என் மலர்
விளையாட்டு
- ஐ.பி.எல். தொடரில் எனது கடைசி ஆண்டு என யாருக்கும் தெரியாது என்று தோனி தெரிவித்தார்.
- ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை.
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பு பேசிய சி.எஸ்.கே. அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி, "எனக்கு இப்போது 43 வயது ஆகிறது. நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடிவிட்டேன். ஐ.பி.எல். தொடரில் எனது கடைசி ஆண்டு என யாருக்கும் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். இந்த ஐ.பி.எல். முடிந்த உடன் அடுத்த 8 மாதத்துக்கு எனது உடல் இந்த அழுத்தத்தை தாங்குகிறதா என்பதை பார்க்க வேண்டும். ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் கிடைக்கும் ரசிகர்கள் அன்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
43 வயதான தோனி, ஓய்வு பெறுவது குறித்து எந்தவொரு தகவலையும் இன்னும் அணி நிர்வாகத்திடம் கூறவில்லை எனக் கூறப்படுகிறது
- டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் உள்ளார்.
- குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.
டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 13 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று கம்பீரமாக தொடங்கிய டெல்லி அணி கடைசி 5 ஆட்டங்களில் 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் தடுமாறி வருகிறது. பஞ்சாப்புக்கு எதிரான அந்த அணியின் முந்தைய ஆட்டம் போர் பதற்றம் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. டெல்லி அணி எஞ்சிய 3 ஆட்டத்திலும் வெற்றி வாகை சூடினால் தான் அடுத்த சுற்றுக்குள் சிக்கலின்றி அடியெடுத்து வைக்க முடியும். மாறாக இரண்டில் வெற்றி பெற்றால் அடுத்த அணிகளின் முடிவுக்காக காத்து இருக்க வேண்டியது வரும்.
டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் உள்ளார். அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பாப் டுபிளிஸ்சிஸ், அஷூதோஷ் ஷர்மா, கருண் நாயர் அவ்வப்போது பங்களிக்கின்றனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம், முகேஷ் குமார், கேப்டன் அக்ஷர் பட்டேல் பலம் சேர்க்கின்றனர். போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் தாயகம் சென்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் திரும்பாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும். அவர் 14 விக்கெட்டுகள் (11 ஆட்டங்கள்) வீழ்த்தி இருந்தார்.
குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும்.
குஜராத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. பேட்டிங்கில் சாய் சுதர்சன் (509 ரன்), கேப்டன் சுப்மன் கில் (508), ஜோஸ் பட்லர் (500 ரன்) அசத்தி வருகின்றனர். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (20 விக்கெட்), முகமது சிராஜ் (15), சாய் கிஷோர் (14), ரஷித் கான் மிரட்டக்கூடியவர்கள்.
டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 204 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி கூடுதல் நம்பிக்கையும் களம் காண்பதுடன், அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய முனைப்பு காட்டும். கடைசி 2 ஆட்டங்களில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தடுமாறிய டெல்லி அணி எழுச்சி பெற்று எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் குஜராத் அணியின் சவாலை சமாளிக்க முடியும்.
- புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
- நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-கேகேஆர் இடையிலான போட்டி மழையினால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
இன்று பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மற்றும் டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் பஞ்சாப் அல்லது டெல்லி அணிகள் தோல்வி அடைந்தால், பெங்களூரு முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்று விடும்.
பெங்களூரு முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் இன்றைய போட்டிகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களை தவறவிட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் உடல் தகுதியை எட்டி களம் திரும்புவது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
ஜெய்ப்பூர்:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மாலை நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது.
ஏற்கனவே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 9 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் ராஜஸ்தான் அணி எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி அதிரடியாக ஆடி எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கும். நடப்பு தொடரில் உள்ளூரில் நடைபெறும் கடைசி ஆட்டமான இதனை வெற்றியுடன் நிறைவு செய்ய அந்த அணி ஆர்வம் காட்டும் என்பதில் ஐயமில்லை.
ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (473 ரன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், நிதிஷ் ராணா, ஹெட்மயர், 14 வயது அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியும், பந்து வீச்சில் தீக்ஷனா, ஹசரங்கா, சந்தீப் ஷர்மாவும் நம்பிக்கை அளிக்கின்றனர். 11 விக்கெட்டுகள் (12 ஆட்டம்) வீழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) எஞ்சிய போட்டியில் இருந்து விலகி இருப்பது அணிக்கு பின்னடைவாகும். அதேநேரத்தில் காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களை தவறவிட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் உடல் தகுதியை எட்டி களம் திரும்புவது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) 15 புள்ளிகள் எடுத்துள்ளது. அந்த அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ஒன்றில் மட்டும் வெற்றி கண்டால் மற்ற அணிகளின் முடிவை எதிர்நோக்கி இருக்க வேண்டும்.
தர்மசாலாவில் கடந்த 8-ந் தேதி இரவு நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து இருந்த போது, எல்லைப்பகுதியில் நடந்த தாக்குதல் எதிரொலியாக ஸ்டேடியத்தில் மின்தடையால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அதன் பிறகு பஞ்சாப் அணி களம் இறங்கும் முதல் ஆட்டம் இதுவாகும்.
பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் (437 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (405), பிரியான்ஷ் ஆர்யா, ஷசாங் சிங், நேஹல் வதேராவும் பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிராரும் வலுசேர்க்கின்றனர்.
ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்ட பஞ்சாப் அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன், அடுத்த சுற்று வாய்ப்பை அதிகரிக்கவும் தீவிரம் காட்டும். முந்தைய வெற்றியால் நம்பிக்கையுடன் உள்ள ராஜஸ்தான் அணி ஆறுதல் வெற்றிக்காகவும், புள்ளி பட்டியலில் ஏற்றம் காணவும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் 12 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 17 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ராஜஸ்தான்: வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, நன்ரே பர்கர், ஆகாஷ் மத்வால்.
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மிட்ச் ஓவென், நேஹல் வதேரா, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், ஷசாங் சிங், ஹர்பிரீத் பிரார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், கைல் ஜாமிசன்.
மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- பெங்களூருவில் மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
- தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.
பெங்களூரு:
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-கேகேஆர் இடையிலான போட்டி இன்று தொடங்க இருந்தது. ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- இறுதிச்சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.
இதில் பவுலினி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
40 ஆண்டுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கொல்கத்தா ஈடன் கார்டனில் இறுதிப் போட்டி நடைபெறும் என தொடக்கத்தில் அறிவிப்பு.
- தற்போது போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளதால் பிளேஆஃப் போட்டிக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. லீக் ஆட்டங்கள் முடிவடைய இருந்த நிலையில் பிளேஆஃப் சுற்றின் குவாலிஃபையர்-1, எலிமினேட்டர் ஆகிய போட்டிகள் ஐதராபாத்திலும், குவாலிஃபையர்-2, இறுதிப் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் ஏற்பட கடந்த 8ஆம் தேதி ஐபிஎல் போட்டிக்கு தடை ஏற்பட்டது. தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் 2025 சீசன் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. 10ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் (17ஆம் தேதி) எஞ்சிய போட்டிகள் நடைபெறும் என போட்டி அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால் பிளேஆஃப் சுற்று போட்டிகள் எங்கு நடத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கொல்கத்தாவில்தான் இறுதிப் போட்டி நடைபெறும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். பிசிசிஐ-யிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இறுதிப் போட்டியை மாற்றுவது அவ்வளவு எளிதானதா?. இது ஈடன் கார்டனின் பிளேஆஃப் போட்டிகள். எல்லாம் சரி செய்யப்படும். எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் உதவி செய்யாது. பெங்கால் கிரிக்கெட் சங்கத்துடன் பிசிசிஐ மிகச் சிறந்த நட்புறவு கொண்டுள்ளது" என்றார்.
கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை கொல்கத்தா ஈடன் கார்டன் பெற்றது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 8ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது.
- பின்னர் 17ஆம் தேதி (இன்று) மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8ஆம் தேதி டெல்லி- பஞ்சாப் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ஒருவாரம் கழித்து (மே 17ஆம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி- கேகேஆர் இடையிலான போட்டியுடன் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குகிறது.
ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 2-ஆவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6ஆவது இடத்திலும் உள்ளது.
- அசாம் மாநிலத்தில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது.
- தற்போது புதிய மைதானம் கட்டப்பட்டு வருகிறது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வசதிகளுடன் கவுகாத்தியின் புறநகர் பகுதியான அமின்கானில் புதிய கிரிக்கெட் மைதானம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தயாராகும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், விளையாட்டு மீது ஆர்வமுள்ளவர்களுக்கு அசாம் மநில அரசு கட்டமைப்புகள் மற்றும் போட்டிக்கான தளத்தை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தள்ளார்.
கவுகாத்தியின் சருசாஜாய் மற்றும் பார்சபாரா ஆகிய இரண்டு இடங்களில் தலா ஒரு மிகப்பெரிய மைதானங்கள் உள்ளன. தற்போது புதிதாக அமையவிருக்கும் மைதானம் 20 ஆயிரம் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கும் வகையில் வருகிற பிப்ரவரி மாதம் திறக்கப்படும்.
இந்த மைதானம் அனைத்து நவீன வசதிகள் கொண்டதாக உருவாகி வருகிறது. பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இந்த மைதானத்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நடத்த முடியும்.
சருசாஜாய் மைதானத்தில் தடகள டிராக், கால்பந்து மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. பார்சபாரா மைதானம் கிரிக்கெட் மைதானமாகும். வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ஒரேயொரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் இதுவாகும்.
- சூப்பர் பெட் கிளாசிக் செஸ் போட்டி ருமேனியா நாட்டில் நடைபெற்றது.
- இந்த தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
புகரெஸ்ட்:
சூப்பர் பெட் கிளாசிக் செஸ் போட்டி ருமேனியா நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா,பிரான்சின் மாக்சிம் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா பிரூஸ்ஜா ஆகியோருடன் சமநிலையில் இருந்தார்.
இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல் 2 டை பிரேக்கர் போட்டிகள் சமனில் முடிவடைந்த நிலையில் 3-வது டை பிரேக்கரில் வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ருமேனியா சூப்பர் பெட் செஸ் கிளாசிக் தொடரில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அவரது அசாத்திய திறமை வெளிப்பட்டது. செஸ் போட்டிகளில் இந்த அற்புதமான தருணத்தை தமிழ்நாடு கொண்டாடுகிறது என முதலமைச்சர் கூறினார்.
- ஆர்சிபி- கொல்கத்தா போட்டியில் மழை குறுக்கீட 50 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- இந்த போட்டியில் மழை வந்தாலும், கொல்கத்தா தோல்வி அடைந்தாலும் தொடரில் இருந்து வெளியேறி விடும்.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியா- பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, எஞ்சிய ஐ.பி.எல். போட்டி இன்று முதல் தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.
பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.
கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நல்ல ரன்-ரேட்டுடன் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான கதவு திறக்கும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் மழை குறுக்கீட 50 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்படி மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும்.
இதனால் கொல்கத்தா அணியின் பிளே ஆப் கனவு கலைந்துவிடும். அப்படி ஒரு புள்ளி எடுக்கப்பட்டால் நடப்பு தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கிட்டத்தட்ட ஆர்சிபி முன்னேறிவிடும்.
- ரோகித் ஸ்டாண்டை அவரது அப்பா, அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
- புதிய ஸ்டாண்டை திறக்கும் போது அருகில் இருந்த அவரது மனைவி ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட் திறக்கப்பட்ட போது மேடையில் இருந்த அவரது மனைவி கண்கலங்கினார். குறிப்பாக கண்ணீருடன் ரோகித் சர்மாவை ஒரு பார்வை பார்ப்பார். அதில் கணவன் மீதான மனைவியின் அன்பு வெளிப்பட்டதை பார்க்க முடிந்தது. மேலும் அவரது தாய், தந்தையும் ஆனந்த கண்ணீர் சிந்தினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இது குறித்து ரோகித் கூறியதாவது:-
எனக்கு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. இது ஒரு சிறந்த உணர்வு. நான் இன்னும் விளையாடும்போது இந்த மரியாதை அதை சிறப்பானதாக்குகிறது. இங்கு இருக்கும் பலருக்கு, குறிப்பாக என் குடும்பத்தினர், என் அம்மா, அப்பா, என் சகோதரர், அவரது மனைவி மற்றும் என் மனைவிக்கு முன்னால் இதைப் பெறுவது ஒரு பெரிய மரியாதை.
என ரோகித் சர்மா கூறினார்.






