என் மலர்
விளையாட்டு

90.23 மீட்டர் எறிந்து சாதனை: சொன்னதை செய்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
- ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.
- 90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
தோகா:
16-வது டைமண்ட் லீக் தடகள போட்டி கடந்த 26-ந் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 28-ந்தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. 15 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 3-வது சுற்று கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று நடைபெற்றது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.
அவர் முதல் முறையாக 90 மீட்டருக்கு மேல் எறிந்து புதிய வரலாறு நிகழ்த்தினார். இதற்கு முன்பு 2022 ஸ்டாக் ஹோம் டைமன்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் தூரம் எறிந்ததே அவரது சிறப்பான நிலையாக இருந்தது.
90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசிய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இதற்கு முன்பு இந்த இலக்கை எட்டிய மற்ற இரண்டு ஆசிய வீரர்கள் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (92.97 மீ.) மற்றும் சீன தைபேயின் சாவோ-சுன் செங் (91.36 மீ.) ஆவார்கள். சர்வதேச அளவில் 25-வது வீரர் ஆவார்.
90.23 மீட்டர் எறிந்தாலும் நீரஜ் சோப்ராவால் 2-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.64 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜெனோ கிஷோர் 78.60 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடத்தை பிடித்தார்.
புதிய சாதனை குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:-
90 மீட்டரை தாண்டியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது ஒரு சிறந்த அனுபவமாகும். பயிற்சியாளர் 90 மீட்டர் இலக்கை எட்ட முடியும் என்று என்னிடம் கூறினார். இந்த இலக்கை தொட எனக்கு காற்று உதவியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
27 வயதான நீரஜ் சோப்ரா 2 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தங்கப் பதக்கமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் (2024) வெள்ளிப் பதக்கமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சாதனை நிகழ்த்திய நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
இது ஒரு அற்புதமான சாதனை. தோகா டைமன்ட் 'லீக்' போட்டியில் 90 மீட்டரை தாண்டி எறிந்ததற்காகவும், தனது சிறந்த நிலையை எட்டியதற்காகவும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தின் விளைவாகும். அவரால் இந்தியா மகிழ்ச்சி அடைந்து பெருமை கொள்கிறது.
இவ்வாறு மோடி அதில் தெரிவித்துள்ளார்.