search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பரமஹம்சரிடம் அளவில்லா பக்தி கொண்ட சீடர்
    X

    பரமஹம்சரிடம் அளவில்லா பக்தி கொண்ட சீடர்

    • குழந்தைகள் உடல் நலம் பெற்றபின் தன் வாழ்நாள் முழுவதும் வலக்கரத்தை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தினாள்.
    • பரமஹம்சர் சொல்லும் உவமைகள் சசிமகராஜின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

    சசிமகராஜ் என அழைக்கப்பட்ட சுவாமி ராமகிருஷ்ணானந்தர், பரமஹம்சரின் முக்கியமான சீடர்களில் ஒருவர். சென்னை ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர்.

    ஸ்ரீராமகிருஷ்ணானந்தர் பற்றி சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதிய நூல் உள்பட, தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவரது வாழ்க்கைச் சரிதம் பயின்று பின்பற்றப்பட வேண்டிய அளவு உன்னதமானது.

    சசிமகராஜுக்கு ராமகிருஷ்ணானந்தர் எனத் தீட்சா நாமம் வழங்கியவர் விவேகானந்தர்தான். பரமஹம்சர் உடல்தரித்து வாழ்ந்த காலத்தில் அவருக்குச் சேவை செய்வதிலும் பரமஹம்சர் சித்தி அடைந்தபின் அவரைச் சிந்தனை செய்வதிலும் ஆனந்தம் கொண்டு வாழ்ந்தவர் ராமகிருஷ்ணானந்தர்.

    ஸ்ரீராமகிருஷ்ணானந்தர் என்ற பெயரைத் தான் சூட்டிக்கொள்ள விரும்பினார் விவேகானந்தர். ஆனால் தன்னை விடவும் சசி மகராஜுக்கே அந்தத் திருநாமம் மிகவும் பொருந்தும் என உணர்ந்து மகிழ்ச்சியோடு அதை அவருக்குச் சூட்டினார்.

    ஓர் ஆன்மிக நெறி உலகில் தழைக்க வேண்டுமானால் தத்துவம் வழிபாடு இரண்டுமே தேவை. பரமஹம்சரின் தத்துவத்தை விவேகானந்தர் பிரபலப்படுத்தினார். பரமஹம்ச வழிபாட்டை ராமகிருஷ்ணானந்தர் நெறிப்படுத்தினார்.

    இன்று குருதேவரின் பக்தர்கள், ராமகிருஷ்ணானந்தர் வகுத்துக் கொடுத்த வழிபாட்டு நெறியில்தான் குருதேவரை வழிபடுகிறார்கள்.

    சசிமகராஜின் தந்தை ஈசுவர சந்திர சக்கரவர்த்தி மாபெரும் ஆன்மிகவாதி. மயானத்தில் ஜபம் செய்து சாதனைகள் செய்தவர்.

    ஒருநாள் அவ்வித சாதனை முடித்து இல்லம் திரும்பும்போது, நள்ளிரவு நேரத்தில் தேவியை ஓர் இளம்பெண்ணாய் தரிசித்தார்.

    யார் நீ என அவர் வியப்போடு வினவியபோது தேவி ஒரு கோவிலில் புகுந்து மறைந்துவிட்டாள். அங்கேயே அமர்ந்து தன் தியானத்தை மேலும் தொடர்ந்தார் ஈசுவர சந்திரர் என்கிறது அவரின் வரலாறு.

    சசிமகராஜின் தாய் பாவசுந்தரி தேவி. தன் இரு குழந்தைகள் நோய்வாய்ப்பட்டபோது ஒரு வேண்டுதலாக தன் வலது கரத்தை தேவிக்கென்று அர்ப்பணித்து விட்டாள்.

    குழந்தைகள் உடல் நலம் பெற்றபின் தன் வாழ்நாள் முழுவதும் வலக்கரத்தை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தினாள்.

    விதையொன்று போடச் சுரையொன்று முளைக்காதல்லவா? இப்படிப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை குருதேவரின் தீவிர பக்தராக மாறியதில் வியப்பில்லையே?

    பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்த கேசவ சந்திர சேகரன் மூலம் பரமஹம்சரின் பெருமைகளை அறிந்த சசிமகராஜ், முதல்முறையாக தட்சிணேஸ்வரம் சென்று அங்கு வாழ்ந்த குருதேவரைச் சந்தித்தார்.

    குருதேவர் பக்தர்களின் மனத்தை ஈர்த்து வெளியே எடுத்து, அதைத் தாம் விரும்பியவாறு பிசைந்து உருமாற்றி மீண்டும் பக்தர்களின் இதயத்தில் வைத்துவிடுவார் என்று சொல்வதுண்டு.

    குருதேவரால் கவரப்பட்டவர்கள் அவரின் வாழ்நாள் அடியவர்களாக மாறிவிடுவார்கள். அப்படி மாறியவர்தான் சசிமகராஜ்.

    ஆன்மிக நெறி இளம் வயதிலேயே புகட்டப்பட வேண்டும். ஆன்மிகம் ஏதோ வயோதிகர்களுக்கானது அல்ல. அதைப் பெறும் முதல் உரிமை இளைஞர்களுக்கே உண்டு.

    `செங்கல், ஓடு இவற்றில் பெயர் சின்னம் போன்ற முத்திரைகளைப் பதித்துவிட்டால் காளவாயில் வைத்துச் சுட்டாலும் முத்திரை அழியாமல் பதிந்துவிடும்.

    ஆன்மிக வாழ்வில் சற்று முன்னேறிய பிறகே இளைஞர்கள் உலகியல் வாழ்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் தடம் மாறமாட்டார்கள்` என்பார் பரமஹம்சர். அவ்விதமே இளம் வயதிலேயே ஆன்மிக நெறிக்கு வந்துவிட்டார் சசிமகராஜ்.

    பரமஹம்சர் சொல்லும் உவமைகள் சசிமகராஜின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

    திருப்பூர் கிருஷ்ணன்

    `மனம் இறைவன் குடியிருக்கும் வீடு. ஒரு மன்னர் தன் ஏவலரின் வீட்டுக்கு வருவதாக இருந்தால் என்ன செய்வார்? ஏவலரின் இல்லத்தில் தன்னை வரவேற்கும் வகையிலான தகுந்த சூழல் உள்ளதா என்பதை மன்னர் அறிவார்தானே?

    எனவே அவர் தன் பணியாட்கள் சிலரை ஏவலரின் வீட்டுக்கு அனுப்பி வீட்டையும் சுற்றுப் புறங்களையும் சுத்தம் செய்ய வைப்பார்.

    அதுபோல் இறைவன் நம் இதய வீட்டுக்கு வருவதற்கு முன் சில பணியாட்களை அனுப்பி நம் இதயத்தை சுத்தப்படுத்துவார். புனிதம், அன்பு, கருணை போன்ற உணர்வுகளே அந்த வேலையாட்கள். அவர்கள் இதயத்திற்கு வந்தால் இதய வீடு தூய்மையாகிவிடும். அதன் பின்னர் இறைவன் வருவதற்கு ஏற்ற இடமாக இதயம் மாறிவிடும்`

    இப்படியெல்லாம் பரமஹம்சர் சொன்ன கருத்துகள் சசிமகராஜின் இதயத்தை ஊடுருவின. அவர் மனம் மெல்ல மெல்லத் துறவு நெறியில் புடம்போடப்பட்டது.

    ஒருநாள் கோபால் என்ற மூத்த அடியவர், சில காவித் துணிகளையும் ருத்திராட்ச மாலைகளையும் சிறந்த சன்னியாசிகளுக்குக் கொடுப்பதற்காக மூட்டையாகக் கட்டிக் கொண்டுவந்தார்.

    பரமஹம்சர் நரேந்திரர், சசிமகராஜ் உள்ளிட்ட தம் இளம் சீடர்களைக் காட்டி இவர்களை விடச் சிறந்த சன்னியாசிகள் கிடையாது. இவர்களுக்கே கொடு என்றார்.

    அப்படிப் பன்னிரண்டு பேர் துறவுக்கோலம் பூண்டனர். ஒருநாள் மாலையில் சன்னியாச தீட்சை பெறும் சடங்கொன்றையும் செய்யச் சொல்லி ஊரில் பிட்சை எடுத்துவரச் சொன்னார் பரமஹம்சர். முதலில் அவர்கள் பிட்சை பெற்றது சாரதா தேவியிடம்தான்.

    சசிமகராஜ் காவியாடை தரித்து சாரதா தேவியிடம் பிட்சை பெற்றபோது, தெய்வீக அன்னையிடம் பிட்சை பெற்றதாகவே உணர்ந்தார்.

    பரமஹம்சர் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து சசிமகராஜ் அளவற்ற வருத்தத்தில் ஆழ்ந்திருப்பது பரமஹம்சரின் உள்ளத்தைத் தொட்டது.

    `என்னுள் இருவர் உண்டு. ஒருவர் காளி. இன்னொருவர் பக்தர். நோய் வந்திருப்பது பக்தருக்குத்தான். அதனால் வருந்தாதே. என்னுள் உறையும் காளி உனக்கு என்றும் அருள்புரிவாள்!` எனச் சொல்லி சசிமகராஜைத் தேற்றினார் பரமஹம்சர்.

    குருதேவரின் ஊனுடம்பை ஆலயமாகக் கொண்டு பராசக்தியே அவருக்குள் உறைகிறாள் என்பதை சசிமகராஜ் தெளிவாகப் புரிந்து கொண்டார். அவர் குருதேவர் மேல் கொண்ட பக்தி மேலும் அதிகமாயிற்று.

    பரமஹம்சர் சித்தி அடைந்தபின் அஸ்திக் கலசத்தைக் குழிக்குள் வைத்து அதன்மீது மண் இட்டபோது குருதேவருக்கு வலிக்கும் என அலறினார் அவர். தம் வாழ்நாள் முழுவதும் குருதேவர் தன்னோடு இருப்பதாகவே உணர்ந்தவர் அவர்.

    அவர் நிகழ்த்தும் பூஜை அலாதியானது. குருதேவர் படத்திற்கு வியர்க்கக் கூடாது என விசிறியால் விசிறுவார். நள்ளிரவில் எழுந்து குருதேவருக்குக் குளிருமோ என அவர் படத்தைப் போர்வையால் மூடி வைப்பார்.

    குருதேவருக்குச் சூடான பூரி பிடிக்கும் என்பதால் பூரியை குருதேவரின் படத்திற்குச் சுடச்சுட நிவேதனம் செய்வார். சில நேரங்களில் அடுப்பை பூஜை அறைக்கே கொண்டு சென்று பூரி சுட்டு நிவேதிப்பார்.

    ஒருமுறை இவர் தலைமையில் பாலகங்காதர திலகர் சொற்பொழிவு செய்திருக்கிறார். இவரால் திலகர் கவரப்பட்டிருக்கிறார்.

    வ.உ.சி. இவரிடம் உரையாடி ஆன்மிகத் தத்துவங்களில் தெளிவு பெற்றிருக்கிறார். தொடக்கத்தில் நாத்திகராக இருந்த வங்க எழுத்தாளர் சரத் சந்திரர் ஆத்திகரானது இவருடைய பேச்சின் தாக்கத்தினால் தான்.

    கையைக் கன்னத்தில் வைத்துக்கொண்டு அமராதே... கவலை தோய்ந்த மனத்தின் அறிகுறி அது, காலை ஆட்டிக் கொண்டிருக்காதே.. மனச்சஞ்சலத்தின் அறிகுறி அது` என்றெல்லாம் எடுத்துச் சொல்லித் தம் அன்பர்களுக்கு அவர் வழிகாட்டுவார்.

    விவேகானந்தர் மேல் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். தாம் ஒருமுறை எர்ணாகுளம் சென்றபோது, எர்ணாகுளத்தில் விவேகானந்தர் தங்கியிருந்த இடம் எது என விசாரித்தறிந்து அந்த இடத்தை விழுந்து வணங்கினார்.

    விவேகானந்தர் சித்தி அடையும் முன்னரே அவர் சித்தி அடையப் போவதைச் சென்னையில் இருந்தவாறே அறிந்துகொண்டார்.

    விவேகானந்தர் உடலை உமிழ்நீரைத் துப்புவதுபோலத் துப்பிய காட்சியைத் தாம் தியானத்தில் கண்டதாகத் தம் அன்பர்களிடம் குறிப்பிட்டார். அவர் சொன்னவாறே பின்னர் விவேகானந்தர் சித்தி அடைந்த செய்தி சென்னைக்கு வந்துசேர்ந்தது.

    சாரதா தேவி சென்னை வந்தபோது ரயில் நிலையத்திற்குக் காரில் சென்றார். கார் வெயிலால் சூடாகவே, துணியை நனைத்துப் பிழிந்து சாரதாதேவி அமர இருந்த இருக்கையைத் துடைத்து வைத்தார்.

    சென்னையில் வசித்த சசிமகராஜ் நோய் வாய்ப்பட்டார். சிகிச்சைக்காகக் கொல்கத்தா சென்றார். சிகிச்சை நடைபெற்றது. ஆனால் பயன் கிட்டவில்லை.

    ஒருநாள் பரமஹம்சரும் விவேகானந்தரும் அன்னையும் வந்துள்ளதாகக் கூறி அவர்கள் அமர்வதற்குப் பாயை விரிக்கச் சொன்னார்.

    சிறிதுநேரம் கழித்து அவர்கள் சென்றுவிட்டதாகக் கூறி பாயைச் சுருட்டிவைக்கச் சொன்னார். மூன்று மணிநேரம் சமாதியில் ஆழ்ந்தார். பின் அவர் உயிர் பிரிந்தது.

    சென்னை ராமகிருஷ்ண மடத்தை நிறுவிய சசிமகராஜ், சென்னை விவேகானந்தர் கல்லூரியின் அருகே இயங்கும் மாணவர் இல்லத்தையும் நிறுவினார். தாய் தந்தையற்ற குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்தார்.

    பிரபல தமிழ் எழுத்தாளர் காலஞ்சென்ற ஆர்.சூடாமணி, மாணவர் இல்லத்தின் பணிகளால் ஈர்க்கப்பட்டு அந்நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் நன்கொடையாக உயில் எழுதி வைத்தார்.

    பல்லாண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிவரும் ராமகிருஷ்ண மடத்தின் நூல் வெளியீட்டுத் துறையைத் தொடங்கி வைத்தவரும் ராமகிருஷ்ணானந்தர்தான்.

    அவரை யாராவது புகழ்ந்தால் அவருக்குப் பிடிக்காது.

    `பேனாவுக்கு உயிர் இருப்பதாக வைத்துக் கொள். அது நான் நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதியிருக்கிறேன் என்று கூறக் கூடும். கடிதங்களை எழுதியது பேனா அல்ல, அதை வைத்திருப்பவன். நாம் இறைவன் கையில் உள்ள பேனா. அவ்வளவே!` என்பார் அவர்.

    இறைவன் கைப் பேனாதான் சசிமகராஜ். பேனா மறைந்தாலும் அதனால் எழுதப்பட்ட எழுத்துக்கள் ஒருபோதும் அழிவதில்லை.

    ராமகிருஷ்ண மடத்தின் தூய திருப்பணிகளில் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் நிறுவனரான ராமகிருஷ்ணானந்தர் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×