search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - தோல்வி குறித்து டோனி கருத்து
    X

    20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - தோல்வி குறித்து டோனி கருத்து

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம் என்று தோல்வி குறித்து கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL2018 #CSKvMI #Dhoni
    புனே:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுத்தது.

    புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்னே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 19.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சென்னை அணி சந்தித்த 2-வது தோல்வியாகும். இந்த தோல்வி குறித்து கேப்டன் டோனி கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தில் என்ன தவறு நடந்தது என்பதை உணர்ந்து கொள்வது முக்கியமானது. இது போன்ற தோல்வியில் இருந்து அதிகமாக கற்றுக் கொள்ள முடியும். தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட்டோம்.

    ஆனால் நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். மிடில் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. எங்களது பந்து வீச்சாளர்களை விட அவர்களது சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    இது போன்ற தோல்வியால் வீரர்கள் தாழ்மை அடைவார்கள். தொடர்ந்து வெற்றிகளை பெற்றுக் கொண்டு இருந்தால் கடினமாக உழைக்க வேண்டிய பகுதிகள் தெரியாமல் போய் விடும். நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எப்படி இருந்தாலும் நாங்கள் 20 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்க வேண்டும்.

    இவ்வாறு டோனி கூறினார்.



    மும்பை அணி பெற்ற 2-வது வெற்றியாகும். இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்சை அந்த அணி பழிதீர்த்துக் கொண்டது. வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இந்த வெற்றி மூலம் நாங்கள் இன்னும் வாய்ப்பில் இருப்பது மகிழ்ச்சியானதே. வெற்றி பெற வேண்டிய கட்டாயமான இந்த ஆட்டத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வீரர்களிடம் தெரிவித்து இருந்தோம். பொல்லார்ட் சேர்க்கப்படவில்லை. இதை அவர் ஏற்றுக் கொண்டார். அவர் இப்போதும் மேட்ச் வின்னர் தான்.

    அனைத்து துறையிலும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இதனால் நல்ல முடிவு கிடைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை சூப்பர்கிங்ஸ் 8-வது ஆட்டத்தில் டெல்லி அணியை நாளை (30-ந்தேதி) சந்திக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அடுத்த ஆட்டத்தில் பெங்களூர் அணியை 1-ந்தேதி எதிர்கொள்கிறது. #IPL2018 #CSKvMI #Dhoni
    Next Story
    ×