என் மலர்
விளையாட்டு
- இந்தியா- இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் 2 போட்டிகளில் மோதுகிறது.
- இந்த அணிக்கு கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் துணை கேப்டனாக துருவ் ஜூரலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ அணியும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.
இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் துணை கேப்டனாக துருவ் ஜூரலும் நியமிக்கப்பட்டுள்ளனர். ருதுராஜ், இஷான் கிஷன் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.
18 பேர் கொண்ட இந்திய ஏ அணி:-
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணை கேப்டன்)), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் காம்போஜ், ருதுராஜ், கான்போஜ், தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே, கலீல் அகமது.
- மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது.
மும்பை:
இந்தியா - பாகிஸ்தான் போர்ப்பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் நாளை தொடங்க தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் கலந்து கொண்டனர்.
அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. இவர்கள் 3 பேரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டன.
- ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று சொன்னால், நான் நிச்சயமாக 'முடியாது' என்று சொல்லி இருப்பேன்.
- பணமா? பாதுகாப்பா? என்ற கேள்வி வந்தால் பாதுகாப்பு தான் முக்கியம் என்பேன்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் இந்தியா செல்லக்கூடாது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரருமான மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என்னிடம் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று சொன்னால், நான் நிச்சயமாக 'முடியாது' என்று சொல்லி இருப்பேன். அது மிகவும் எளிதான முடிவாக இருந்திருக்கும். வாழ்க்கையும் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை. நமது சம்பளம் அல்ல. இது தனிப்பட்ட முடிவு. யாரையும் கட்டாயப்படுத்தியோ, அழுத்தத்தை உணர வைத்தோ மீண்டும் போய் விளையாட வேண்டும் எனச் சொல்ல முடியாது.
பணமா? பாதுகாப்பா? என்ற கேள்வி வந்தால் பாதுகாப்பு தான் முக்கியம் என்பேன். இது எனது தனிப்பட்ட முடிவு. எந்தவொரு வீரரும் ஐபிஎல் அல்லது பாகிஸ்தான் சூப்பர் லீகில் விளையாடியாக வேண்டுமென்ற அழுத்தத்தை எதிர்கொள்ள கூடாது.
மேலும், ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி ஜுன் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஒரு வார காலத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக வீரர்கள் தயாராக வேண்டி உள்ளது. அதையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
என ஜான்சன் கூறியுள்ளார்.
- மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நடப்பு ஐ.பி.எல். 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
சிட்னி:
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி அணி நிர்வாகத்திற்கு அவர் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற குறைந்தபட்சம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் முன்னணி வீரரான இவரது விலகல் டெல்லி அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
நடப்பு ஐ.பி.எல். 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 36 போட்டிகள் முடிவில் 85 புள்ளிகள் பெற்று முதலிடம்.
- ரியல் மாட்ரிட் 78 புள்ளிகள் வெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. முதலிடம் பிடிக்க வாய்ப்பில்லை.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் உள்ளிட்ட 20 முன்னணி கிளப் அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி லா லிகா டைட்டிலை வெல்லும்.
2024-25 சீசனின் 36-ஆவது போட்டியில் பார்சிலோனா இன்று அதிகாலை எஸ்பான்யோல் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பார்சிலோனா 2-0 என வெற்றி பெற்றது. லேமின் யாமல் 53ஆவது நிமிடத்திலும், ஃபெமின் லோபஸ் (90+6) கடைசி நேரத்திலும் கோல் அடித்தனர்.
இதன்மூலம் 36 போட்டிகளில் 27 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகள் மூலம் 85 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து லா லிகா கோப்பையை வென்றது. பார்சிலோனாவின் 28ஆவது லா லிகா கோப்பை இதுவாகும்.
ரியல் மாட்ரிட் 36 போட்டிகளில் 24 வெற்றி, தலா 6 டிரா மற்றும் தோல்வி மூலம் 78 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் பார்சிலோனா தோல்வி அடைந்து, ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றாலும் 84 புள்ளிகள்தான் பெற முடியும். இதனால் பார்சிலோனா 2024-25 சீசன் லா லிகா டைட்டிலை வென்றுள்ளது.
பார்சிலோனா கடைசி 5 போட்டிகளில் வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.
- 2022 மெகா ஏலத்தில் எடுப்பதாக அணி நிர்வாகம் கூறியது.
- ஆனால் ஏலத்தில் எடுக்காமல் காயத்திற்கான மாற்று வீரராக தேர்வு செய்தது.
ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஆர்சிபி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்து விடும்.
இந்த சீசனில் ரஜத் படிதார் 11 போட்டிகளில் 239 ரன்கள் அடித்துள்ளார். ஆர்சிபி அணி 2022 ஏலத்தின்போது தன்னை ஏலம் எடுப்பதாக உறுதி அளித்தது. ஆனால் ஏலம் எடுக்கவில்லை. காயம் காரணமாக ஒருவர் விலகியதால் மாற்று வீரருக்கு அழைப்பு விடுத்தது. இதனால் வருத்தம் அடைந்தேன். கோபமும் அடைந்தேன் என ரஜத் படிதார் தெரிவித்தார்.
இது தொடர்பாக ரஜத் படிதார் கூறியதாவது:-
ஐபிஎல் 2022 ஏலத்தின்போது, ஏலத்தில் உங்களை எடுக்க இருக்கிறோம். தயாராக இருக்கவும் என அணி நிர்வாகத்திடம் இருந்து தகவல் வந்தது. இதனால் ஆர்சிபி அணிக்காக விளையாடும் மற்றொரு வாய்ப்பை பெற இருக்கிறோம் என்ற சிறிய நம்பிக்கை எனக்குள் இருந்தது. ஆனால் மெகா ஏலத்தில் என்னை ஏலம் எடுக்கவில்லை. இதனால் சற்று வருத்தம் அடைந்தேன்.
ஏலத்தில் எடுக்காததால், என்னுடைய உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். பின்னர், காயம் காரணமாக லவ்னித் சிசோடியா அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் மாற்று வீரரான உங்களை தேர்வு செய்ய இருக்கிறோம் என என்கு அழைப்பு வந்தது. நான் வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், மாற்று வீரராக செல்ல விரும்பவில்லை. ஏனென்றால், எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது தெரியும். மேலும் வெளியில் உட்கார விருப்பம் இல்லை.
விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர் அணியில் இருக்கும்போது ஆர்சிபி நிர்வாகம் கேப்டன் பதவியை தந்தபோது எனக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் விராட் கோலி எனக்கு நம்பிக்கை அளித்தார்.
இவ்வாறு ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
- சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது.
- போர் பதற்றத்தால் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் மோதலால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
இதற்கிடையே போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட், வெஸ்ட் இண்டீசின் ரொமாரியோ ஷெப்பர்டு, இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேல், பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன், தென்ஆப்பிரிக்காவின் இங்கிடி உள்ளிட்டோர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் இணைந்தனர்.
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் சின்னசாமி மைதானத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இதனை பார்த்த ஆர்சிபி வீரர் டிம் டேவிட் மைதானத்தில் இறங்கி மழையில் ஆனந்த குழியல் போட்டார். மேலும் குழந்தையாக மாறிய அவர் மைதானத்தில் விரிந்திருந்த தார்பாயில் சறுக்கி விளையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.
- லார்ட்ஸ் மைதானம் இந்த மெகா போட்டிக்கு ஒரு பொருத்தமான இடம்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் எங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்போம்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 11-ம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகிறது.
இதில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா, பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் ஐசிசி பட்டத்தை வெல்ல இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும் என தென் ஆப்பிரிக்கா வீரர் டெம்பா பவுமா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது ஐசிசி பட்டத்தை வெல்ல எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்த முக்கியமான விளையாட்டு வடிவத்திற்கு சூழலை வழங்குகிறது.
லார்ட்ஸ் மைதானம் இந்த மெகா போட்டிக்கு ஒரு பொருத்தமான இடம். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் எங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்போம். ஜூன் 11 ஆம் தேதி இரு அணிகளின் அதிர்ஷ்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பின்பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
என்று பவுமா தெரிவித்துள்ளார்.
- ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அருகில் கூட யாரும் வரவில்லை.
- கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார்.
பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டில் ரொனால்டோ மொத்தம் 275 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 2295 கோடி) சம்பாதித்ததாக ஃபோர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது ஃபோர்ப்ஸ் வரலாற்றில் ஒரு விளையாட்டு வீரர் ஆண்டுக்கு சம்பாதிக்கும் மூன்றாவது அதிகபட்ச தொகையாகும்.
சவுதி புரோ லீக்கில் அல் நாசர் கிளப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் ரொனால்டோ பெரும் வருமானத்தைப் பெற்றார்.
இத்தாலிய கிளப்பான ஜுவென்டஸிலிருந்து அல் நாசருக்கு மாறிய பிறகு, அவரது ஆண்டு வருமானம் 200 மில்லியன் டாலரைத் தாண்டியது.

களத்தில் விளையாடுவதோடு மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயும் ரொனால்டோ வணிக ரீதியாக அதிக பணம் ஈட்டி வருகிறார்.
உலகெங்கிலும் உள்ள பல மதிப்புமிக்க பிராண்டுகளுக்கான தனது விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாகவும், தனது சொந்த CR7 பிராண்டின் கீழ் ஹோட்டல்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஜிம்கள் போன்ற வணிகங்கள் மூலமாகவும் ரொனால்டோ பணம் சம்பாதித்து வருகிறார்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அருகில் கூட யாரும் வரவில்லை. ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க கூடைப்பந்து சூப்பர் ஸ்டார் லெப்ரான் ஜேம்ஸ் 133.8 மில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இது ரொனால்டோவின் வருவாயில் பாதிக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

லெப்ரான் ஜேம்ஸ்
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று இரவு நடந்த அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனும், 8-ம் நிலை வீராங்கனையுமான சீனாவின் கின் வென் ஜாங், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.
இதில் கோகோ காப் முதல் செட்டை 7-6 (7-3) என போராடி வென்றார். இரண்டாவது செட்டை கின் வென் ஜாங் 6-4 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை கோகோ காப் 7-6 (7-4) என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இந்தப் போட்டி சுமார் 3 மணி நேரம் 39 நிமிடங்கள் நீடித்தது.
நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் கோகோ காப், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியை எதிர்கொள்கிறார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதி சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய சின்னர் 6-0, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜாக் டிராபரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.
ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் பெடன் சியர்ன்ஸ் உடன் மோதினார்.
இதில் பவுலினி 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.






