என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் அணி கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை நியமிக்க வேண்டும்: அஸ்வின்
- இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் பயணம்செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையே, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த 7-ம் தேதி ஓய்வு பெற்றார். இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட இருக்கிறார். சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது யூ டியூப் சேனலில் பேசியதாவது:
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் சுப்மன் கில் என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பதவிக்கு நல்ல தேர்வாக இருப்பார். அதே நேரத்தில் இந்திய அணியில் மிகவும் அனுபவமிக்க வீரரான ரவீந்திர ஜடேஜாவை மறந்து விடக்கூடாது. அவரது பெயரும் கேப்டன்ஷிப்புக்கான பரிசீலனையில் இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு இளம் வீரரை கேப்டனாக உருவாக்க நினைத்தால், அவரை முதலில் 2 ஆண்டுகள் துணை கேப்டனாக நியமித்து பயிற்சி அளியுங்கள். அதன்பிறகு அவரிடம் முழு நேர கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கலாம்.
அடுத்த 2 ஆண்டுக்கு ஜடேஜாவை கேப்டனாக நியமித்து அவரது தலைமையின் கீழ் கில்லுக்கு பயிற்சி அளிக்கலாம். ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று நம்புகிறேன். இதனால் கில்லுக்கு கவுரவம் கிடைத்தால் அது அவர் கேப்டனாக மாறுவதற்கு எளிதாக இருக்கும்.
ஐ.பி.எல். தொடரில் ஒரு சீசனில் நன்றாக செயல்பட்டதை வைத்துக் கொண்டு டெஸ்ட் போட்டியில் கேப்டன்ஷிப்பை செய்து விட முடியாது. டெஸ்ட் கேப்டன் உள்ளூர் முதல் தர போட்டியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.






