமண்ட் லீக் தடகள போட்டி தோஹாவில் நடந்து வருகிறது.
    • நீரஜ் சோப்ரா 90 மீட்டருக்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்தார்.

    தோஹா:

    டயமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடந்து வருகிறது. இதன் 3-வது சுற்று கத்தாரின் தோஹாவில் நடக்கிறது.

    இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என 4 பேர் களமிறங்குகின்றனர்.

    இந்நிலையில், இன்று நடந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். போட்டியின் முடிவில் அவர் 2வது இடம் பிடித்தார்.

    ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடம் பிடித்தார்.

    நீரஜ் சோப்ரா இதற்கு முன் 2022 ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் போட்டியில் 89.94 மீ தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்தது. 90 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ரா 3வது ஆசியவீரர் என்ற பெருமை பெற்றார்.

    புதிய சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறார்.

    ×