என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025 - ராஜஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்குமா பஞ்சாப்? - இன்று மீண்டும் மோதல்
- காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களை தவறவிட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் உடல் தகுதியை எட்டி களம் திரும்புவது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
ஜெய்ப்பூர்:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மாலை நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது.
ஏற்கனவே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 9 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் ராஜஸ்தான் அணி எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி அதிரடியாக ஆடி எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கும். நடப்பு தொடரில் உள்ளூரில் நடைபெறும் கடைசி ஆட்டமான இதனை வெற்றியுடன் நிறைவு செய்ய அந்த அணி ஆர்வம் காட்டும் என்பதில் ஐயமில்லை.
ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (473 ரன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், நிதிஷ் ராணா, ஹெட்மயர், 14 வயது அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியும், பந்து வீச்சில் தீக்ஷனா, ஹசரங்கா, சந்தீப் ஷர்மாவும் நம்பிக்கை அளிக்கின்றனர். 11 விக்கெட்டுகள் (12 ஆட்டம்) வீழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) எஞ்சிய போட்டியில் இருந்து விலகி இருப்பது அணிக்கு பின்னடைவாகும். அதேநேரத்தில் காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களை தவறவிட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் உடல் தகுதியை எட்டி களம் திரும்புவது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) 15 புள்ளிகள் எடுத்துள்ளது. அந்த அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். ஒன்றில் மட்டும் வெற்றி கண்டால் மற்ற அணிகளின் முடிவை எதிர்நோக்கி இருக்க வேண்டும்.
தர்மசாலாவில் கடந்த 8-ந் தேதி இரவு நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து இருந்த போது, எல்லைப்பகுதியில் நடந்த தாக்குதல் எதிரொலியாக ஸ்டேடியத்தில் மின்தடையால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அதன் பிறகு பஞ்சாப் அணி களம் இறங்கும் முதல் ஆட்டம் இதுவாகும்.
பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் (437 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (405), பிரியான்ஷ் ஆர்யா, ஷசாங் சிங், நேஹல் வதேராவும் பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிராரும் வலுசேர்க்கின்றனர்.
ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்ட பஞ்சாப் அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன், அடுத்த சுற்று வாய்ப்பை அதிகரிக்கவும் தீவிரம் காட்டும். முந்தைய வெற்றியால் நம்பிக்கையுடன் உள்ள ராஜஸ்தான் அணி ஆறுதல் வெற்றிக்காகவும், புள்ளி பட்டியலில் ஏற்றம் காணவும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் 12 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 17 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ராஜஸ்தான்: வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, நன்ரே பர்கர், ஆகாஷ் மத்வால்.
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மிட்ச் ஓவென், நேஹல் வதேரா, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், ஷசாங் சிங், ஹர்பிரீத் பிரார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், கைல் ஜாமிசன்.
மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






