search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    இந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

    டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #IndiaOpen2018 #PVSindhu

    புதுடெல்லி:

    இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரலெசும் மோதினர்.

    இப்போட்டியின் முதல் சுற்றை சிந்து 21-12 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை ஸ்பெயின் வீராங்கனை 21-19 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் அதிரடியாக விளையாடிய சிந்து அந்த செட்டையும் 21-11 என கைப்பற்றினார். இதன்மூலம் 21-12, 19-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.



    இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவாலும், அமெரிக்காவின் பெய்வான் சாங்கும் மோதினர். இதில் 21-10, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற பெய்வான் சாங் அரையிறுதிக்கு முன்னேறினார். 

    முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரரான காஷ்யப், சீனாவின் பின் கியாவோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-16, 21-18 என்ற நேர் செட்களில் சீன வீரர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் சவுரப் வெர்மாவும், மலேசியாவின் இஷ்காந்தர் சுல்கர்நயனும் மோதினர். இப்போட்டியின், முதல் இரண்டு செட்களையும் 21-17, 21-14 என்ற நேர் செட்களில் மலேசிய வீரர் கைப்பற்றினார். இதன் மூலம் தோல்வியடைந்த சவுரப் வெர்மா தொடரைவிட்டு வெளியேறினார்.



    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத்தும், தாய்வானின் சோ டியன்-சென்னும் மோதினர். இப்போட்டியில் 21-15, 21-13 என்ற நேர் செட்களில் சோ டியன்-சென் வெற்றி பெற்றார். #IndiaOpen2018 #PVSindhu #SainaNehwal #Kashyap #SaiPraneeth
    Next Story
    ×