search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டீவன் சுமித்
    X
    ஸ்டீவன் சுமித்

    ஆஷஸ் முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

    ஆஷஸ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது. ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட் சதம் அடித்து அசத்தினர்.
    பர்மிங்காம்:

    இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 284 ரன்களும், இங்கிலாந்து 374 ரன்களும் எடுத்தன. 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் (46 ரன்), டிராவிஸ் ஹெட் (21 ரன்) களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 4-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கோலோச்சினர். எச்சரிக்கையுடன் ஆடிய சுமித்தும், ஹெட்டும் அணியை வலுவான நிலையை நோக்கி பயணிக்க வைத்தனர். அணியின் ஸ்கோர் 205 ரன்களாக உயர்ந்த போது, டிராவிஸ் ஹெட் (51 ரன்) பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார்.

    அடுத்து ஸ்டீவன் சுமித்துடன், மேத்யூ வேட் கைகோர்த்தார். இந்த ஜோடியினரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்தின் முன்னணி பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. இது இங்கிலாந்துக்கு பின்னடைவாக அமைந்தது.

    தூண் போல் நிலை கொண்டு ஆடிய ஸ்டீவன் சுமித் உணவு இடைவேளைக்கு பிறகு பவுண்டரி அடித்து தனது 25-வது சதத்தை நிறைவு செய்தார். சுமித், முதல் இன்னிங்சிலும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஸ்டீவன் சுமித், புதிய பந்து எடுக்கப்பட்ட பிறகு விக்கெட்டை பறிகொடுத்தார். கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் சிக்கிய ஸ்டீவன் சுமித் 142 ரன்களில் (207 பந்து, 14 பவுண்டரி) வெளியேறினார். மறுமுனையில் மேத்யூ வேட் தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்தார். மேத்யூ வேட் 110 ரன்களில் (143 பந்து, 17 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் டிம் பெய்ன் 34 ரன்களில் வீழ்ந்தார்.

    ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 112 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பேட்டின்சன் 47 ரன்களுடனும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), கம்மின்ஸ் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்துள்ளது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
    Next Story
    ×