என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி 19-ந்தேதி தேர்வு?
- இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு வருகிற 19-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கேப்டன் பதவிக்கான போட்டியில் வேகப்பந்து வீரர் பும்ரா, தொடக்க வீரர் சுப்மன்கில் ஆகியோர் இருக்கிறார்கள்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது.
ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகிய 3 சீனியர்கள் இல்லாமல் முதல் முறையாக இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது. அஸ்வின் ஆஸ்திரேலியா பயணத்தில் பாதியில் ஓய்வு முடிவை அறிவித்தார். ஐ.பி.எல். போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சமீபத்தில் ஓய்வு முடிவை அறிவித்தனர்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு வருகிற 19-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு கூடி இந்திய வீரர்களை அறிவிக்கப்படுகிறது.
ரோகித் சர்மாவின் ஓய்வால் புதிய டெஸ்ட் கேப்டனாக யார் தேர்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கேப்டன் பதவிக்கான போட்டியில் வேகப்பந்து வீரர் பும்ரா, தொடக்க வீரர் சுப்மன்கில் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் சுப்மன்கில்லுக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
பந்து வீச்சாளரான பும்ராவால் 5 டெஸ்டுக்கு கேப்டனாக பணியாற்றுவது கடினமானது. இதனால் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு சுப்மன்கில்லாக இருக்கிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்மன் கில்லை பயிற்சியாளர் காம்பீர் சந்தித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுப்மன்கில் கேப்டனாக தேர்வு செய்யப்படவே அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அவர் 3-வது வரிசையில் விளையாடலாம்.
சுப்மன்கில்லும், ஜெய்ஷ்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். விராட் கோலியின் இடமான 4-வது வரிசையில் கே.எல். ராகுல் விளையாடுவார்.
நிதிஷ்குமார் ரெட்டி, ஈஸ்வரன், ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் தேர்வுக்கான வாய்ப்பில் இருக்கிறார்கள். சுழற்பந்து வீரர்கள் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் தேர்வு பெறலாம்.






