என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஆர்சிபி நிர்வாகம் மீது வருத்தமும் கோபமும் அடைந்தேன்: ரஜத் படிதார்
- 2022 மெகா ஏலத்தில் எடுப்பதாக அணி நிர்வாகம் கூறியது.
- ஆனால் ஏலத்தில் எடுக்காமல் காயத்திற்கான மாற்று வீரராக தேர்வு செய்தது.
ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஆர்சிபி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்து விடும்.
இந்த சீசனில் ரஜத் படிதார் 11 போட்டிகளில் 239 ரன்கள் அடித்துள்ளார். ஆர்சிபி அணி 2022 ஏலத்தின்போது தன்னை ஏலம் எடுப்பதாக உறுதி அளித்தது. ஆனால் ஏலம் எடுக்கவில்லை. காயம் காரணமாக ஒருவர் விலகியதால் மாற்று வீரருக்கு அழைப்பு விடுத்தது. இதனால் வருத்தம் அடைந்தேன். கோபமும் அடைந்தேன் என ரஜத் படிதார் தெரிவித்தார்.
இது தொடர்பாக ரஜத் படிதார் கூறியதாவது:-
ஐபிஎல் 2022 ஏலத்தின்போது, ஏலத்தில் உங்களை எடுக்க இருக்கிறோம். தயாராக இருக்கவும் என அணி நிர்வாகத்திடம் இருந்து தகவல் வந்தது. இதனால் ஆர்சிபி அணிக்காக விளையாடும் மற்றொரு வாய்ப்பை பெற இருக்கிறோம் என்ற சிறிய நம்பிக்கை எனக்குள் இருந்தது. ஆனால் மெகா ஏலத்தில் என்னை ஏலம் எடுக்கவில்லை. இதனால் சற்று வருத்தம் அடைந்தேன்.
ஏலத்தில் எடுக்காததால், என்னுடைய உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். பின்னர், காயம் காரணமாக லவ்னித் சிசோடியா அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் மாற்று வீரரான உங்களை தேர்வு செய்ய இருக்கிறோம் என என்கு அழைப்பு வந்தது. நான் வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், மாற்று வீரராக செல்ல விரும்பவில்லை. ஏனென்றால், எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது தெரியும். மேலும் வெளியில் உட்கார விருப்பம் இல்லை.
விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர் அணியில் இருக்கும்போது ஆர்சிபி நிர்வாகம் கேப்டன் பதவியை தந்தபோது எனக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் விராட் கோலி எனக்கு நம்பிக்கை அளித்தார்.
இவ்வாறு ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.






