என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

பைனல் கொல்கத்தாவில்தான்..! மிகவும் நம்பிக்கையோடு இருப்பதாக சொல்கிறார் கங்குலி
- கொல்கத்தா ஈடன் கார்டனில் இறுதிப் போட்டி நடைபெறும் என தொடக்கத்தில் அறிவிப்பு.
- தற்போது போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளதால் பிளேஆஃப் போட்டிக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. லீக் ஆட்டங்கள் முடிவடைய இருந்த நிலையில் பிளேஆஃப் சுற்றின் குவாலிஃபையர்-1, எலிமினேட்டர் ஆகிய போட்டிகள் ஐதராபாத்திலும், குவாலிஃபையர்-2, இறுதிப் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் ஏற்பட கடந்த 8ஆம் தேதி ஐபிஎல் போட்டிக்கு தடை ஏற்பட்டது. தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் 2025 சீசன் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. 10ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் (17ஆம் தேதி) எஞ்சிய போட்டிகள் நடைபெறும் என போட்டி அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால் பிளேஆஃப் சுற்று போட்டிகள் எங்கு நடத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கொல்கத்தாவில்தான் இறுதிப் போட்டி நடைபெறும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். பிசிசிஐ-யிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இறுதிப் போட்டியை மாற்றுவது அவ்வளவு எளிதானதா?. இது ஈடன் கார்டனின் பிளேஆஃப் போட்டிகள். எல்லாம் சரி செய்யப்படும். எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் உதவி செய்யாது. பெங்கால் கிரிக்கெட் சங்கத்துடன் பிசிசிஐ மிகச் சிறந்த நட்புறவு கொண்டுள்ளது" என்றார்.
கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை கொல்கத்தா ஈடன் கார்டன் பெற்றது குறிப்பிடத்தக்கது.






