என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.
    • 5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி செப்டம்பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இந்த போட்டிகள் இந்தியாவில் குவாஹாட்டி, இந்தோர், நவி மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் இலங்கையில் கொழும்பு நகரத்திலும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான தொடருக்கான பரிசுத் தொகையாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதன்படி இந்த தொடருக்கான பரிசுத்தொகையாக ரூ.122 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பதிப்பை விட 297% அதிகமாகும்.

    முக்கியமாக, இந்த தொகை 2023 ஆண்கள் உலகக் கோப்பையின் மொத்த பரிசுத்தொகையை விடவும் அதிகமாக உள்ளது.

    அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.39.55 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.19.77 கோடி. அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.9.89 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    5-வது மற்றும் 6-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 6.18 கோடியும் 7-வது மற்றும் 8-வது இடங்கள் பிடிக்கும் அணிக்கு ரூ.2.47 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 2024-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.

    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்று அஸ்வின் கூறியிருந்தார்.

    அந்த வகையில் 2025 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக இடம் பிடித்து விளையாடினார். அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் சில போட்டிகள் அவர் விளையாடவில்லை. இதனால் அவரை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். தான் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எதிர்வரும் ஐ.எல்.டி டி20 சீசனுக்காக என்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறேன். நிச்சயம் ஏதாவது ஒரு அணி என்னை வாங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே ஐ.எல்.டி டி20 லீக் போட்டிகளில் இந்திய முன்னாள் வீரர்களான யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு ஆகியோர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஜோகோவிச் 6-3, 6-3 ,6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.
    • சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 7-ம் நிலை வீரருமான ஜோகோவிச் ( செர்பியா) 4-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஜான் லெனார்ட் ஸ்ட்ரப்பை சந்தித்தார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-3 ,6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 49 நிமிட நேரமே தேவைப்பட்டது.

    மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள டெய்லர் பிரீட்ஸ் (அமெரிக்கா), ஜிரி லெஹெக்கா (செக் குடியரசு) ஆகியோரும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான சபலென்கா ( பெலாரஸ்) 4-வது சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த கிறிஸ்டினா புக்சாவை எதிர் கொண்டார்.

    இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 13 நிமிட நேரமே தேவைப்பட்டது.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் கிரஜ்கோவா ( செக் குடியரசு) வெற்றி பெற்றார்.

    செக் குடியரசுவை சேர்ந்த வோண்ட் ரூகோவா 6-4, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ரைபகினாவை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    • பும்ரா சுப்மன் கில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக ரோகித் சர்மா ஆயத்தமாகி வருகிறார்.

    ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு உடல் தகுதிக்கான சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இதே போல ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.

    சுப்மன்கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக துலிப் டிராபி போட்டியில் இருந்து அவர் விலகினார். இதனால் அவருக்கு உடல் தகுதி சோதனை கட்டாயமாக்கப்பட்டது.

    • சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இண்டர் மியாமி படுதோல்வி அடைந்தது.
    • மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    லீக்ஸ் கப் கால்பந்து இறுதிப் போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியை மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி எதிர்கொண்டது.

    இப்போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி படுதோல்வி அடைந்தது. இதனால் மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இப்போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் இரு அணி வீரர்களும் கடுமையாக தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முதலில் பேட் செய்த ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி 100 பந்துகளில் 168 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய டிரென்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 142 ரன்கள் எடுத்து தோற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் 100 பந்து கொண்ட ஆண்களுக்கான "The Hundred" கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் ஓவல் இன்வின்சிபிள்ஸ், டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஓவல் இன்வின்சிபிள் அணி 100 பந்துகளில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் குவித்தது. வில் ஜாக்ஸ் 72 ரன்னும், ஜோர்டான் காக்ஸ் 40 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய டிரென்ட் ராக்கெட்ஸ் அணி 100 பந்துகளில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் ஓவல் இன்வின்சிபிள் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், ஓவல் இன்வின்சிபிள் அணியின் கேப்டன் சாம் பில்லிங்ஸ் கேப்டனாக தொடர்ந்து 3 முறை தனது அணிக்கு கோப்பை வாங்கித் தந்துள்ளார் என்பதால் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்னெக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-3), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான ஆன் லி உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக புஜாரா சமீபத்தில் அறிவித்தார்.
    • முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பை பாராட்டி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் நட்சத்திர வீரரான செதேஷ்வர் புஜாரா சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பை பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி புஜாராவுக்கு கடிதம் எழுதி பாராட்டினார். அதில் கூறியுள்ளதாவது:

    நீங்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்ததை அறிந்தேன். உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    குறுகிய வடிவிலான கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் நீங்கள் நீண்ட வடிவிலான ஆட்டத்தின் அழகை நினைவூட்டினீர்கள்.

    களத்தில் நீண்ட நேரம் பேட் செய்யும் திறன் பெற்ற நீங்கள், இந்திய பேட்டிங் வரிசையின் அச்சாணியாக திகழ்ந்தீர்கள். நீங்கள் களத்தில் இருக்கும் போது அணி பாதுகாப்பான நபரின் கையில் உள்ளது என ரசிகர்கள் உணர்ந்தனர்.

    உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை, குறிப்பாக வெளிநாட்டு சவாலான சூழ்நிலைகளில், அசாதாரண திறமையும் உறுதியும் கொண்ட தருணங்களால் நிறைந்துள்ளது.

    உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் பெறுவதற்கு அடித்தளமாக இருந்த உங்கள் ஆட்டத்தை ரசிகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

    மிகவும் வலிமையான பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் உறுதியாக நின்று, அணிக்காக பொறுப்பை ஏற்பது என்றால் என்ன என்பதை காட்டினீர்கள்.

    ராஜ்கோட்டை கிரிக்கெட் வரைபடத்தில் இடம்பெறச் செய்த உங்கள் பங்களிப்பு, ஒவ்வொரு இளைஞருக்கும் பெருமையின் ஆதாரமாக இருக்கும்.

    நீங்கள் கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, எழுச்சியடையும் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.உங்கள் எதிர்கால பயணத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடியிடம் இருந்து பாராட்டு கடிதம் கிடைத்தமைக்கு பெருமை அடைகிறேன் என புஜாரா குறிப்பிட்டுள்ளார்.

    • ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடந்து வருகிறது.
    • இந்திய அணி 2வது லீக் போட்டியில் ஜப்பானை வெற்றி பெற்றது.

    பாட்னா:

    8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் சீனாவை 4-3 என வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்திய அணி 2வது லீக் போட்டியில் ஜப்பான் அணியுடன் இன்று மோதியது.

    முதல் பாதியில் இந்திய அணி 2 கோல்களை அடித்து 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஜப்பான் 2 கோல்கள் அடித்தது. இந்தியா மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என வெற்றி பெற்றது.

    ஹர்மன்பிரீத் சிங் 2 கோலும், மன்தீப் சிங் ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

    இதன்மூலம் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 3-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி, பிரேசிலின் ஹதாத் மையா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பிரேசில் வீராங்கனை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதனால் மரியா சக்காரி தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 6-4 என முதல் செட்டை வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெலிக்ஸ் ஆகர் அடுத்த 3 செட்களை 7-6 (9-7), 6-4, 6-4 என கைப்பற்றி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 3 வீரரான ஸ்வரேவ் அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 277 ரன்களை எடுத்தது.
    • பென் கர்ரன், சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்தனர்.

    ஹராரே:

    இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 79 ரன்னில் அவுட்டானார். சிக்கந்தர் ராசா அரை சதம் கடந்து 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 122 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 71 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இலங்கை அணி 49.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.

    • அண்மையில் இந்த மைல்கல்லை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பொல்லார்ட் எட்டியிருந்தார்.
    • டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 14,562 ரன்களுடன் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 போட்டிகளில் 14,000 ரன்கள் குவித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார்

    அண்மையில் இந்த மைல்கல்லை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பொல்லார்ட் எட்டியிருந்தார்.

    டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 14,562 ரன்களுடன் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

    ×