search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிக அமுதம்"

    • குழந்தைகள் உடல் நலம் பெற்றபின் தன் வாழ்நாள் முழுவதும் வலக்கரத்தை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தினாள்.
    • பரமஹம்சர் சொல்லும் உவமைகள் சசிமகராஜின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

    சசிமகராஜ் என அழைக்கப்பட்ட சுவாமி ராமகிருஷ்ணானந்தர், பரமஹம்சரின் முக்கியமான சீடர்களில் ஒருவர். சென்னை ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர்.

    ஸ்ரீராமகிருஷ்ணானந்தர் பற்றி சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதிய நூல் உள்பட, தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவரது வாழ்க்கைச் சரிதம் பயின்று பின்பற்றப்பட வேண்டிய அளவு உன்னதமானது.

    சசிமகராஜுக்கு ராமகிருஷ்ணானந்தர் எனத் தீட்சா நாமம் வழங்கியவர் விவேகானந்தர்தான். பரமஹம்சர் உடல்தரித்து வாழ்ந்த காலத்தில் அவருக்குச் சேவை செய்வதிலும் பரமஹம்சர் சித்தி அடைந்தபின் அவரைச் சிந்தனை செய்வதிலும் ஆனந்தம் கொண்டு வாழ்ந்தவர் ராமகிருஷ்ணானந்தர்.

    ஸ்ரீராமகிருஷ்ணானந்தர் என்ற பெயரைத் தான் சூட்டிக்கொள்ள விரும்பினார் விவேகானந்தர். ஆனால் தன்னை விடவும் சசி மகராஜுக்கே அந்தத் திருநாமம் மிகவும் பொருந்தும் என உணர்ந்து மகிழ்ச்சியோடு அதை அவருக்குச் சூட்டினார்.

    ஓர் ஆன்மிக நெறி உலகில் தழைக்க வேண்டுமானால் தத்துவம் வழிபாடு இரண்டுமே தேவை. பரமஹம்சரின் தத்துவத்தை விவேகானந்தர் பிரபலப்படுத்தினார். பரமஹம்ச வழிபாட்டை ராமகிருஷ்ணானந்தர் நெறிப்படுத்தினார்.

    இன்று குருதேவரின் பக்தர்கள், ராமகிருஷ்ணானந்தர் வகுத்துக் கொடுத்த வழிபாட்டு நெறியில்தான் குருதேவரை வழிபடுகிறார்கள்.

    சசிமகராஜின் தந்தை ஈசுவர சந்திர சக்கரவர்த்தி மாபெரும் ஆன்மிகவாதி. மயானத்தில் ஜபம் செய்து சாதனைகள் செய்தவர்.

    ஒருநாள் அவ்வித சாதனை முடித்து இல்லம் திரும்பும்போது, நள்ளிரவு நேரத்தில் தேவியை ஓர் இளம்பெண்ணாய் தரிசித்தார்.

    யார் நீ என அவர் வியப்போடு வினவியபோது தேவி ஒரு கோவிலில் புகுந்து மறைந்துவிட்டாள். அங்கேயே அமர்ந்து தன் தியானத்தை மேலும் தொடர்ந்தார் ஈசுவர சந்திரர் என்கிறது அவரின் வரலாறு.

    சசிமகராஜின் தாய் பாவசுந்தரி தேவி. தன் இரு குழந்தைகள் நோய்வாய்ப்பட்டபோது ஒரு வேண்டுதலாக தன் வலது கரத்தை தேவிக்கென்று அர்ப்பணித்து விட்டாள்.

    குழந்தைகள் உடல் நலம் பெற்றபின் தன் வாழ்நாள் முழுவதும் வலக்கரத்தை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தினாள்.

    விதையொன்று போடச் சுரையொன்று முளைக்காதல்லவா? இப்படிப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை குருதேவரின் தீவிர பக்தராக மாறியதில் வியப்பில்லையே?

    பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்த கேசவ சந்திர சேகரன் மூலம் பரமஹம்சரின் பெருமைகளை அறிந்த சசிமகராஜ், முதல்முறையாக தட்சிணேஸ்வரம் சென்று அங்கு வாழ்ந்த குருதேவரைச் சந்தித்தார்.

    குருதேவர் பக்தர்களின் மனத்தை ஈர்த்து வெளியே எடுத்து, அதைத் தாம் விரும்பியவாறு பிசைந்து உருமாற்றி மீண்டும் பக்தர்களின் இதயத்தில் வைத்துவிடுவார் என்று சொல்வதுண்டு.

    குருதேவரால் கவரப்பட்டவர்கள் அவரின் வாழ்நாள் அடியவர்களாக மாறிவிடுவார்கள். அப்படி மாறியவர்தான் சசிமகராஜ்.

    ஆன்மிக நெறி இளம் வயதிலேயே புகட்டப்பட வேண்டும். ஆன்மிகம் ஏதோ வயோதிகர்களுக்கானது அல்ல. அதைப் பெறும் முதல் உரிமை இளைஞர்களுக்கே உண்டு.

    `செங்கல், ஓடு இவற்றில் பெயர் சின்னம் போன்ற முத்திரைகளைப் பதித்துவிட்டால் காளவாயில் வைத்துச் சுட்டாலும் முத்திரை அழியாமல் பதிந்துவிடும்.

    ஆன்மிக வாழ்வில் சற்று முன்னேறிய பிறகே இளைஞர்கள் உலகியல் வாழ்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் தடம் மாறமாட்டார்கள்` என்பார் பரமஹம்சர். அவ்விதமே இளம் வயதிலேயே ஆன்மிக நெறிக்கு வந்துவிட்டார் சசிமகராஜ்.

    பரமஹம்சர் சொல்லும் உவமைகள் சசிமகராஜின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. 

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    `மனம் இறைவன் குடியிருக்கும் வீடு. ஒரு மன்னர் தன் ஏவலரின் வீட்டுக்கு வருவதாக இருந்தால் என்ன செய்வார்? ஏவலரின் இல்லத்தில் தன்னை வரவேற்கும் வகையிலான தகுந்த சூழல் உள்ளதா என்பதை மன்னர் அறிவார்தானே?

    எனவே அவர் தன் பணியாட்கள் சிலரை ஏவலரின் வீட்டுக்கு அனுப்பி வீட்டையும் சுற்றுப் புறங்களையும் சுத்தம் செய்ய வைப்பார்.

    அதுபோல் இறைவன் நம் இதய வீட்டுக்கு வருவதற்கு முன் சில பணியாட்களை அனுப்பி நம் இதயத்தை சுத்தப்படுத்துவார். புனிதம், அன்பு, கருணை போன்ற உணர்வுகளே அந்த வேலையாட்கள். அவர்கள் இதயத்திற்கு வந்தால் இதய வீடு தூய்மையாகிவிடும். அதன் பின்னர் இறைவன் வருவதற்கு ஏற்ற இடமாக இதயம் மாறிவிடும்`

    இப்படியெல்லாம் பரமஹம்சர் சொன்ன கருத்துகள் சசிமகராஜின் இதயத்தை ஊடுருவின. அவர் மனம் மெல்ல மெல்லத் துறவு நெறியில் புடம்போடப்பட்டது.

    ஒருநாள் கோபால் என்ற மூத்த அடியவர், சில காவித் துணிகளையும் ருத்திராட்ச மாலைகளையும் சிறந்த சன்னியாசிகளுக்குக் கொடுப்பதற்காக மூட்டையாகக் கட்டிக் கொண்டுவந்தார்.

    பரமஹம்சர் நரேந்திரர், சசிமகராஜ் உள்ளிட்ட தம் இளம் சீடர்களைக் காட்டி இவர்களை விடச் சிறந்த சன்னியாசிகள் கிடையாது. இவர்களுக்கே கொடு என்றார்.

    அப்படிப் பன்னிரண்டு பேர் துறவுக்கோலம் பூண்டனர். ஒருநாள் மாலையில் சன்னியாச தீட்சை பெறும் சடங்கொன்றையும் செய்யச் சொல்லி ஊரில் பிட்சை எடுத்துவரச் சொன்னார் பரமஹம்சர். முதலில் அவர்கள் பிட்சை பெற்றது சாரதா தேவியிடம்தான்.

    சசிமகராஜ் காவியாடை தரித்து சாரதா தேவியிடம் பிட்சை பெற்றபோது, தெய்வீக அன்னையிடம் பிட்சை பெற்றதாகவே உணர்ந்தார்.

    பரமஹம்சர் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து சசிமகராஜ் அளவற்ற வருத்தத்தில் ஆழ்ந்திருப்பது பரமஹம்சரின் உள்ளத்தைத் தொட்டது.

    `என்னுள் இருவர் உண்டு. ஒருவர் காளி. இன்னொருவர் பக்தர். நோய் வந்திருப்பது பக்தருக்குத்தான். அதனால் வருந்தாதே. என்னுள் உறையும் காளி உனக்கு என்றும் அருள்புரிவாள்!` எனச் சொல்லி சசிமகராஜைத் தேற்றினார் பரமஹம்சர்.

    குருதேவரின் ஊனுடம்பை ஆலயமாகக் கொண்டு பராசக்தியே அவருக்குள் உறைகிறாள் என்பதை சசிமகராஜ் தெளிவாகப் புரிந்து கொண்டார். அவர் குருதேவர் மேல் கொண்ட பக்தி மேலும் அதிகமாயிற்று.

    பரமஹம்சர் சித்தி அடைந்தபின் அஸ்திக் கலசத்தைக் குழிக்குள் வைத்து அதன்மீது மண் இட்டபோது குருதேவருக்கு வலிக்கும் என அலறினார் அவர். தம் வாழ்நாள் முழுவதும் குருதேவர் தன்னோடு இருப்பதாகவே உணர்ந்தவர் அவர்.

    அவர் நிகழ்த்தும் பூஜை அலாதியானது. குருதேவர் படத்திற்கு வியர்க்கக் கூடாது என விசிறியால் விசிறுவார். நள்ளிரவில் எழுந்து குருதேவருக்குக் குளிருமோ என அவர் படத்தைப் போர்வையால் மூடி வைப்பார்.

    குருதேவருக்குச் சூடான பூரி பிடிக்கும் என்பதால் பூரியை குருதேவரின் படத்திற்குச் சுடச்சுட நிவேதனம் செய்வார். சில நேரங்களில் அடுப்பை பூஜை அறைக்கே கொண்டு சென்று பூரி சுட்டு நிவேதிப்பார்.

    ஒருமுறை இவர் தலைமையில் பாலகங்காதர திலகர் சொற்பொழிவு செய்திருக்கிறார். இவரால் திலகர் கவரப்பட்டிருக்கிறார்.

    வ.உ.சி. இவரிடம் உரையாடி ஆன்மிகத் தத்துவங்களில் தெளிவு பெற்றிருக்கிறார். தொடக்கத்தில் நாத்திகராக இருந்த வங்க எழுத்தாளர் சரத் சந்திரர் ஆத்திகரானது இவருடைய பேச்சின் தாக்கத்தினால் தான்.

    கையைக் கன்னத்தில் வைத்துக்கொண்டு அமராதே... கவலை தோய்ந்த மனத்தின் அறிகுறி அது, காலை ஆட்டிக் கொண்டிருக்காதே.. மனச்சஞ்சலத்தின் அறிகுறி அது` என்றெல்லாம் எடுத்துச் சொல்லித் தம் அன்பர்களுக்கு அவர் வழிகாட்டுவார்.

    விவேகானந்தர் மேல் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். தாம் ஒருமுறை எர்ணாகுளம் சென்றபோது, எர்ணாகுளத்தில் விவேகானந்தர் தங்கியிருந்த இடம் எது என விசாரித்தறிந்து அந்த இடத்தை விழுந்து வணங்கினார்.

    விவேகானந்தர் சித்தி அடையும் முன்னரே அவர் சித்தி அடையப் போவதைச் சென்னையில் இருந்தவாறே அறிந்துகொண்டார்.

    விவேகானந்தர் உடலை உமிழ்நீரைத் துப்புவதுபோலத் துப்பிய காட்சியைத் தாம் தியானத்தில் கண்டதாகத் தம் அன்பர்களிடம் குறிப்பிட்டார். அவர் சொன்னவாறே பின்னர் விவேகானந்தர் சித்தி அடைந்த செய்தி சென்னைக்கு வந்துசேர்ந்தது.

    சாரதா தேவி சென்னை வந்தபோது ரயில் நிலையத்திற்குக் காரில் சென்றார். கார் வெயிலால் சூடாகவே, துணியை நனைத்துப் பிழிந்து சாரதாதேவி அமர இருந்த இருக்கையைத் துடைத்து வைத்தார்.

    சென்னையில் வசித்த சசிமகராஜ் நோய் வாய்ப்பட்டார். சிகிச்சைக்காகக் கொல்கத்தா சென்றார். சிகிச்சை நடைபெற்றது. ஆனால் பயன் கிட்டவில்லை.

    ஒருநாள் பரமஹம்சரும் விவேகானந்தரும் அன்னையும் வந்துள்ளதாகக் கூறி அவர்கள் அமர்வதற்குப் பாயை விரிக்கச் சொன்னார்.

    சிறிதுநேரம் கழித்து அவர்கள் சென்றுவிட்டதாகக் கூறி பாயைச் சுருட்டிவைக்கச் சொன்னார். மூன்று மணிநேரம் சமாதியில் ஆழ்ந்தார். பின் அவர் உயிர் பிரிந்தது.

    சென்னை ராமகிருஷ்ண மடத்தை நிறுவிய சசிமகராஜ், சென்னை விவேகானந்தர் கல்லூரியின் அருகே இயங்கும் மாணவர் இல்லத்தையும் நிறுவினார். தாய் தந்தையற்ற குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்தார்.

    பிரபல தமிழ் எழுத்தாளர் காலஞ்சென்ற ஆர்.சூடாமணி, மாணவர் இல்லத்தின் பணிகளால் ஈர்க்கப்பட்டு அந்நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் நன்கொடையாக உயில் எழுதி வைத்தார்.

    பல்லாண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிவரும் ராமகிருஷ்ண மடத்தின் நூல் வெளியீட்டுத் துறையைத் தொடங்கி வைத்தவரும் ராமகிருஷ்ணானந்தர்தான்.

    அவரை யாராவது புகழ்ந்தால் அவருக்குப் பிடிக்காது.

    `பேனாவுக்கு உயிர் இருப்பதாக வைத்துக் கொள். அது நான் நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதியிருக்கிறேன் என்று கூறக் கூடும். கடிதங்களை எழுதியது பேனா அல்ல, அதை வைத்திருப்பவன். நாம் இறைவன் கையில் உள்ள பேனா. அவ்வளவே!` என்பார் அவர்.

    இறைவன் கைப் பேனாதான் சசிமகராஜ். பேனா மறைந்தாலும் அதனால் எழுதப்பட்ட எழுத்துக்கள் ஒருபோதும் அழிவதில்லை.

    ராமகிருஷ்ண மடத்தின் தூய திருப்பணிகளில் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் நிறுவனரான ராமகிருஷ்ணானந்தர் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • தர்மர் துயரத்தோடு கலியுகம் பிறக்கப் போகிறது, அதற்கான நாள் நெருங்கிவிட்டது என்று சொல்லிவிட்டு மேலும் பேசத் தொடங்கினார்.
    • மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் எல்லோரும் செழிப்பாகத்தான் இருப்பார்கள்.

    மிகக் கடுமையான மகாபாரதப் போர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது. தீயவனான துரியோதனன் பீமனால் தொடையைப் பிளந்து கொல்லப்பட்டான்.

    பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோதனன் யாக்கை ரத்தம் இரண்டையும் கலந்து கூந்தலில் தடவி நீராடிச் சீவிக் குழல் முடித்தாள் பாஞ்சாலி. அவள் கவுரவர் சபையில் துச்சாதனன் தன்னைத் துகிலுரிய முனைந்தபோது செய்த சபதம் நிறைவேறியது.

    இப்போது பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமபுத்திரர் மன்னராகி விட்டார். தன் பெயருக்கேற்ற வகையில் அவர் தருமநெறி தவறாமல் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அவரது செங்கோல் அரசாட்சியில் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மாதம் மும்மாரி பொழிந்து நாடே செழிப்பாக இருந்தது.

    அந்தத் தருணத்தில்தான் துவாரகையின் மன்னனும் பஞ்ச பாண்டவர்களின் வழிகாட்டியுமான கண்ணன் ஒரு வேடனால் தற்செயலாகக் கொல்லப்பட்டான்.

    மரத்தின் கிளையில் உயரே அமர்ந்திருந்த கண்ணனின் அழகிய வெள்ளை நிறப் பாதங்களைப் புறா என நினைத்த வேடனின் புத்தியை என்ன சொல்வது? வேடனின் அம்பால் கண்ணன் மாண்டுபோனதை விதி என்று சொல்லாமல் அதற்கு வேறென்ன விளக்கம்?

    கண்ணன் வைகுந்தம் செல்லும்முன், `விரைவில் துவாபர யுகம் முடிந்து கலியுகம் தோன்றும், கலிபுருஷன் தன் வேலைகளைக் காண்பிக்கத் தொடங்குவான்` என்று தருமபுத்திரரை எச்சரித்துவிட்டே சென்றான்.

    தர்மபுத்திரர் கண்ணன் சொன்னபடி, கலியுகம் தோன்றினால் உலகம் என்னென்ன வகையில் மாறுமோ, மக்களின் மனப்போக்கு எவ்விதமெல்லாம் உருக்கொள்ளத் தொடங்குமோ எனக் கவலையுடனும் அச்சத்துடனும் காத்திருந்தார்.

    கண்ணனின் எச்சரிக்கையை எண்ணி அடிக்கடி அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

    அப்படியான காலகட்டத்தில் ஒருநாள்...

    பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த வணிகச் சந்தை. சிலர் பொருட்களைக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். பலர் பொருட்களைத் தேடித் தேடி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

    அங்கு காய்கறி தொடங்கி வீட்டுக்கு உபயோகமான எல்லா வகையான பொருட்களும் விலைக்கு வாங்கக் கிடைத்தன. நியாயமான முறையில் வணிகம் நடந்து கொண்டிருந்தது.

    சூரியாஸ்தமனம் நிகழத் தொடங்கி மெல்லிய இருள் பரவும் நேரம். அப்போது, பரவிக் கொண்டிருந்த இருளைத் திரட்டிச் செய்தது மாதிரியான கறுத்த நிறத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தையில் அதை விற்பதற்காக வந்தார்.

    அவர் எங்கிருந்து வந்தார் எனத் தெரியவில்லை. அவர் உடலின் கருமை நிறம் வித்தியாசமானதாய் இருந்தது. ஆனால் அவர் விற்பதற்காகக் கொண்டு வந்த குதிரையின் எழில் எல்லோரையும் சுண்டி இழுத்தது.

    மினுமினுப்பான உடல். கம்பீரமான நடை. அந்தக் குதிரையிடம் தென்பட்ட மிடுக்கு அதற்கு ஒரு தனி கவர்ச்சியைக் கொடுத்தது. பார்த்த யாராலும் அதனிடமிருந்து கண்ணைத் திருப்ப முடியவில்லை.

    அந்நேரம் பார்த்து, பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் அந்தச் சந்தைக்குள் நுழைந்தான். எல்லோரையும் கவர்ந்த குதிரை அவனையும் கவரத் தவறவில்லை.

    குதிரையின் சேணத்தைப் பிடித்துக்கொண்டு நின்ற குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "இந்த அழகிய குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

    அவரோ குதிரையின் விலையைச் சொல்லாமல் அவன் கேட்ட கேள்விக்கு விந்தையான ஒரு பதிலைச் சொன்னார்.

    "ஐயா! இந்தக் குதிரையை நான் விற்பனைக்காகக் கொண்டு வரவில்லை. நீங்கள் இதை வாங்க விரும்பினால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதும். அப்படி பதில் சொல்பவர்களுக்குக் குதிரையை எந்தப் பணமும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாகவே தருவேன் " என்றார் அவர்.

    சற்றே திகைப்படைந்த சகாதேவன், "சரி உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்" என்றான்.

    குதிரையின் உரிமையாளர், "ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள நீரை எடுத்து ஏழு சிறிய கிணறுகளை நிரப்ப முடியும். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் நீரை எடுத்து, மறுபடியும் அந்தப் பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பாது. எதிர்காலத்தில் இப்படி நிகழும். இது ஏன்?" என்று கேட்டார்.

    இதென்ன விசித்திரமான கேள்வி? சகாதேவனுக்குப் பதில் தெரியவில்லை. அங்கேயே பதிலை யோசித்தவாறு உட்கார்ந்து விட்டான்.

    சிறிது நேரத்தில், எங்கே சகாதேவனைக் காணோம் எனத் தேடிக்கொண்டு அவன் சகோதரன் நகுலன் சந்தைக்கு வந்தான். குதிரையையும் அதன் உரிமையாளரையும் அருகே சோர்வோடு அமர்ந்திருந்த சகாதேவனையும் பார்த்தான். குதிரையின் அழகு நகுலனையும் மயக்கியது. அவனும் அதை வாங்கும் எண்ணத்தில் விலை கேட்டான்.

    இப்போது குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் வேறு ஒரு கேள்வியைக் கேட்டார். "துணி தைக்கும் ஊசியின் துவாரம் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த துவாரத்தின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்று கேட்டு இதற்கான பதிலைச் சொல்லிவிட்டு பணமே தராமல் குதிரையை அழைத்துச் செல்லலாம் என்றார்.

    நகுலன் எவ்வளவோ யோசித்தும் அவனுக்கு பதில் தெரியவில்லை. அவனும் ஏற்கெனவே சந்தையில் உட்கார்ந்திருந்த சகாதேவனுடன் தானும் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

    சில நிமிடங்கள் கழிந்தன. அர்ஜுனன் அங்கு வந்தான். அவனும், அழகிய குதிரையைப் பார்த்து, அதன் விலையைக் கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

    "ஒரு வயலில் பயிர் நன்றாக விளைந்திருந்தது. வேலியெல்லாம் போட்டு பயிரை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயலில் விளைந்த பயிர் எதையும் காணவில்லை. வேலியெல்லாம் இருந்தும் விளைந்த தானியம் எங்கு போயிற்று? யார் எடுத்தார்கள்? பதில் சொல்லிவிட்டு, குதிரையை அழைத்துச் செல்லுங்கள்" என்றார்.

    கண்ணனிடம் மகாபாரதப் போர் நடந்தபோது கீதோபதேசம் கேட்டவன் அர்ச்சுனன். அப்போது எத்தனையோ நுணுக்கமான கேள்விகளை எழுப்பி கண்ணன் மூலம் விளக்கம் பெற்ற அர்ஜுனனால் இப்போது இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவனும் யோசனையோடு அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

    அரண்மனையில் சகோதரர்கள் மூவரையும் காணாமல், தர்ம புத்திரர் திகைப்படைந்தார். பீமனைக் கூப்பிட்டு, "நீ போய், அவர்கள் எங்கே என்று தேடி அழைத்து வா!" என்றார்.

    பீமன் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அரண்மனைக்கு அழைத்து வந்தான். திரெளபதியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் எங்கு போனீர்கள்?" என விசாரித்தார்.

    அர்ஜுனன், நடந்ததை விவரித்தான். குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று வினாக்களையும் ஒவ்வொன்றாகச் சொன்னான். அந்தக் கேள்விகளைக் கேட்ட தர்மபுத்திரர் நடுநடுங்கினார்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

     

    தம்பிகள் திகைத்தார்கள். "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக இந்தக் கேள்விகளில் என்ன இருக்கிறது?" எனக் கேட்டார்கள்.

    தர்மர் துயரத்தோடு கலியுகம் பிறக்கப் போகிறது, அதற்கான நாள் நெருங்கிவிட்டது என்று சொல்லிவிட்டு மேலும் பேசத் தொடங்கினார்...

    "என் அன்புச் சகோதரர்களே! விரைவில் கலியுகத்தில் நிகழப்போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் தெரிவிக்கின்றன. அதை எண்ணித்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்....." என்று விரிவாகக் கூறலானார்.

    "உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர். ஏழு சிறிய கிணறுகள் என்பவை அந்தப் பெற்றோரின் பிள்ளைகள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எண்ணிக்கையில் எத்தனை பேராக இருந்தாலும் சரி! காப்பாற்றுவார்கள்.

    இதைத்தான் பெரிய கிணற்றின் நீரைக் கொண்டு சிறிய கிணறுகளை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்தப் பிள்ளைகளோ, அவ்வளவு பேரும் சேர்ந்து கூட, தங்கள் பெற்றோரைக் காப்பாற்ற மாட்டார்கள்.

    இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள அத்தனை தண்ணீரையும் கொண்டு, அந்த ஒரே ஒரு பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறிக்கிறது.

    அடுத்த இரண்டாவது கேள்வி என்ன சொல்கிறது தெரியுமா? இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினம். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார் அந்தக் குதிரை உரிமையாளர்.

    மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே விளைச்சல் முழுவதையும் அனுபவிப்பார்கள்.

    அவர்கள் மக்களின் நலன்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் எல்லோரும் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது!

    இவையாவும் கலியுகத்தில் நடக்கும். அரசாட்சியில் உள்ளோர் நம்மைப் போல் அரசாள மாட்டார்கள். மக்களைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் தங்கள் நலனைப் பெருக்கிக் கொள்வதையே அவர்கள் நோக்கமாகக் கொள்வார்கள்` என்று சொல்லி முடித்தார் தர்மர்.

    பஞ்ச பாண்டவர்களும் பாஞ்சாலியும் கலியுகம் தோன்றப் போவதை எண்ணிக் கவலையில் ஆழ்ந்தார்கள்.


    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • புகழால் அணுவளவும் பாதிக்கப்படாத சித்த புருஷரான ரமணர், தன்னைத் தேடிவந்த அனைவருக்கும் மவுனமாய்த் தன் அருளை வழங்கிக் கொண்டிருந்தார்.
    • `பக்தி நெறியில் இரண்டு நியாயம் உண்டு தெரியுமோ? ஒன்று மர்க்கட நியாயம். இன்னொன்று மார்ஜால நியாயம்.

    திருவண்ணாமலையில் வாழ்ந்துவந்த பகவான் ரமணரின் பெருமை உலகெங்கும் பேசப்படத் தொடங்கியிருந்த காலம் அது.

    யோகி ராம்சுரத்குமார் தமது மூன்று குருமார்களில் ஸ்ரீரமணரும் ஒருவர் எனத் தெரிவித்திருந்தார். ஸ்ரீராமதாசரிடம் பக்தியையும் ஸ்ரீஅரவிந்தரிடம் ஞானத்தையும் கற்றுக்கொண்ட தான், ஸ்ரீரமணரிடம் தவத்தைக் கற்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ஸ்ரீரமணரின் புகழ் விறுவிறுவென்று பரவியதால், வெளிநாடுகளில் இருந்தும் கூட, ஏராளமானோர் ரமணரைத் தேடி வந்து கொண்டிருந்தார்கள்.

    புகழால் அணுவளவும் பாதிக்கப்படாத சித்த புருஷரான ரமணர், தன்னைத் தேடிவந்த அனைவருக்கும் மவுனமாய்த் தன் அருளை வழங்கிக் கொண்டிருந்தார். ஆன்மிக அன்பர்கள் ஸ்ரீரமணர் அருளில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.

    ஸ்ரீரமணரின் தீவிர அடியவர்களில் ஒருவர் சுந்தரேச ஐயர். ரமண மகரிஷியின் பெருமை முழுவதையும் அறிந்தவர். ஸ்ரீரமணரையே முழுமையாய்ச் சரணடைந்து வாழ்ந்தவர்.

    சுந்தரேச ஐயரின் உறவினர் ஒருவருக்கு திடீரெனக் கால் நடக்க இயலாமல் போய்விட்டது. கம்பைக் கையில் ஊன்றிக் கொண்டு நடக்கத் தொடங்கினார் அவர். அதுவும் சிரமமாகத் தான் இருந்தது.

    மருத்துவர்கள் இனிக் கம்போடுதான் நடக்க வேண்டும் எனத் தீர்மானமாய்ச் சொல்லி விட்டார்கள். அந்த உறவினரின் மனம் அளவற்ற வருத்தத்தில் ஆழ்ந்தது. இனி வாழ்நாள் முழுவதும் கம்போடு தான் நடக்க வேண்டும் என்ற எண்ணமே அவரைக் கதிகலங்கச் செய்தது.

    ஒருநாள் கம்பை ஊன்றியவாறு சுந்தரேச ஐயரைத் தேடிவந்தார் அவர். தன் நிலைமையைச் சொல்லி மனம் வருந்தினார். `இனிக் கம்பை எடுத்துவிட்டு இயல்பாக என்னால் நடக்கவே முடியாதா?` என அழுது புலம்பினார். அவரது கண்ணீர் சுந்தரேச ஐயரின் உள்ளத்தைக் கரைத்தது.

    `ஏன் முடியாது? மண்ணில் நடமாடும் கடவுள் ஸ்ரீரமணர் இருக்கிறாரே? வெளிநாடுகளில் இருந்தெல்லாம் அவரைத் தேடி வருகிறார்கள் அடியவர்கள். உன்னால் அவரை நாடிச் செல்ல முடியாதா?

    ஸ்ரீரமணரைச் சரணடைந்து உன் துயரத்தைச் சொல். உன் கால் தானாய்ச் சரியாகும்! மருத்துவர்களுக்கு எல்லாம் பெரிய மருத்துவர் ஸ்ரீரமணர்!` என்றார் சுந்தரேச ஐயர்.

    உடல் ஒரு பற்றுக்கோலை ஊன்றிக்கொண்டு நடப்பது மாதிரி, அந்த உறவினரின் மனம் சுந்தரேச ஐயரின் அறிவுரையால் ரமணரை ஒரு பற்றுக்கோலாய்க் கொள்ளத் தலைப்பட்டது. அந்த அறிவுரையையே பின்பற்றி நடக்கலானார் அந்த உறவினர்.

     

    திருவண்ணாமலை சென்று ரமணரை தரிசித்தார். அங்கேயே தங்கினார். நாள்தோறும் ஸ்ரீரமணர் முன்னிலையில் அமர்ந்து தன் கால் சரியாக வேண்டும் எனப் பிரார்த்திக்கத் தொடங்கினார்.

    ரமணர் தன் முகத்தில் ஒரு குறுமுறுவலோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, எதுவும் பேசவில்லை. ரமணர் எப்போதும் அதிகம் பேசுவதில்லையே? மவுனம் தானே பெரும்பாலும் ரமணர் மொழி?

    அவர் தன் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டாரா இல்லையா? வந்தவருக்கு எதுவும் விளங்கவில்லை. ஆனால் ரமணாஸ்ரமத்தில் ரமணர் முன்னிலையில் நடைபெறும் விந்தையான பல நிகழ்வுகளை அவர் தொடர்ந்து கவனிக்கலானார்.

    திருவண்ணாமலையில் இருந்த குரங்குகள் ஸ்ரீரமணரிடம் பாசத்தோடு பழகி வந்தன. விலங்கினத்தைச் சேர்ந்த குரங்குகள் கூட மகான் ரமணரிடம் பக்தி செலுத்துவது அவரை வியக்க வைத்தது.

    குட்டிக் குரங்குகள் ஸ்ரீரமணர் மடியிலும் தோளிலும் ஏறி அமர்ந்துகொள்வதுண்டு. சில குட்டிக் குரங்குகள் ரமணரின் கழுத்தை ஒரு தாயைக் குழந்தை கட்டிக் கொள்வதைப் போல் கட்டிக் கொள்வதுண்டு. அவரிடம் அவை உரிமையோடு விளையாடுவதும் உண்டு.

    ரமணர் ஒருபோதும் குரங்குகளை விரட்டுவதில்லை. அவற்றின் விளையாட்டை மனமார ரசிப்பார் அவர். குரங்குகளின் முதுகில் பிரியத்தோடு தடவிக் கொடுப்பார்.

    ஏதேனும் ஒரு குரங்கு பசியோடு தன்னைத் தேடிவந்தால் ரமணர் அதற்குத் தன் கையாலேயே உணவளிப்பார். அப்போது ரமணரைப் பார்த்தால் குரங்குகளின் அன்பான தாய்போல் தோன்றும். ஒருநாள் ஒரு குரங்கு புதிதாய்ப் பிறந்த தன் குட்டியை ரமணரிடம் கொண்டுவந்து காண்பித்தது. பிறகு எதுவும் பேசாமல் அமைதியாக தன் குட்டியோடு ரமணர் முன் எதையோ எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தது.

    ரமணர் அந்தத் தாய்க் குரங்கையும் குட்டிக் குரங்கையும் அருள்பொங்கப் பார்த்தார். பின் அவற்றின் தலைமீது கைவைத்து ஆசீர்வதித்தார். அவ்வளவுதான். அவரது ஆசீர்வாதம் கிடைத்ததும் மகிழ்ச்சியோடு வேறு எதையும் எதிர்பார்க்காமல் அவை புறப்பட்டு விட்டன.

    குட்டிக் குரங்கு தன் தாயின் மடியை இறுகப் பற்றிக் கொண்டது. பின் தாய்க் குரங்கு குட்டிக் குரங்கோடு மரம் விட்டு மரம் தாவி எங்கோ சென்று மறைந்துவிட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்பர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அதுமட்டுமல்ல, ஒருநாள் ரமணர் பசியோடு ஒரு நாவல் மரத்தின் கீழ் நின்றபோது மரத்தில் இருந்த குரங்குகள் அவர் பசியைத் தீர்க்கும் எண்ணத்தில் அவருக்காக நாவல் பழம் பறித்துப் போட்ட காட்சியையும் அவர் கண்டார்.

    குரங்குகள் கூட ரமணரின் அருளைப் பெறுகின்றன. ரமண பகவானுக்கு நாவல் பழத்தை நிவேதனமாய்ப் பறித்துப் போடுகின்றன. ஆனால் ரமணர் அருளைத் தம்மால் பெற முடியவில்லையே? அவர் மனம் வைத்தால் தன் கையில் உள்ள கம்பைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தான் இயல்பாக நடக்குமாறு அவரால் செய்ய முடியாதா? நினைத்து நினைத்து மறுகியது அந்த அன்பரின் உள்ளம்.

    ஒருநாள் சுந்தரேச ஐயரும் கால் ஊனமான உறவினரும் ரமணர் முன்னிலையில் அமர்ந்திருந்த போது, ரமணர் சிரித்தவாறே பேசத் தொடங்கினார்:

    `பக்தி நெறியில் இரண்டு நியாயம் உண்டு தெரியுமோ? ஒன்று மர்க்கட நியாயம். இன்னொன்று மார்ஜால நியாயம். மர்க்கடம் என்றால் குரங்கு. மார்ஜாலம் என்றால் பூனை.

    குட்டிக் குரங்கு என்ன செய்கிறது? தாய்க் குரங்கை, தான் இறுகப் பற்றிக் கொள்கிறது. அது கையை விட்டுவிட்டால் அவ்வளவு தான். கீழே விழ வேண்டியது தான். தன் வலிமையை நம்பி, தன் பிடிப்பின் மூலம் தாயைச் சார்ந்திருக்கிறது அது.

    ஆனால் குட்டிப் பூனை அப்படிச் செய்வதில்லை. தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை முழுமையாகத் தன் தாயிடமே கொடுத்து விடுகிறது அது. தாய்ப் பூனைதான் குட்டிப் பூனையை வாயால் கவ்விக் கொள்கிறது.

    இப்போது குட்டிப் பூனையைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் தாய்ப் பூனைக்குத்தான். குட்டிப் பூனை தாயை முழுமையாகச் சார்ந்திருப்பதால் அதற்கு எந்தக் கவலையும் இல்லை.

    மர்க்கட நியாயப்படி, குட்டிக் குரங்கைப் போல் பக்தி செய்யாமல், மார்ஜால நியாயப்படி குட்டிப் பூனையைப் போல் பக்தி செய்வதுதான் நல்லது. பகவான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான். நம் வேலை பகவானை முழுமையாக நம்பிச் சரணடைவதுதான். இல்லையா?`

    ஸ்ரீரமணர் பேசப் பேச அந்த அன்பர் பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஸ்ரீரமணர் என்ன சொல்கிறார்? தனக்குத்தான் மறைமுகமாக ஏதேனும் அறிவுறுத்துகிறாரா? தான் முழுமையாக பகவானைச் சரணடைய வேண்டும் என்கிறாரா? தன் சரணாகதி இன்னும் முழுமை பெறவில்லை என்கிறாரா?

    ஊன்றுகோலுடன் நடந்து கொண்டிருந்த அன்பருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது.

    ஒரு பெருமூச்சோடு தன் ஊனம் குணமாக வேண்டும் எனத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யலானார் அவர். திருவண்ணாமலையை ஊன்றுகோலுடன் வலம் வருவது, ஸ்ரீரமணர் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்வது இப்படியே காலம் கடந்து கொண்டிருந்தது. ஆனால் எந்தப் பலனையும் காணோம்.

    ஒருநாள் வெறுத்துப் போய் விரக்தியுடன் திருவண்ணாமலையை விட்டுப் புறப்பட்டார் அவர். தன் நிலை இனி இப்படித்தான் என மனம் கசந்து ஊன்றுகோலுடன் நடக்கலானார்.

    சற்றுதூரம் சென்றவுடன் அவர் முன் தோன்றினார் அவருக்கு முன்பின் பரிச்சயமில்லாத ஒரு முதியவர். யார் அந்த முதியவர்? அவர் முகத்தில் லேசாக ரமணரின் ஜாடை தென்படுகிறதோ?

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    அந்த முதியவர் அவர் அருகே வந்தார். `என்ன இன்னும் கம்பை ஊன்றிக் கொண்டு நடக்கிறாய்? பகவான் மேல் நம்பிக்கை வராதா உனக்கு? இனி உனக்குக் கம்பு வேண்டாம்!` என அதட்டினார். அவர் கையில் இருந்த கம்பைப் பிடுங்கி இரண்டாய் முறித்துப் போட்டு விட்டு விறுவிறுவென்று நடந்து மறைந்து போனார். அன்பரின் உள்ளம் திகைத்தது. யார் இந்த முதியவர்? ஏன் இப்படிச் செய்தார்? இனி நான் கம்பில்லாமல் எப்படி நடப்பேன்?

    இப்படி நினைத்தவாறே மெல்லக் காலை எடுத்து வைத்தார் அன்பர். என்ன ஆச்சரியம்! அதன்பின் அவரால் கம்பில்லாமலேயே நடக்க முடிந்தது. கால்கள் இரண்டும் மிகுந்த வலிமை பெற்றிருந்தன.

    நம்பிக்கையில்லாமல், திருவண்ணாமலையை விட்டு விலகிச் செல்ல நினைத்த தன் நினைப்பை எண்ணி அவர் மனத்தில் அளவற்ற வெட்கம் தோன்றியது. வலிமை பெற்ற கால்களோடு ஓடிவந்து ஸ்ரீரமணரைக் கண்ணீர் வழிய நமஸ்கரித்தார் அந்த அன்பர்.

    அப்போதும் ரமணர் ஒன்றும் பேசவில்லை. தன் அருகே அமர்ந்திருந்த ஒரு பூனையை உற்றுப் பார்த்தார். பின் அந்த அன்பரைப் பார்த்தார். அவ்வளவுதான்.

    ஆன்மிக அன்பர்களுக்குத் தேவை குரங்கு போலான மர்க்கட நியாயம் அல்ல, பூனையைப் போலான மார்ஜால நியாயம்தான் என்பதைத் தன் விழிகளாலேயே ரமணர் போதிப்பதாய்ப் புரிந்துகொண்டார் அவர். ஸ்ரீரமணரின் பாதாரவிந்தங்களை விழுந்து வணங்கினார். அவர் மனம் முழுமையான சரணாகதி என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டது.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • பாஞ்சாலி செய்த உதவிக்குக் கைமாறு செய்ய நெடுநாளாய்க் காத்திருந்தானாம் கண்ணபிரான்.
    • "அத்தினத்துக்கும் ஓட்டைக் கைக்கும் ஆயிரம் காதம், ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்" என்பதே அந்த விடுகதை.

    கவுரவர் சபையில் சூதாட்டத்தின்போது பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமானத்தை நாம் அனைவரும் அறிவோம். அப்போது கவுரவர்களில் ஒருவனும் துரியோதனனின் தம்பியுமான துச்சாதனன் பாஞ்சாலி துகிலை உரிய முற்பட்டான்.

    கண்ணில்லாத திருதராஷ்டிரனும் கண்ணைக் கட்டிக்கொண்ட காந்தாரியும் அமர்ந்திருந்த சபைதான் அது. பீஷ்மர் போன்ற சான்றோர் பலர் சபையில் இருந்தும்கூட, பாஞ்சாலியின் துகிலுரிதல் என்ற இழிசெயலைத் தடுக்க முடியவில்லை.

    மாவீரர்களான பாஞ்சாலியின் கணவர் ஐவரும் சூதாட்டத்தில் தோற்று துரியோதனனின் அடிமைகளாய்ச் செயலற்று அமர்ந்திருந்தார்கள்.

    அத்தனை பேரும் கைவிட்டார்களே? திரவுபதி என்ன செய்வாள் பாவம்?

    அவள் மனிதர்கள் கைவிட்டதால் தன் இஷ்ட தெய்வமான கண்ணக் கடவுளைச் சரணடைந்தாள். அவள் பக்தியுடன் கண்ணனின் அருள்வேண்டி அவனைக் கதறி அழைக்கலானாள்.

    தன் இரு கரங்களையும் உயர்த்தி, அவள் முற்றிலுமாகக் கண்ணனைச் சரணடைந்ததும், கண்ணன் துவாரகையில் இருந்தபடியே அவளுக்கு ஆடை தந்து அருள்புரிந்தான் என்று அந்த வியத்தகு நிகழ்வைச் சொல்கிறது மகாபாரதம்.

    துச்சாதனன் துகிலுரியத் தொடங்கியபோது பாஞ்சாலி உள்ளம் உருகிக் கண்ணனைத் துதித்ததையும் அப்போது அவள் ஆடை மேலும் மேலும் வளர்ந்ததையும் மகாகவி பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் உணர்ச்சி பொங்க எழுதுகிறார்:

    `வையகம் காத்திடுவாய் - கண்ணா

    மணிவண்ணா என்றன் மனச்சுடரே!

    ஐய நின் பதமலரே - சரண்

    ஹரி ஹரி ஹரி என்றாள்!

    பொய்யர்தம் துயரினைப் போல் - நல்ல

    புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்

    தையலர் கருணையைப் போல் - கடல்

    சலசலத்தெறிந்திடும் அலைகளைப் போல்

    பெண்ணொளி வாழ்த்திடுவார் - அந்தப்

    பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல்போல்

    கண்ணபிரான் அருளால் - தம்பி

    கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்

    வண்ணப் பொற் சேலைகளாம் - அவை

    வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!

    எண்ணத்தி லடங்காவே - அவை

    எத்தனை எத்தனை நிறத்தனவோ!

    பொன்னிழை பட்டிழையும் - பல

    புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்

    சென்னியிற் கைகுவித்தாள் - அவள்

    செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே

    முன்னிய ஹரிநாமம் - தன்னில்

    மூளுநற் பயனுல கறிந்திடவே

    துன்னிய துகில் கூட்டம் - கண்டு

    தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான்!`

    கண்ணன் பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்துக் காப்பாற்றியது வியப்புத்தான். அவன் குளித்துக் கொண்டிருந்த கோபிகைகளின் ஆடைகளைத் திருடிய திருட்டுக் கண்ணன் அல்லவா?

    ஆடை திருடுபவன், தன் இயல்பான திருட்டுக் குணத்தை விட்டுவிட்டு, பாஞ்சாலிக்கு ஆடையைக் கொடுக்க முன்வந்தது ஏன்? அதுபற்றியும் ஒரு நாட்டுப்புறக் கதை பேசுகிறது.

    ஒருமுறை கண்ணன் கத்தியால் பழம் நறுக்கிக் கொண்டிருந்தான். தவறுதலாக அந்தக் கத்தி கண்ணன் கையில் பட்டுவிட்டது. கை விரலில் இருந்து குருதி பெருகத் தொடங்கியது.

    அங்கே கூடியிருந்த பலர் எதுவும் செய்யாமல் அனுதாபத்தோடு கண்ணனைப் பார்த்தவாறு இருந்தனர்.

    ஆனால் ராஜ பத்தினியாகிய திரவுபதி பதறிப்போனாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. கண்ணன் விரலில் குருதி வழியலாமா?

    தான் கட்டியிருந்த புதுப் பட்டுப்புடவையின் முந்தானையைச் சடாரென்று கிழித்தாள் அவள். உடனே அந்தப் பட்டுத் துணியைத் தண்ணீரில் நனைத்துக் கண்ணன் விரலில் கட்டுப் போட்டுக் குருதி பெருகுவதைத் தடுத்தாள்.

    காயம் உடனே ஆறிவிட்டது. அதுசரி. ரத்தக்காயம் எப்படி உடனே ஆறும்? காயமாக இருந்தால்தானே உடனே ஆறாது? அது காயமல்ல. மாயம்!

    திரவுபதிக்குத் தன்மேல் உள்ள அளவற்ற பாசத்தை உலகறியச் செய்ய வேண்டிக் கண்ணன் செய்த மாயம்!

    பாஞ்சாலி செய்த உதவிக்குக் கைமாறு செய்ய நெடுநாளாய்க் காத்திருந்தானாம் கண்ணபிரான். சாதாரணக் கடனுக்கு வட்டி வளர்வதுபோல், கண்ணனின் நன்றிக்கடனுக்கும் காலம் செல்லச் செல்ல வட்டி மேலே மேலே வளர்ந்து கொண்டே இருந்தது!

    அந்த நன்றிக் கடனைத் தீர்க்கும் வாய்ப்பு துரியோதனன் சபையில் வாய்த்தது. ஒரே ஒரு சின்னப் பட்டுத்துணிக்குப் பிரதியாக மலை மலையாய்ச் சேலைகளைக் கொடுத்துத் தன் நன்றிக் கடனைத் தீர்த்துக் கொண்டான் கண்ணன் என்கிறது அந்த அழகிய நாட்டுப்புறக் கதை.

    பாஞ்சாலி துகிலுரிதல் தொடர்பாக இன்னொரு நாட்டுப்புறக் கதையும் உண்டு. கண்ணன் ஒருமுறை குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது அவன் இடுப்புத் துணியை ஒரு மீன் இழுத்துக் கொண்டு சென்று விட்டதாம்.

    குளத்து நீரில் கைகளால் எவ்வளவோ துழாவிப் பார்த்தும் ஆடை போன இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீனாக அவதாரம் எடுத்த திருமால் அவன். ஆனால் ஒரு மீன் இழுத்துச் சென்ற ஆடையை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதை என்ன சொல்ல! ஆடையில்லாமல் எப்படிக் கரையேறுவது? கண்ணன் தவித்துக் கொண்டிருந்தானாம்.

    அந்த வழியே பலர் சென்றார்கள். கண்ணனையும் கண்ணன் குளித்துக் கொண்டிருந்த குளத்தையும் பார்த்துக் கொண்டே தான் சென்றார்கள். ஆனால் யாரும் கண்ணனின் இக்கட்டை உணரவுமில்லை. உணர்ந்து உதவ முன்வரவுமில்லை.

    அப்போது அவ்வழியே வந்தாள் பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி. கண்ணனின் தவிப்பைப் பார்த்துத் திகைத்தாள். யோசித்து நிலைமையை உடனே புரிந்துகொண்டாள். தன் சேலையின் முந்தானையைக் கிழித்துக் குளத்தில் வீசினாள்.

    கண்ணன் அவள் சேலைத் துணியைத் தன் இடுப்பில் சுற்றிக் கொண்டு கரையேறினான். சம்சாரக் கடலில் மூழ்குபவர்களைக் கரையேற்றும் கண்ணன், அன்று சாதாரணக் குளத்தில் இருந்து கரையேறியது பாஞ்சாலி செய்த உதவியால்தான்.

    தன் மானம் காத்த பாஞ்சாலியின் மானத்தைத் தக்க சந்தர்ப்பத்தில் தான் முன்வந்து காத்தான் கண்ணபிரான் என்கிறது இந்த நாட்டுப்புறக் கதை.

    இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் இந்தக் கதை பற்றிய தத்துவக் கண்ணோட்டத்தை காந்தி விளக்கியுள்ளார்.

    பாஞ்சாலி ஆன்மாவின் உருவகம். பஞ்ச பாண்டவர்கள் ஐம்புலன்களின் உருவகங்கள். வாழ்க்கை என்கிற சூதாட்டத்தில் நூற்றுக்கணக்கான தீய சக்திகளிடம் ஐம்புலன்களும் தங்களை இழக்கின்றன.

    அப்போது ஆன்மா இறைவனைச் சரணடைய, இறைவன் அதன் மானத்தைக் காத்துக் கடைத்தேற்றுகிறார் என்பதன் விளக்கமே மகாபாரதம் என்கிறார் மகாத்மா.

    இந்த மகாபாரத நிகழ்ச்சி பற்றித் தமிழில் ஓர் அழகிய விடுகதை உண்டு. `அத்தினத்துக்கும் ஓட்டைக் கைக்கும் ஆயிரம் காதம், ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்` என்பதே அந்த விடுகதை.

    அத்தினம் என்ற சொல் சூதாட்டம் நடந்த அஸ்தினாபுரி நகரத்தைக் குறிக்கும். `ஓட்டை` கை என்பது கண்ணன் வாழ்ந்த `துவார` கையைக் குறிப்பிடுகிறது. 

    அஸ்தினாபுரிக்கும் துவாரகைக்கும் ஆயிரம் காத தூரம் என்றாலும், பாஞ்சாலி பக்தியை விலையாய்க் கொடுத்து கண்ணன் தந்த சேலையைப் பெற்றுக்கொண்டாள், அதுவும் ஒருவகை வியாபாரம் அல்லவா என வியக்கிறது இந்த அழகான விடுகதை!

    இந்தக் கதை தொடர்பாக, இதன் நீட்சியாக, வேறொரு நாட்டுப் புறக்கதையும் உண்டு.

    துச்சாதனன் பற்றி இழுத்த துணி வளர்ந்து வளர்ந்து தரையில் ஒரு மலைபோல் குவிந்தது. அவையெல்லாம் கண்ணனின் நெசவுத் தறியில் நெய்யப்பட்ட அபூர்வ ஆடைகள் அல்லவா?

    எனவே அவற்றின் எழில் விவரிக்க இயலாததாய் இருந்தது. கடவுள் நெய்த ஆடைகளை மனிதர் நெய்த ஆடைகளோடு ஒப்பிட இயலுமா என்ன?

    அந்த ஆடைகளின் அழகைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள் கவுரவர்களின் மனைவியர் நூறுபேரும். அவற்றைத் தாங்கள் அணிந்துகொள்ள ஆசைகொண்டார்கள். அந்த ஆடைகள் அனைத்தையும் அள்ளி எடுத்துக் கொண்டு அந்தப்புரம் சென்றார்கள்.

    தாங்கள் ஏற்கெனவே அணிந்திருந்த உடையைக் களைந்துவிட்டு, புத்தம்புதிய சேலைகளை ஆர்வத்தோடு அணிந்து கொண்டார்கள்.

    இந்தப் பளபளக்கும் புதுச் சேலையை சபையில் உள்ள அனைவருக்கும் காட்டும் எண்ணத்தோடு புத்தாடை புனைந்து சபைக்கு வந்தார்கள்.

    அதற்குள் திரவுபதியின் ஆடையை இழுத்து இழுத்துச் சோர்ந்து போனான் துச்சாதனன். யானை பலம் கொண்ட அவன் கையும் வலிக்கத் தொடங்கியது.

    இனியும் இழுக்கத் தன்னால் இயலாது எனக் கருதிய அவன், தளர்ச்சி அடைந்து பாஞ்சாலியின் ஆடையைப் பற்றி இழுக்கும் செயலைக் கைவிட்டுவிட்டு, தன் சிம்மாசனத்தில் தொப்பென்று போய் அமர்ந்து நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

    துகிலுரியும் படலம் முடிந்ததை அறிந்த கண்ணன் கலகலவென்று நகைத்தான். துவாரகையில் இருந்தவாறே தன் கையைத் தட்டி உதறினான்.

    அடுத்த கணம் புதிதாய்த் தோன்றிய அத்தனை சேலைகளும் மறைந்தன. திரவுபதி ஏற்கெனவே தன் உடலை மூடியிருந்த பழைய ஆடையோடு காட்சி தந்தாள்.

    அந்தப்புரம் சென்று பழைய ஆடையைக் களைந்து புத்தாடையோடு வந்து நின்ற கவுரவர்களின் மனைவியர் அத்தனை பேரின் ஆடையும் அந்தரத்தில் மாயமாய் மறைந்தது!

    யாரை நிர்வாணப்படுத்த கவுரவர்கள் முயன்றார்களோ அந்தக் கவுரவர்களின் மனைவியர் அனைவரும் நின்ற கதியைப் பார்த்து சபையினர் தங்கள் விழிகளை மூடிக் கொண்டார்கள் என்கிறது அந்த நாட்டுப்புறக் கதை.

    கெடுவான் கேடு நினைப்பான் என்பதையும் தன் வினை தன்னைச்சுடும் என்பதையும் விளக்குகிற கதை இது. நாட்டுப்புற மக்களின் அறநெறி சார்ந்த மனத்தை விளக்கும் கதைகள் இவை.

    பெண்மையை இழிவுபடுத்த முனைபவர்களின் அழிவு நிச்சயம் என்ற உண்மையைத் தான் மகாபாரதம் காலம் காலமாய் போதித்துக் கொண்டிருக்கிறது.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • உயிர் நீப்பதற்கு முன்பாகத் தன் மனைவி கோசலையிடம் சிரவணனின் பெற்றோர் தனக்கிட்ட சாபத்தைச் சொல்லி புலம்பினார் என்கிறது ராமாயணம்.
    • உடல் ஊனத்தைக் கேலி செய்ததன் தண்டனையாகவே பாஞ்சாலி பின்னர் எண்ணற்ற துயரங்களை அனுபவிக்கிறாள் என்கிறது ஓர் அபூர்வமான மகாபாரதக் கதை.

    அட்சம் என்றால் வடமொழியில் கண் என்று பொருள். மீனாட்சி என்றால் மீன்போன்ற கண்ணை உடையவள் எனப் பொருள். மீனாட்சி என்ற சொல்லுக்கு இணையான இன்னொரு சொல் கயல்கண்ணி என்பது.

    கறுப்பு வெள்ளை ஆகிய இரு வண்ணங்களைக் கொண்டிருத்தல், வடிவத்தால் ஒன்றுபடல், நீரில் தோய்ந்திருத்தல் போன்ற பல தன்மைகள் கண்ணுக்கும் மீனுக்கும் பொதுவானவை. இதனாலேயே கண்களுக்கு மீன் உவமையாகச் சொல்லப்படுகிறது.

    பார்வதி தேவி பாரத தேசத்தின் மூன்று முக்கியத் திருத்தலங்களில் அருள்பாலிக்கிறாள். மதுரையில் அவள் மீனாட்சியாகவும் காஞ்சியில் காமாட்சியாகவும் காசியில் விசாலாட்சியாகவும் காட்சி தருகிறாள்.

    இந்த மூன்று திருத்தலங்களிலும் அவள் பெயர் அவளது அழகிய விழியை மையமாக்கியே அமைந்துள்ளது. மீன் போன்ற கண்களை உடையவள் மீனாட்சி என்றால் கருணை பொழியும் கண்களை உடையவள் காமாட்சி. விசாலமான கண்களை உடையவள் விசாலாட்சி.

    `நானாட்சி செய்துவரும் நான்மாடக் கூடலிலே மீனாட்சி என்ற பெயர் எனக்கு - கங்கை நீராட்சி செய்துவரும் வடகாசிப் பதிதனில் விசாலாட்சி என்ற பெயர் வழக்கு - உயர் கோனாட்சிப் பல்லவர்தம் குளிர்சோலைக் காஞ்சிதனில் காமாட்சி என்ற பெயர் எனக்கு - கொடும் கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் கொண்டபடிக் காட்சிதந்தேன் உனக்கு!'

    என்ற கண்ணதாசன் பாடல், தேவியே பாடுவதாக அமைந்துள்ள திரைப்பாடல்.

    * இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் கண்ணில்லாத கணவன்-மனைவி பற்றிய உருக்கமான சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது.

    பார்வையற்ற ஏழைத் தம்பதியான சாந்தாவன், ஞானவதி இருவருக்கும் பிறந்த மகன் சிரவண குமாரன். பெற்றோருக்குப் பணிவிடை செய்வதையே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டவன்.

    பெற்றோர்களைக் காவடியில் சுமந்து கொண்டு அவர்கள் விரும்பியபடி தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் அவர்களை அமர வைத்தான். அதிகாலையில் தம் பெற்றோரின் தாகம் தீர்க்க நதியிலிருந்து குடத்தில் நீர்கொண்டு வர நதிக்கரைக்குப் போனான்.

    அவன் குடத்தில் நீர் கொள்ளும் ஒலியைத் தொலைவிலிருந்து கேட்டார் வேட்டைக்கு வந்த மாமன்னர் தசரதர். இருள் பிரியாத நேரத்தில் ஒலியை மட்டுமே கேட்ட அவர், காட்டு விலங்கான யானை நீர் அருந்துவதாகத் தவறாக எண்ணினார். ஒலி வந்த திசை நோக்கி சப்தவேதி என்ற அம்பை எய்தார்.

    சிரவண குமாரன் அந்த அம்பு தாக்கிக் கீழே விழுந்தான். அவனது மரண ஓலம் கேட்டு ஓடோடி வந்த தசரதர், தான் செய்த செயலுக்கு மன்னிப்பு வேண்டிக் கதறினார்.

    இறக்கும் தறுவாயிலும் தன் பெற்றோரின் தாகம் தீர்க்கும் எண்ணமே அவன் மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது. குடத்து நீரைப் பெற்றோரிடம் கொண்டுசேர்க்க வேண்டிக் கொண்டு அவன் உயிர் நீத்தான்.

    குடத்து நீரோடு பெற்றோரைத் தேடிச் சென்றார் தசரதர். தற்செயலாக நடந்த விபரீதத்தைச் சொல்லி அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்.

    கடும் சீற்றம் கொண்ட சிரவணனின் பெற்றோர் தங்கள் மகன் இல்லாத உலகில் வாழ விரும்பவில்லை என்று தீ மூட்டச் சொல்லி அதில் பாய்ந்து உயிர் நீத்தனர். உயிர் நீக்கும் தறுவாயில் `நாங்கள் மகனைப் பிரிந்து அனுபவிப்பதைப் போன்ற புத்திர சோகத்தை நீயும் அனுபவிப்பாய்` எனச் சபித்தனர்.

    அந்தச் சாபம் அப்போது ஒருவகையில் தசரதருக்கு வரமாயிற்று. புத்திரன் இல்லாத அவருக்கு நான்கு புத்திரர்கள் பிறந்தார்கள்.

    ஆனால் அந்தச் சாபம் இறுதியில் பலிக்கவே செய்தது. தன் நான்கு புதல்வர்களும் அருகில் இல்லாத நேரத்தில், ராமனைக் கானகத்திற்கு அனுப்பியதால் ஏற்பட்ட தாளாத துக்கத்தில் தசரதர் உயிர் நீத்தார்.

    உயிர் நீப்பதற்கு முன்பாகத் தன் மனைவி கோசலையிடம் சிரவணனின் பெற்றோர் தனக்கிட்ட சாபத்தைச் சொல்லி புலம்பினார் என்கிறது ராமாயணம்.

    ராமாயணத்தில் அகலிகை கதை வருகிறது. கவுதமரின் மனைவி அகலிகை மேல் தகாத இச்சை கொண்டான் தேவர்களின் அரசன் இந்திரன். அதையறிந்த கவுதமர் அவன் உடல் முழுவதும் பெண்ணுறுப்புகள் தோன்றக் கடவது எனச் சபித்தார்.

    இந்திரன் தன் தவறுக்கு வருந்தி அழுதும் தொழுதும் சாப விமோசனம் வேண்டினான். அவன் உடலில் தோன்றிய பெண் உறுப்புகள் பிறர் பார்வையில் விழிகளாகவே தென்படும் என அவர் சாப விமோசனம் அருளினார்.

    இந்திரன் தன் உடலெங்கும் கண்களை உடையவனாக அதன் பின்னர் காட்சி தரலானான் என்கிறது இந்திரனைப் பற்றிய புராணக் கதை.

    * பார்வையற்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை மகாபாரதம் சித்தரிக்கிறது. கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரர் பிறவியிலேயே பார்வையற்றவர்.

    அவர் மனைவியான காந்தாரி தன் கணவர் அடையாத பார்வையின்பத்தைத் தானும் அடைய மறுத்துத் தன் விழிகளை வாழ்நாள் முழுதும் துணியால் கட்டிக் கொண்டிருந்தாள் என்கிறது மகாபாரதம்.

    பாண்டவர்கள் கட்டிய மாளிகைக்கு அவர்கள் அழைப்பின் பேரில் விஜயம் செய்கிறான் துரியோதனன். அந்த மாளிகையின் தரை பளிங்குத் தரையாக மின்னுகிறது. அதில் நீர் எது நிலம் எது என்று தெரியாமல் துரியோதனன் தடுமாறுகிறான்.

    அவன் தடுமாற்றத்தை உப்பரிகையிலிருந்து பார்க்கும் பாஞ்சாலி கலகலவென்று நகைக்கிறாள். நகைப்பதோடு நிற்கவில்லை. `உன் தந்தைதான் பார்வையற்றவர் என்றால் நீயுமா?` என வேறு கேட்டுவிடுகிறாள்.

    அந்தச் சொல்லின் விளைவாக துரியோதனன் மனத்தில் வஞ்சினம் உருவாகிறது. அதனால் மூண்டதே பாரதப் போர். உடல் ஊனத்தைக் கேலி செய்ததன் தண்டனையாகவே பாஞ்சாலி பின்னர் எண்ணற்ற துயரங்களை அனுபவிக்கிறாள் என்கிறது ஓர் அபூர்வமான மகாபாரதக் கதை.

    பார்வையற்ற திருதராஷ்டிரன் மகாபாரதப் போர் நிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் அறிந்துகொள்ள விரும்பினான்.

    ஞானக் கண் பெற்றிருந்த சஞ்சயன் திருதராஷ்டிரனின் அரண்மனையில் இருந்தவாறே ஞானக் கண்ணால் போர்க்கள நிகழ்வுகளைக் கண்டு திருதராஷ்டிரனிடம் உள்ளது உள்ளபடி விவரித்தான் என்றும் சொல்கிறது மகாபாரதம்.

    பாரத தேசத்தில், அன்னை பார்வதி தேவி குடிகொண்ட முக்கியமான ஆலயங்கள் சக்தி பீடங்களாகப் போற்றப்படுகின்றன.

    தந்தை தட்சனால் அவன் நடத்தும் யாகத்தில் பார்வதி தேவியாகிய தாட்சாயணி அவமதிக்கப்பட்டாள். அவள் தட்சன் தந்த உடல் வேண்டாமென அதைத் துறந்து அழிந்துபோனாள்.

    தன் மனைவி தாட்சாயணியின் உடலைச் சுமந்துகொண்டு கடும் சீற்றத்தோடு ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான்.

    சிவன் தொடர்ந்து ஆடினால் உலகம் அனைத்தும் அழிந்து போகுமே? சிவனின் ஆட்டத்தை நிறுத்த, திருமால் தன் சக்கராயுதத்தால் தாட்சாயணியின் உடலை வெட்டி வீழ்த்தினார்.

    அந்த உடல் பகுதிகள் பாரத தேசத்தில் ஐம்பத்தியோரு இடங்களில் விழுந்தன. அந்த ஐம்பத்தியோரு இடங்களே ஐம்பத்தியோரு சக்தி பீடங்களாயின. கோலாப்பூர் மகாலட்சுமி சக்தி பீடம், பார்வதி தேவியின் விழிகள் விழுந்த இடம் எனக் கூறப்படுகிறது.

    * `பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒருவிழியால் என்னை நீ பார்த்தாலும் போதும் வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்!' எனக் கவிஞர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் எழுதிய முருகனைப் பற்றிய பக்திப் பாடல் ஒன்று உண்டு. முருகனுக்கு ஆறுமுகங்கள் என்பதால் பன்னிரண்டு கண்கள்.

    முருகப்பெருமானுக்குப் பதினெட்டுக் கண்கள் என்று கூறும் மரபும் உண்டு. சிவனது நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பில் தோன்றியவன் அல்லவா முருகன்?

    எனவே தந்தையைப் போலவே முருகனுக்கும் ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் உண்டு என்றும் அதனால் மொத்தம் அவனுக்குள்ள கண்கள் பதினெட்டு என்றும் சொல்வதுண்டு.

    * அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அலங்காரத்தில் பக்தர்களின் விழிக்குத் துணையாயிருப்பது முருகப் பெருமானின் திருவடிகள்தான் என்ற கருத்து சொல்லப்பட்டுள்ளது.

    `விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றாமொழிக்குத் துணை முருகாஎனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணைஅவன் பன்னிரு தோளும் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.'

    நமது விழிகளுக்குத் துணையாவது முருகனின் மெல்லிய மலர்ப்பாதங்கள். உண்மை மாறாத சொல்லுக்குத் துணை முருகனின் திருநாமங்கள்.

    முன்பு செய்த பழியைத் தரும் பாவங்களை அகற்றத் துணையாவது முருகனது பன்னிரண்டு தோள்கள். அச்சமுடைய இந்த வாழ்க்கை என்னும் நெடுவழியில் துணையாவது திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள கந்தனின் வேலும் மயிலுமே என்கிறார் அருணகிரி நாதர்.

    * ஆயிரம் கண்ணுடையாள் என மாரியம்மனைக் குறிப்பிடுவதுண்டு. மாரியம்மன் தன் ஆயிரம் கண்களால் உலகில் நடைபெறும் அத்தனையையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறாள்.

    மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் டி. குண்ணத்தூர் அருகில் அன்னை ஸ்ரீ ஆயிரம் கண்ணுடையாள் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் நாற்பத்தியோரு அடி உயரமான அன்னையின் திருவுருவச் சிலை அமைந்துள்ளதை தரிசிக்கலாம்.

    ஆண்டவனைத் தரிசிக்க ஆலயங்களுக்குச் செல்கிறோம். நமது விழிகளால் தான் கடவுளைத் தரிசிக்கிறோம். புறக்கண்ணால் கண்ட கடவுளை அகக்கண்ணாலும் காண வேண்டித்தான் பின்னர் தியானம் செய்கிறோம்.

    எங்கும் பரவியுள்ள இறைச்சக்தி தன் சூட்சுமமான விழிகளால் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு நமக்கு இருக்க வேண்டும்.

    அந்த விழிகளாலேயே நம்மேல் அருளைப் பொழியவும் அந்த இறைச்சக்தி காத்திருக்கிறது என்ற உண்மையைப் புரிந்துகொண்டால் நம் வாழ்வில் எந்நாளும் இன்பமே அன்றித் துன்பமில்லை.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்தார் பிரம்மதேவர்.
    • கம்ப ராமாயணம் சீதாதேவியை அவள் இருந்த குடிலோடு அப்படியே பெயர்த்து ராவணன் எடுத்துச் சென்றதாகச் சொல்கிறது.

    குற்றவாளிகள் தண்டனை பெற்றால் இருக்குமிடம் சிறை. ஆனால் அந்தச் சிறை புராணங்களிலும் வரலாற்றிலும் பல ஆன்மிக அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளது.

    பிரம்மன் ஒருமுறை சிவனை தரிசிக்கக் கயிலாயம் வந்தார். அங்கு சிறுவன் முருகன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவன்தானே என்று கவனியாததுபோல் அலட்சியமாகச் சென்றார் பிரம்மதேவர்.

    வழிமறித்தான் முருகன். `நீர் செய்யும் தொழில் என்ன?' என்று வினவினான். `படைப்புத் தொழில்!' என கம்பீரமாக விடையளித்தார் பிரம்மதேவர்.

    `படைப்புத் தொழில் செய்வதாகச் சொல்கிறீரே? உமக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?' எனக் கேட்டான் முருகன்.

    ஒளவைப் பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்டவன் தானே முருகன்? கந்தக் கடவுளுக்குக் கேள்வி கேட்பதில் எப்போதும் ஒரு தனி சுவாரஸ்யம்.

    பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்தார் பிரம்மதேவர். `பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத உமக்கு படைப்புத் தொழில் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?` என்று கேட்ட முருகன், அவர் தலையில் ஒரு குட்டுக் குட்டி அவரைச் சிறையிலிட்டான்.

    பிரம்ம தேவர் சிறையில் இருந்ததால் படைப்புத் தொழில் தடைபட்டது. உலகில் உயிர்களே உற்பத்தி ஆகவில்லை. தேவர்கள் கலக்கமடைந்து சிவனிடம் முறையிட்டனர்.

    சிவன் இனியும் சிவனே என்றிருத்தல் சரியல்ல என, முருகனைத் தேடி ஓடோடி வந்தார். பிரம்மனை விடுவிக்கச் சொன்ன அவர், `பிரம்மனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியவில்லை என்கிறாயே, உனக்கு அதன் பொருள் தெரியுமா?` என வினவினார்.

    `இப்படிக் கேட்டால் எப்படி? நீங்கள் சீடனாக அமர்ந்து கேட்டால் நான் குருவாக அதன் பொருளை உபதேசம் செய்வேன்!` என்றான் முருகன்.

    அப்படியே சிவன் சீடனாக அமர்ந்து கேட்க, அவர் திருச்செவியில் பிரணவ மந்திரத்தின் பொருளை முருகன் உபதேசம் செய்தான் என்றும், பிறகு பிரம்மதேவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்றும் சொல்கிறது கந்த புராணம்.

    முருகன் தகப்பன் சாமி என்று பெயர் பெறக் காரணமாக இருந்த நிகழ்வு பிரம்மதேவர் சிறையில் அடைக்கப் பட்ட நிகழ்வுதான்.

    ராமாயணத்தில் ராவணன் சீதாதேவியைத் தூக்கிச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். சீதை சிறைப்பட்டிருந்த பகுதியே அந்த இதிகாசத்தில் மிக முக்கியமான பகுதி. அதனால்தான் ராமாயணம் `சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் நூல்` என்று சொல்லப்படுகிறது.

    ராவணன் சீதையைச் சிறையெடுத்ததைப் பற்றிச் சொல்லும்போது அவன் தேவியை எப்படித் தூக்கிச் சென்றான் என்பதை ஒவ்வொரு ராமாயணமும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறது. வால்மீகி, ராவணன் தன் கரங்களால் சீதையைத் தொட்டுத் தூக்கிச் சென்றதாகச் சொல்கிறார்.

    இது தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதம் என்பது மட்டுமல்ல, கெட்ட எண்ணத்துடன் பெண்ணைத் தொட்டால் தலைவெடிக்கும் என்று ராவணனுக்குச் சாபம் இருக்கிறது. எனவே ராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கியிருக்க வாய்ப்பில்லை என முடிவு செய்கிறார் கம்பர்.

    கம்ப ராமாயணம் சீதாதேவியை அவள் இருந்த குடிலோடு அப்படியே பெயர்த்து ராவணன் எடுத்துச் சென்றதாகச் சொல்கிறது. சீதாப்பிராட்டி அசோக மரத்தடியில், தன்னைச் சந்திக்க வந்த அனுமனிடம் அருகேயிருக்கும் குடிலைக் காட்டி அது லட்சுமணன் கட்டிய குடில் என்றும் அதோடு அப்படியே ராவணன் தன்னைத் தூக்கி வந்ததாகவும் கூறுகிறாள்.

    துளசிதாசர் வேறு வகையாகக் கதையை அமைக்கிறார். ராவணன் சீதையைத் தூக்க வருவதற்கு முன்பாக சீதை தன் நிழலால் இன்னொரு நிழல் சீதையைப் படைத்துவிட்டு, தான் வானுலகம் சென்றுவிடுகிறாள். பிறகு அக்கினிப் பிரவேசத்தின்போது நிழல் சீதை அக்கினியில் மறைய நிஜ சீதை வெளிப்படுகிறாள் என எழுதுகிறார் துளசிதாசர்.

    அசோக மரத்தடியில் சிறைப்பட்டு சீதை வாழ்ந்த வாழ்வு துயர காவியமாக எல்லா ராமாயணங்களிலும் விரிவாகப் பேசப்படுகிறது. பிரிவுத் துயர் என்பதை விப்ரலம்பம் என்கின்றன வடமொழி நூல்கள். அது ஒரு தனி ரசம் எனப் பேசுகின்றன வடமொழிக் காவியங்கள்.

    சீதை சிறையிருந்தபோது அடைந்த பிரிவுத் துயர் சார்ந்த வர்ணனைகளே ராமாயணத்தின் ருசியை அதிகமாக்குகின்றன.

    ராமபக்தரான ராமதாசரின் இயற்பெயர் கோபண்ணா. அரசாங்கத்திற்காக வரிவசூல் செய்யும் வேலையில் இருந்தவர் அவர். வரிப்பணத்தில் ராமபிரானுக்குக் கோயில் கட்டினார்.

    ஆறு லட்சம் வராகன் செலவில் கட்டப்பட்ட ஆலயத்தைப் பார்த்து மக்கள் மகிழ்ந்தனர். அவர்களே அவரை ராமதாசர் என அழைக்கத் தொடங்கினர்.

    மக்கள் பாராட்டினாலும் வரிப்பணத்தில் கோவில் கட்டினால் மன்னன் தானீஷா ஒப்புக் கொள்வானா? அவரைச் சிறையில் அடைத்தான் மன்னன். பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் வாடினார் ராமதாசர். பெரும் கொடுமைகளை அனுபவித்தார்.

    அப்போது அவர் பாடிய ராமபக்திப் பாடல்கள் உருக்கமானவை. `உன்னைக் கும்பிட்ட கைகளைத் தடிகொண்டு அடிக்கிறார்களே ராமா!` என்றும், `உனக்குக் கிரீடம் செய்து சூட்டிய என் கைக்கு நீ விலங்கு பூட்டலாமா?` என்றும் கல்லும் கசிந்துருகும் வகையில் கவிதைகளில் கேட்டார் அவர்.

    `உனக்காக நான் செலவழித்த பணத்தை நீயே மன்னருக்குக் கொடுத்துவிடலாகாதா?` எனவும் வேண்டினார்.

    ஒருநாள் நள்ளிரவில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ராம்சிங் லட்சுமண் சிங் என்ற பெயர்களில் ராமதாசரின் சேவகர்கள்போல் வந்த ராம லட்சுமணர்கள், ராமதாசர் செலவு செய்த ஆறுலட்சம் வராகனை மன்னரிடம் திருப்பி அளித்தார்கள்.

    அப்படி அளித்ததற்கு ரசீது பெற்று, அந்த ரசீதைச் சிறையிலிருந்த ராமதாசரின் அருகில் வைத்துவிட்டு மறைந்து விட்டார்கள்.

    வந்தது ராம லட்சுமணர்களே என அறிந்து பாதுஷா மனம் திருந்தியதையும் ராமதாசர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதையும் அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் ராமதாசரின் புகழ் மேலோங்கியதையும் அவரது வரலாறு சொல்கிறது.

    தன் சகோதரி தேவகிக்குப் பிறக்கும் குழந்தைதான் தன்னைக் கொல்லும் என்பதை அசரீரி மூலம் அறிந்த அரக்கன் கம்சன், தேவகியையும் அவள் கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். தேவகிக்குப் பிறந்த குழந்தைகளை ஒவ்வொன்றாகச் சுவரில் அடித்துக் கொன்றான்.

    தேவகி துடிதுடித்தாள். திருமாலைச் சரணடைந்தாள். திருமால் தேவகியின் மகனாக, கண்ணக் குழந்தையாக அவதரித்தார்.

    கொட்டும் மழையில் குழந்தைக் கண்ணனைக் கூடையில் தாங்கித் தலைமேல் ஏந்தியவாறு நந்தகோபர் இல்லத்தில் அவனை விட்டுவிட எண்ணி நடந்தார் வசுதேவர்.

    என்ன ஆச்சரியம்! சிறைக் காவலர்கள் எல்லாம் அப்போது தாமாகவே உறக்கத்தில் ஆழ்ந்தனர். சிறைக் கதவுகளின் பூட்டுக்கள் எல்லாம் தாமாகவே திறந்துகொண்டன.

    கடவுள் நினைத்தால் சம்சாரச் சிறையிலிருந்தே ஒருவரை விடுவிக்க முடியும் என்கிறபோது, கடவுளுக்காக ஒரு சாதாரணச் சிறையின் பூட்டுக்கள் திறக்காதா என்ன?

    இதிகாசக் கடவுளர் இருவரில் ராமன் பிறந்தது அரண்மனையில். கண்ணன் பிறந்தது சிறையில். ராமன் ஷத்திரிய குலத்தில் அவதரித்தான். கண்ணன் இடையர் குலத்தில் தோன்றினான்.

    ராமன் பிறந்தது நவமியில். கண்ணன் பிறந்தது அஷ்டமியில். ராமன் ஏகபத்தினி விரதன். கண்ணன் பற்பல பெண்களை மணந்தவன்.

    ராமனும் கண்ணனும் பல வகையில் வேறுபட்டாலும் அவர்கள் இருவருமே திருமாலின் அவதாரங்கள் என்ற வகையில் ஒன்றுபடுகிறார்கள்.

    அரவிந்தருக்குக் கண்ணன் காட்சி கொடுத்ததைப் பற்றி அரவிந்தரின் புனித வரலாறு கூறுகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் வாழ்ந்தவர் அண்மைக் காலக் கண்ணன் அடியவரான தியாகி அரவிந்தர்.

    அவர் தாம் சிறையில் கிருஷ்ண தரிசனம் பெற்ற உண்மையை உத்தர்பாரா என்ற இடத்தில் மேடையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்தார். அந்தச் செய்தி வரலாற்றில் பதிவாகியுள்ளது.

    செய்தித்தாள்கள் அந்தச் செய்தியைப் பிரசுரித்துள்ளன. பாரதியார் அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஒப்புக் கொண்டுள்ளார்.

    கண்ணனிடம் கீதையை நேரடியாகக் கேட்டவர் அர்ச்சுனன், அரவிந்தர் என இருவர். அர்ச்சுனன் கேட்டது மகாபாரதப் போர் நடந்தபோது. அரவிந்தர் கேட்டது சுதந்திரப் போர் நடந்தபோது.

    அர்ச்சுனன் கீதை கேட்டது தேர்த்தட்டில். அரவிந்தர் கீதை கேட்டது சிறைக் கூடத்தில்.

    அரவிந்தருக்குக் கண்ணன் சிறையில் காட்சி கொடுத்தது இயல்புதானே? கண்ணன் பிறந்ததே சிறையில் தானே?

    ஆங்கிலேய ஆட்சியில் சுதந்திரத் தியாகிகள் பலர் சிறையிலிருந்தபோது, நம் ஆன்மிகத்திற்குப் பெரும் தொண்டு புரிந்திருக்கிறார்கள்.

    சிறையில்தான் வினோபாஜி பகவத் கீதைக்கு உரை விளக்கம் எழுதினார். சக கைதிகளுக்கு கீதையைக் கற்பித்த அவர், பின்னர் தான் கற்பித்தவற்றையே நூலாக்கினார்.

    வ.உ. சிதம்பரம் பிள்ளை சிறைவாசத்தின்போது, ஜேம்ஸ் ஆலன் என்ற தத்துவஞானியின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். உளவியல் சார்ந்த உயர்ந்த ஆன்மிக நூல்கள் அவை.

    அவ்விதம் அவர் மொழிபெயர்த்த `அகமே புறம், மனம்போல வாழ்வு, மெய்யறிவு` உள்ளிட்ட நூல்கள் பக்க அளவில் குறைந்ததேயாயினும் வாழ்க்கையின் அடிப்படை விதிகளைக் கற்பிக்கும் உன்னதமான பணியைச் செய்கின்றன. தமிழின் பொக்கிஷங்கள் அவை.

    மகாத்மா காந்தி, ராஜாஜி, திலகர் போன்றோரும் தங்களின் சிறைவாசத்தின்போது உயர்ந்த ஆன்மிக நூல்களைப் படைத்திருக்கிறார்கள்.

    குற்றவாளிகளை அடைக்கும் இடம்தான் சிறை. ஆனால் நம் தெய்வங்களும் மகான்களும் சிறையில் வாழ்ந்து சிறைக்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறார்கள்.

    அப்படியானால் தெய்வங்கள் தோன்றிய இடத்தை என்னவென்று அழைப்பது? அது சிறையா ஆலயமா? மகான்கள் வாழ்ந்த இடம் என்ன பெயர் பெறும்? சிறையா தவச்சாலையா?

    புராண காலத்திலும் வரலாற்றுக் காலத்திலும் சிறையும் ஆன்மிகத்தை வளர்த்தது என்ற வகையில் நாம் சிறைக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்!

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த திருவல்லம் என்ற ஊரில் உள்ளது விஸ்வநாதேஸ்வரர் ஆலயம்.
    • நந்தி சிலை இல்லாத சிவபெருமானின் ஆலயம் ஏது? ஈசனின் கருவறைக்கு வெளியே வீற்றிருந்து நந்தி அருள்பாலிப்பார்.

    சிவபெருமானின் வாகனம் நந்தி. அவர் பக்தர்களால் நந்திதேவர் எனத் தனிக் கடவுளாகவும் போற்றப்படுகிறார். சிவனை நோக்கியபடி சிவாலயங்களில் நந்திதேவர் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

    ராவணனுக்கு நந்தியின் சாபம் இருந்தது. அதனாலேயே அவன் அழிந்தான்.

    தன் வழிபடு கடவுளான சிவபெருமானை அவர் வீற்றிருக்கும் இமயமலையோடு பெயர்த்து எடுத்துச் செல்ல முயன்றான் அவன். அப்படிச்செய்வது தகாது என நந்தியம்பெருமான் ராவணனுக்கு அறிவுறுத்தினார்.

    அந்த அறிவுரையைக் கேட்காத ராவணன் நந்தியைக் குரங்கு முகம் கொண்டவன் எனக் கேலி பேசினான். கடும் சீற்றம் கொண்டார் நந்தி தேவர்.

    `என்னைக் குரங்கோடு ஒப்பிட்ட நீ குரங்குகளையே எதிரிகளாகப் பெற்று குரங்குகளாலேயே அழிவாய்` எனச் சாபமிட்டார்.

    அதன்படி சுக்கிரீவன் தலைமையில் சீதையை மீட்பதற்காக ராம லட்சுமணர்களோடு எண்ணற்ற குரங்குகள் வந்து போரிட்டதையும் சுக்கிரீவன் என்ற குரங்கு ராவணன் மூக்கைக் கடித்ததையும் ராம ராவண யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டதையும் ராமாயணம் பேசுகிறது. பலித்தது நந்தி சாபம்.

    சோழ நாட்டில் ஆதனூர் என்ற கிராமத்தில் வாழ்ந்தவன் நந்தனார் என்று இன்று போற்றப்படும் நந்தன். புலைப்பாடியில் பிறந்த நந்தன் தீவிர சிவ பக்தனாகவும் விளங்கினான்.

    அவன் ஒருசமயம் அருகேயுள்ள திருப்புன்கூர் கோவிலுக்குச் சென்றான். அங்கே கோவில்கொண்டுள்ள சிவலோக நாதரைக் கண்ணாரக் கண்டு தரிசிக்க விழைந்தான்.

    ஆலயப் பிரவேசத்திற்கு அவனைப் போன்றோர்க்கு அருகதை இல்லாத காலம். தேரடியில் நின்றே உள்ளம் உருகும் பக்தியோடு சிவதரிசனம் செய்ய முற்பட்டான்.

    ஆனால் என்ன சங்கடம்! கோவில் வாயிலில் பெரிய நந்தி ஒன்று அவன் சிவனைக் காண இயலாதவாறு வழிமறைத்து நின்றது. `சற்றே இந்த நந்தி விலகாதா, நான் சிவதரிசனம் செய்யும் பேறு பெற மாட்டேனா?' என அவன் உள்ளம் ஏங்கியது.

    அந்த ஏக்கத்தை உணர்ந்தார் சிவலோக நாதர். அவர் தன் வாகனமான நந்தியைப் பார்த்து, `சற்றே விலகியிரும் பிள்ளாய்! நம் சன்னிதானம் மறைக்குதாம்' என்று கூறினார்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    இறைவன் ஆணைக்குக் கட்டுப்பட்ட நந்தியும் நந்தன் தரிசனம் செய்ய வசதியாகச் சற்றே விலகி அமர்ந்தது. இந்தச் சம்பவம் சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    நந்தன் சரித்திரம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியார் நந்தன் சிவனைப் பார்க்க ஏங்கியதை அழகிய கீர்த்தனையாகப் பாடியுள்ளார்.

    `வழிமறைத்திருக்குதே...மலைபோலே ஒரு

    மாடு படுத்திருக்குதே...

    தேரடியில் நின்று தரிசித்தாலும் போதும்

    கோவில்வர மாட்டேனே ஐயே...

    ஓரடி விலகினால் போதும் இங்கே நின்று

    உற்றுப் பார்க்கச் சற்றே விலகாதோ மாடு...'

    திருப்புன்கூர் ஆலயத்தில் சிவ சன்னிதியின் முன் சிறிது விலகி அமர்ந்திருக்கும் நந்தியை இப்போதும் தரிசிக்கலாம்.

    வடஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த திருவல்லம் என்ற ஊரில் உள்ளது விஸ்வநாதேஸ்வரர் ஆலயம். எல்லா ஆலயங்களிலும் நந்தி அமர்ந்த நிலையில்தான் இருக்கும். ஆனால் திருவல்லம் ஆலய நந்தி இறைவனுக்குப் புறமுதுகு காட்டியவாறு நின்ற நிலையில் உள்ளது.

    ஒருமுறை இறைவன்மேல் மிகுந்த பக்தி கொண்ட கோவில் அர்ச்சகர் ஒருவர், சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் கொண்டு வந்தபோது அவரை ஓர் அரக்கன் வழிமறித்துப் பெரும் தொல்லை கொடுத்தான்.

    இது பொறுக்காத அர்ச்சகர் வருத்தத்தோடு இறைவனிடம் முறையிட்டார். இறைவன் நந்திக்குக் கண்ஜாடை காட்டினார். நந்திதேவர் உடனடியாக அசுரனை அடித்துத் துரத்தினார்.

    அவன் மறுபடி வருகிறானா எனக் கண்காணிக்கவே நந்தி அந்த ஆலயத்தில் இப்போதும் கூட இறைவனுக்குப் புறமுதுகு காட்டி நிற்பதாகக் கூறப்படுகிறது.

    விருத்தாசலத்திற்கு அருகே உள்ளது பெண்ணாடம் என்ற அழகிய சிற்றூர். இங்குள்ள கோவிலில் கொழுந்தீசராக சிவ பெருமான் காட்சி தருகிறார்.

    ஒருமுறை பெண்ணாடத்தில் பெருமழை பிடித்துக் கொண்டது. ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து பெண்ணாடம் தீவுபோல் ஆகியது.

    மக்கள் எங்கும் செல்ல இயலாமல் வெள்ளப் பெருக்கால் சிறைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஊர்த் தெய்வமான கொழுந்தீசரிடம் மனமுருகி வேண்டினார்கள்.

    கருணை கொண்ட இறைவன் நந்தி தேவரிடம் கட்டளை இடவே நந்தி வெள்ளம் முழுவதையும் பருகி மக்களைக் காப்பாற்றினார்.

    அந்த நாளிலிருந்து நந்தி வெள்ளத்தைப் பருக வசதியாக இக்கோவிலில் வாயிலை நோக்கியபடிதான் வீற்றிருக்கிறார்.

    நந்தி சிலை இல்லாத சிவபெருமானின் ஆலயம் ஏது? ஈசனின் கருவறைக்கு வெளியே வீற்றிருந்து நந்தி அருள்பாலிப்பார். திருச்சி போன்ற இடங்களில் பெரிய நந்தி சிலைகள் தனியேயும் காணப்படும்.

    ஆனால் பெங்களூருவில் பசவன்குடி என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் ஒரு சிறப்பு. இங்கு நந்தியே மூலவராக இருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த நந்தி கோவில், ஒரு குன்றின்மேல் அமைந்துள்ளது.

    முன்னொரு காலத்தில் விவசாய நிலமாக இருந்த இந்தப் பிரதேசத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டதாம். ஒரு மாடு கடலைச் செடிகளைத் தின்று சேதப்படுத்தவே விவசாயிகள் அந்த மாட்டைத் தடியால் அடித்துத் தாக்கினர்.

    அங்கேயே காலை மடக்கி அமர்ந்த மாடு, அமர்ந்தபடியே கல்லாகி விட்டதாம். அத்துடன் நில்லாமல் அந்தக் கல் சிலை எல்லோரும் பார்த்திருக்கும்போதே கிடுகிடுவென வளரவும் தொடங்கியதாம்.

    செய்வதறியாத மக்கள் அச்சத்தோடு சிவனை வணங்கித் துதிக்க, வானில் ஓர் அசரீரி ஒலித்தது. நந்தியின் காலடியில் உள்ள திரிசூலத்தை எடுத்து நந்தியின் நெற்றியில் சற்றுநேரம் வைக்குமாறு சொல்லிற்று அசரீரி.

    அசரீரியின் கட்டளைப்படிச் செய்யவே சிலையின் வளர்ச்சி நின்றது. பின்னர் நந்தியை சாந்தப்படுத்துவதற்காக மக்கள் அங்கே அந்த நந்திக்குக் கோவில் அமைத்து வழிபடத் தொடங்கினர் என்கிறது இந்தக் கோவிலின் தல வரலாறு.

    சைவ சமயத்தில் முதல் குருவாக விளங்குபவர் சிவனின் வாகனமான நந்தி தேவர். சிவாலயங்களில் சிவ சன்னிதியின் முன் சிவனையே பார்த்தவாறு அமர்ந்திருக்கும் இவரைச் சித்தர் என்றும் கூறுவதுண்டு.

    மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நந்தியின் முத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே நந்தி வழிபாடு என்பது பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை உடையது.

    சிவபெருமான் தாந்திரிக ஞானத்தைத் தம் மனைவியான பார்வதி தேவிக்குக் கற்பித்தார். அன்னை பார்வதியிடமிருந்து அந்த ஞானத்தைப் பெற்றார் நந்தி தேவர். அதைத் தன் சீடர்களுக்கு அவர் கற்பித்தார்.

    சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர், திருமூலர், வியாக்ர பாதர், பதஞ்சலி ஆகியோரெல்லாம் நந்தி தேவரின் சீடர்கள். அந்தச் சீடர்கள் குருவின் கட்டளைப்படி தாந்திரிக ஞானத்தை உலகின் பல்வேறு திசைகளுக்கும் சென்று பரப்பினார்கள்.

    பிரதோஷ காலங்களில் சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே தலை மத்தியில் நின்று நடனம் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அந்த நேரங்களில் நந்திக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    பிரதோஷ காலத்தில் நந்தியை தரிசித்தால் பக்தர்களின் தோஷமெல்லாம் விலகி அவர்கள் வாழ்வில் சந்தோஷம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

    நந்தி சிவலோகத்தின் தலைமைக் காவலர். சிவனைப் பார்க்க யார் வந்தாலும் அவர்களைத் தடுக்க நந்திக்கு அதிகாரம் உள்ளது. எனவே அவர் அதிகார நந்தி எனவும் பெயர் பெறுகிறார்.

    பார்வையாளர்களைத் தடுக்கும் அதிகாரம் மட்டுமல்ல, ஆலயங்களைக் காக்கும் அதிகாரமும் நந்தி தேவருக்கே உரியது.

    அதனால்தான் திருக்கோவில் மதில் சுவர்களில் நான்கு புறங்களிலும் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

    சென்னையில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் ஆயலத்தில் பிரமாண்டமான அதிகார நந்தி வாகனம் உள்ளது. தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி தான் அந்த நந்தி வாகனத்தைச் செய்து கொடுத்தவர்.

    தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம் போன்ற பல சாஸ்திரங்களைத் தோற்றுவித்தவர் நந்தி தேவர்தான். இவரை நந்திகேசுவரர் என்ற முனிவராகவும் கருதுவதுண்டு.

    நடனக்கலையில் விருப்பமுள்ளோரும் இசை பயில்வோரும் நந்திதேவனை வழிபட்டால் கலைகளில் சிறந்தோங்க முடியும்.

    நந்திமலை எனப் பெயர்பெற்ற ஒரு மலை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ளது. ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த நந்தி கோவில் இந்த மலையில் உண்டு.

    நந்தி மத்தளம் வாசிப்பதில் கை தேர்ந்தவர். நந்தி மத்தளம் கொட்ட, நாரதர் யாழ் மீட்ட சிவபெருமான் நடனமாடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    சிவபெருமானின் வாகனம் நந்தி என்பது மட்டுமல்ல, சிவனது கொடியில் காட்சி தருபவரும் நந்திதான்.

    தஞ்சைப் பெரிய கோவில் நந்தி ஒரே கல்லால் ஆனது. அதில் ஒட்டுவேலை எதுவும் கிடையாது.

    ராமாயணத்தில் வரும் அனுமன் நந்திகேஸ்வரரின் அவதாரமே என்ற கருத்தும் உண்டு.

    மதுரையில் ஆவணி மூல வீதியில் மாக்காளை என்று சொல்லப்படும் சுதையால் அமைந்த பிரமாண்டமான நந்தி சிலை ஒன்று உண்டு. இத்தகைய நந்தியை சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர் ஆலயங்களிலும் தரிசிக்கலாம்.

    வாகனமான நந்தி வேறு. வாகனத்தில் அமரும் சிவன் வேறு என நாம் பொதுவாக நினைப்போம். அந்தக் கருத்து அவ்வளவு சரியல்ல.

    தானும் நந்தியும் வெவ்வேறல்ல, ஒருவரே என சிவபெருமான் நந்தி புராணத்தில் தெள்ளத் தெளிவாக அறிவிக்கிறார்.

    எனவே நந்தியை வணங்குவது என்பது சிவபெருமானை வணங்குவதே ஆகும்.

    நம் முன்னேற்றத்தில் நேரும் தடைகளை யெல்லாம் விலக்கும் நந்திதேவரை வணங்கி நந்தி அருளையும் சிவன் அருளையும் ஒருசேரப் பெறுவோம்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • நம் கடவுளரில் சொல்லாற்றலுக்காகப் புகழப்படும் கடவுள் என்றால் அது அனுமன்தான்.
    • சீதை அனுமன் சிரசில் வெற்றிலைய தூவியதன் அடையாளமாகத் தான் ஆலயங்களில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தப்படுகிறது.

    பாரத தேசமெங்கும் தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் உள்ள அனுமனுக்கான ஆலயங்கள் எண்ணில் அடங்காதவை. தொண்டனாக இருந்து தெய்வ நிலைக்கு உயர்ந்த அனுமனை மக்கள் கோயில் கட்டிக் கொண்டாடுகிறார்கள்.

    கேரளத்தில் மட்டும் நாலம்பலம் என ராம லட்சுமண பரத சத்துருக்கனர்களுக்குத் தனித்தனிக் கோயில்கள் உண்டு. மற்றபடி லட்சுமண பரத சத்துருக்கனர்களுக்கு வேறெங்கும் தனி ஆலயம் இருப்பதாகத் தெரியவில்லை.

    ராமன் கோயில்களில் அனுமனுக்கு சன்னிதி உண்டு. அனுமனுக்குத் தனியாகவும் கோயில்கள் உண்டு.

    ஒருவகையில் அனுமன் கண்ணனுக்கும் திருமாலுக்கும் இணையானவன் என்று சொல்லலாம்.

    கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதை சொல்லும்போது தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினான்.

    வாமனாவதாரம் எடுத்த திருமால் மகாபலி முன் மூன்றடி மண் வேண்டி உலகளந்த பெருமாளாய் விஸ்வரூபம் கொண்டு நின்றான்.

    அனுமனும் சுந்தரகாண்டத்தில் அசோக மரத்தடியில் சோகத்தோடு வீற்றிருந்த சீதாப்பிராட்டி முன் தன் விஸ்வரூபத்தைக் காட்டினான் என ராமாயணம் சொல்கிறது.

    அப்போது சூரியனும் சந்திரனும் அனுமனின் செவிகளில் இரு குண்டலங்கள் போல் தென்பட்டன என எழுதுகிறார் கம்பர். அனுமனின் தலைமுடியில் சிக்கிய நட்சத்திரக் கூட்டங்கள் கானக மரங்களில் உலவும் மின்மினிப் பூச்சிகளைப் போல் காணப்பட்டன என்கிறார். பிறகு சீதை கேட்டுக்கொண்டதன் பேரில் மறுபடி தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டான் அனுமன்.

    அனுமன் மிகச் சிறிய வடிவமோ மிகப் பெரிய வடிவமோ எந்த வடிவமும் எடுக்கும் ஆற்றல் பெற்றவன். இலங்கை மாநகரில் முதன்முதலில் ரகசியமாக நுழைந்தபோது அவன் யாரும் அறியாத வண்ணம் மிகச் சிறிய வடிவம் எடுத்ததாக ராமாயணம் சொல்கிறது. அனுமனது பெருமைகள் சொல்லில் அடங்காதவை.

    நம் கடவுளரில் சொல்லாற்றலுக்காகப் புகழப்படும் கடவுள் என்றால் அது அனுமன்தான். ராமபிரானே முதன்முதலில் கிஷ்கிந்தா காண்டத்தில் அனுமனைச் சந்தித்து அவன் பேச்சைக்கேட்டதும் தன் தம்பி லட்சுமணனிடம் `யார்கொலாம் இச்சொல்லின் செல்வன்?` என வினவுகிறான்.

    ஆக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் எனப் பட்டம் கொடுத்து கெளரவித்தவன் ராமபிரான் தான். ஒரு பட்டம் அல்லது விருது அதைப் பெறுபவர் மூலம் மட்டுமல்லாமல் அதைக் கொடுப்பவர் மூலமும் பெருமை அடைகிறது அல்லவா? அனுமனின் சொல்லாற்றலை ராமபிரானே அங்கீகரித்து மெச்சிய பின் இனி யார் மெச்ச வேண்டும்?

    இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய பிறகு, ராமனைச் சந்திக்கும் அனுமன் மனம் உணர்ச்சியில் ததும்புகிறது. ராமனோ சீதையை அனுமன் கண்டானா இல்லையா என்றறியப் பேராவல் கொண்டு உணர்ச்சி மயமாக வீற்றிருக்கிறான்.

    உடனடியாக அனுமன் சீதையைக் கண்ட செய்தியை ராமபிரானிடம் தெரிவிக்க வேண்டும். ஒருசிறிதும் வார்த்தையை விரயம் செய்யக் கூடாது. ராமனது எதிர்பார்ப்பில் ஒரு சிறு கால தாமதமும் நேர்ந்துவிடக் கூடாது. எனவே `கண்டேன் சீதையை!` என அனுமன் சொன்னதாக ராமாயணம் சொல்கிறது.

    சீதையைக் கண்டேன் எனவும் சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த முதல் வார்த்தை செய்தியை ராமன் அறிவதில் ஒருசிறிது தாமதத்தை ஏற்படுத்தக் கூடும். அதைக் கூடத் தவிர்க்க விரும்பினான் அனுமன். எனவே `கண்டேன்` என்ற சொல்லை முதலில் சொல்லி அதன் பின்னர் `சீதையை` என அனுமன் சொன்னான் என்று இதற்கு விளக்கம் தரப்படுகிறது.

    எதையும் சுருக்கமாகச் சொல்லும் சொற்சிக்கனம், எதை முதலில் சொல்ல வேண்டும் எதைப் பின்னர் சொல்ல வேண்டும் என்பதில் மிகச் சரியான தேர்வு இவை அனுமனைச் சொல்லின் செல்வனாக்குகின்றன.

    அனுமன் எதிரிகளை வென்று மாபெரும் வெற்றி அடைந்ததற்கு என்ன காரணம் என்பதை ஒரு திருக்குறள் மூலம் நாம் அறிய முடிகிறது.

    `சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

    இகல்வெல்லல் யார்க்கும் அரிது!`

    என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

    சொல்லாற்றலில் வல்லவனாகவும் சோர்வே இல்லாதவனாகவும் அச்சமற்றவனாகவும் யார் இருக்கிறாரோ அவரை இந்த உலகில் யாராலும் வெல்ல முடியாது என அறிவிக்கிறது திருக்குறள்.

    இந்த மூன்று பண்புகளுமே அனுமனிடம் இருந்தன. அவன் ராமனே மெச்சும் வகையில் சொல்லின் செல்வனாக இருந்தான். சோர்வு என்பது அவனிடம் அறவே கிடையாது. ஒரு கடலைக் கூடத் தாண்டும் சோர்வில்லாத முயற்சி அவனிடம் இருந்தது.

    அச்சம் என்பது அனுமனின் அகராதியிலேயே இல்லை. தேவர்கள் அனைவரையும் நடுநடுங்க வைத்த ராவணனையே நேரில் கண்டு பேசி அவன் மனத்தில் அச்சத்தை விதைத்தவன் அனுமன்.

    ஆக வள்ளுவரின் குறளுக்கு வடிவம் கொடுத்தால் அது அனுமனாக அமைவதைக் காண முடியும்.

    அனுமன் அசாத்தியமான உடல் வலிமை பெற்றவன். சஞ்சீவி மலையையே தூக்கி வந்தவன் அனுமன் என்றால் அவன் உடல் வலிமை எத்தகையது என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

    ராம ராவண யுத்தத்தின்போது ராவணன் எய்த ஓர் அஸ்திரத்தால் லட்சுமணன் யுத்த களத்திலேயே மயங்கிக் கிடக்கிறான். மயங்கிய லட்சுமணனை இலங்கைக்குத் தூக்கிச் செல்ல முயல்கிறான் ராவணன்.

    இமய மலையையே தூக்கியவன் அல்லவா ராவணன்? ஆனால் அவனால் லட்சுமணனை ஒருசிறிதும் நகர்த்தக் கூட இயலவில்லை.

    இமய மலை பூமியின் ஒரு பகுதி. ஆனால் லட்சுமணன் ஆதிசேஷனாக இந்த பூமி முழுவதையுமே தாங்குபவன் அல்லவா? எனவே ஆதிசேஷன் அவதாரமான லட்சுமணன் இந்த பூமியை விடவும் வலிமை பெற்றவனாகத் தானே இருக்க முடியும்?

    ராவணன் லட்சுமணனைத் தூக்க முடியாமல் சோர்வோடு இலங்கைக்குச் செல்லும்போது திரும்பி யுத்த களத்தை ஒரு பார்வை பார்க்கிறான். அங்கே ஒரு விந்தையான காட்சியை அவன் காண நேர்கிறது.

    எந்த லட்சுமணனை ஒருசிறிதும் அசைக்க முடியாமல் ராவணன் தவித்தானோ அந்த லட்சுமணனை அநாயாசமாகத் தன் தோளில் தூக்கிக் கொண்டு அனுமன் நடந்து செல்வதைப் பார்த்து ராவணன் ஆச்சரியத்தில் ஆழ்கிறான்.

    அனுமனின் அபாரமான உடல் வலிமையைக் கண்டு ராவணன் மனம் அச்சத்தில் துணுக்குறுகிறது.

    தலைவனுக்கு இல்லாத பெருமை தலைவன்மேல் பக்தி கொண்ட தொண்டனுக்கு இருந்ததையும் ராமாயணம் காட்டுகிறது. தலைவனான ராமனுக்கு கடலைக் கடக்க பாலம் தேவைப்பட்டது.

    ஆனால் தொண்டனான அனுமன், ராம நாமத்தை உச்சரித்தவாறே எந்தப் பாலத்தின் உதவியும் தேவைப்படாமல் தாவியே கடலைக் கடந்துவிட்டான். ராம நாமத்தின் வலிமை, அந்த நாமத்திற்கு உரிய ராமனை விடவும் கூடுதலானது என்பது இதனால் பெறப்படுகின்றது.

    ராமபிரான் ராவண வதம் செய்து போரில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியான செய்தியை முதன் முதலில் சீதையிடம் தெரிவிக்கச் செல்கிறான் அனுமன். அசோக மரத்தடியில் அமர்ந்திருக்கும் சீதை முன் நிற்கிறான். உணர்ச்சி வசப்பட்டதால் அனுமன் குரல் தழுதழுக்கிறது. சொல்லின் செல்வனான அவனுக்கு அன்று ஆனந்தம் நெஞ்சை அடைப்பதால் பேச்சே வரவில்லை.

    எனவே தரையில் அமர்ந்து, மணலில் தன் விரலால், ராமபிரான் வெற்றிபெற்று விட்டான் என்பதை உணர்த்தும் விதமாக ஸ்ரீராமஜயம் என எழுதிக் காண்பிக்கிறான் ஆஞ்சநேயன். சீதை ராமபிரான் ராவணனை வதம் செய்துவிட்டதைப் புரிந்துகொள்கிறாள்.

    அவ்விதம் ஸ்ரீராமஜயம் என்ற மந்திரம் அனுமனால் முதன்முதலில் எழுதப்பட்டதால் அதை லிகித மந்திரமாகவும் கருதுகிறார்கள். ஸ்ரீராமஜயம் என்ற மந்திரத்தை ஜபிப்பதோடு எழுதுவதன் மூலமாகவும் அதிகப் பயனை அடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. இன்றும் நாள்தோறும் ஸ்ரீராமஜயம் என்ற மந்திரத்தை எழுதி ஆன்மிகப் பயன் அடையும் அன்பர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

    ராவண வதம் பற்றித் தனக்கு அனுமன் எழுதிச் செய்தி தெரிவித்த அந்த சந்தர்ப்பத்தில் அனுமனை வாழ்த்தி ஆசீர்வதிக்க விரும்புகிறாள் சீதாதேவி. அங்கே அனுமன் தலையில் இட்டு ஆசீர்வதிக்க அட்சதையா உண்டு?

    சுற்றுமுற்றும் பார்க்கிறாள். அருகே பச்சைப் பசேல் என்ற வெற்றிலைக் கொடிகள் தென்படுகின்றன. சில வெற்றிலைகளைப் பறித்து அனுமன் சிரசில் இட்டு `நீ சிரஞ்சீவியாக இந்த மண்ணுலகில் இருந்து மக்களைக் காத்து வருவாயாக!` என ஆசீர்வதிக்கிறாள்.

    அப்படி சீதை அனுமன் சிரசில் வெற்றிலையத் தூவியதன் அடையாளமாகத் தான் ஆலயங்களில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தப்படுகிறது.

    ராமனையும் சீதாதேவியையும் இணைத்து வைத்தவன் அவன்தான். ஆகையால் பிரிந்திருக்கும் தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டுமானால் அனுமனை வழிபட்டுப் பலனடையலாம்.

    பணிநிமித்தம் கணவனும் மனைவியும் வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழ நேரும் சூழல் இன்று பல இடங்களில் நிலவுவதைப் பார்க்கிறோம். குழந்தைகள் தாய் தந்தை இருவர் பாசத்தையும் அனுபவிக்க முடியாமல் யாரோ ஒருவருடன் மட்டும் வாழநேரும் சங்கடங்களையும் பார்க்கிறோம்.

    இந்த நிலைமைகள் மாறவும் கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழும் நிலைமை தோன்றவும் அருளக் கூடிய கடவுள் அனுமன்.

    ராமனையும் சீதையையும் அனுமன் சேர்த்து வைத்தது குறித்து தத்துவார்த்தமாகவும் பொருள் உண்டு. ராமன் பரமாத்மாவின் வடிவம். சீதை ஜீவாத்மாவின் வடிவம். அனுமன் ஆசார்யன் என்ற நிலையில் செயல்படுகிறான்.

    ஆசார்யனான அனுமன் ஜீவாத்மாவான சீதையிடம் பரமாத்மாவின் பெருமைகளை எடுத்துச் சொல்லி, பரமாத்மாவை விட்டுப் பிரிந்திருக்கும் ஜீவாத்மாவை அதனுடன் சேர்த்து வைப்பதே ராமாயணம் என்றும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது.

    தொண்டின் இலக்கணமாகத் திகழும் அனுமனை வழிபட்டு, என்றும் வற்றாத உற்சாகத்தை அடைந்து எல்லாச் செயல்களிலும் வெற்றி பெறுவோம்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • முருகனது கருணை எதிரியையும் கொல்லாமல் தன் அடியவர்களாக மாற்றும் வலிமையுடையது.
    • திருமாலுக்குக் காடு சார்ந்த உலகமும் முருகனுக்கு மலை சார்ந்த உலகமும் இந்திரனுக்குக் கடல் சார்ந்த உலகமும் வருணனுக்கு மணல் சார்ந்த உலகமும் உண்டு என்கிறது தொல்காப்பியம்.

    சேயோன் என அழைக்கப்படும் முருகனுக்குக் கந்தன், ஆறுமுகன், குமரன், காங்கேயன், கார்த்திகேயன் என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு.

    மற்ற தெய்வங்கள் அசுரர்களை வதம் செய்ததை அந்தந்தப் புராணங்களில் வாசிக்கிறோம். கந்த புராணம் வித்தியாசமானது. முருகன் சூரபத்மனை வதம் செய்வதில்லை. மரமாய் நின்ற சூரபத்மன் மேல் அம்பு எய்து அவனைச் சேவலாகவும் மயிலாகவும் மாற்றுகிறான்.

    சேவலைத் தன் கொடியாக்கிக் கொள்கிறான். மயிலை வாகனமாக்கிக் கொள்கிறான். முருகனது கருணை எதிரியையும் கொல்லாமல் தன் அடியவர்களாக மாற்றும் வலிமையுடையது.

    * முருகனின் ஆயுதம் வேல். மற்ற கடவுளரின் திருக்கரங்களில் உள்ள சூலம், சங்கு, சக்கரம் போன்றவை கடவுளரின் நாமங்களோடு அல்லாமல் தனித்த முறையில் பெயர்களாக அமைவதில்லை. ஆனால் முருகன் கையிலுள்ள வேல், அப்படியே தமிழர்கள் பலருக்குப் பெயராக அமைவது இந்த வேலின் தனிச் சிறப்பு.

    வேலாயுதம், சக்திவேல், கந்தவேல், வடிவேல், ஞானவேல், தங்கவேல் என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர்சூட்டி மகிழ்கிறார்கள் தமிழர்கள். விரோதியையும் கொல்லாது விடுத்த வேலாயுதத்தின் மேல் தமிழர்கள் மிகுந்த பக்தி செலுத்துகிறார்கள்.

    * முருகன் பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் கடவுள். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம், இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன கடவுளர் உண்டு என வகைப்படுத்திப் பேசுகிறது.

    'மாயோன் மேய காடுறை உலகமும்

    சேயோன் மேய மைவரை உலகமும்

    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

    வருணன் மேய பெருமணல் உலகமும்

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே!'

    என்பது தொல்காப்பிய நூற்பா.

    திருமாலுக்குக் காடு சார்ந்த உலகமும் முருகனுக்கு மலை சார்ந்த உலகமும் இந்திரனுக்குக் கடல் சார்ந்த உலகமும் வருணனுக்கு மணல் சார்ந்த உலகமும் உண்டு என்கிறது தொல்காப்பியம்.

    மலையும் மலைசார்ந்த நிலமுமான குறிஞ்சி நிலத்தின் தனிப் பெருங் கடவுள் முருகன்தான். அறுபடை வீடுகொண்ட முருகன் குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பவன்.

    * எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அவர் முருகக் கடவுளைத்தான் போற்றுகிறார்.

    'தாமரை புரையும் காமர் சேவடி

    பவழத்தன்ன மேனித் திகழொளி

    குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்

    நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்

    சேவலங் கொடியோன் காப்ப

    ஏம வைகல் எய்தின்றால் உலகே!'

    தாமரை மலர் போன்ற திருவடியையும் பவழம் போன்ற மேனியையும் குன்றிமணியைப் போல் சிவந்த ஆடையையும் குன்றைப் பிளக்கும்படி எறிந்த வேலையும் சேவல் கொடியையும் உடைய முருகன் காப்பதால் இந்த உலகம் துன்பமின்றி இருக்கின்றது என்பது குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலின் பொருள்.

    * பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை. முற்றிலும் முருகனைப் போற்றியே எழுதப்பட்ட நூல் அது. முந்நூற்றுப் பதினேழு அடிகளில் ஆன நூல். ஆசிரியப்பா என்ற பாவகையில் சங்கப் புலவர் நக்கீரர் எழுதியது.

    முருகனைக் கண்டு திருவருள் பெற்ற ஒரு பக்தர், அவ்விதம் அருள் பெறாதவர்களை முருகனைச் சரணடைந்து அருள் பெறுமாறு ஆற்றுப்படுத்துவதே இந்த ஆற்றுப்படை நூலின் போக்கு. 'நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே!' எனச் சிவபெருமானுடன் சண்டையிட்ட அதே நக்கீரர்தான் முருகனைப் போற்றும் இந்த நூலின் ஆசிரியர்.

    திருமுருகாற்றுப்படை தோன்றிய வரலாறு சுவாரஸ்யமானது. ஒரு மலைச்சாரலில் குளத்தின் கரையில் இருந்த ஓர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து நக்கீரர் சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது ஓர் அதிசயக் காட்சியைக் கண்டார்.

    ஆலமரத்தின் பழுத்த இலையொன்று ஒரு பாதி தண்ணீரிலும் மறுபாதி தரையிலுமாக விழுந்தது. அடுத்த கணம் தண்ணீரில் விழுந்த பாதி மீன்வடிவமாக மாறியது. தரையில் விழுந்த பாதி பறவை வடிவம் பெற்றது. இரண்டும் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டிருந்தன.

    இந்தக் காட்சியில் கருத்தைச் செலுத்தியதால் நக்கீரரின் சிவபூஜைக்கு பங்கம் உண்டாயிற்று. அதற்கு முன் இவ்விதம் சிவபூஜையில் பங்கமேற்பட்ட 999 பேரை ஒரு குகையில் அடைத்து வைத்திருந்தது ஒரு பூதம்.

    அவர்களோடு இன்னொருவரை இட்டு நிரப்பி அவர்களின் எண்ணிக்கையை ஆயிரமாக்கி, அதன்பின் அனைவரையும் உண்ண வேண்டும் என்று திட்டமிட்டிருந்தது அது. நக்கீரரையும் அவர்களுடன் அடைத்துவிட்டு உண்பதற்கு முன் நீராடப் போயிற்று பூதம்.

    நக்கீரர் வருகையால் அவரோடு தாங்கள் அனைவரும் இறக்கப் போவதை எண்ணி மற்றவர்கள் அழுது அரற்றினார்கள். அவர்கள் நிலைக்கு இரங்கிய நக்கீரர் முருகனை வேண்டி திருமுருகாற்றுப் படை என்ற செய்யுள் நூலை இயற்றினார்.

    உடனே முருகக்கடவுள் அவர்கள் முன் தோன்றி அவர்கள் அனைவரையும் குகையிலிருந்து விடுவித்துக் காத்தருளினான் என்கிறது திருமுருகாற்றுப்படையின் தோற்றத்தைச் சொல்லும் கதை.

    திருமுருகாற்றுப் படையின் இறுதியில் சில வெண்பாக்கள் காணப்படுகின்றன. அவற்றை இயற்றியவர் நக்கீரரா அல்லது வேறு யாராவது ஒருவரா என்பதைப் பற்றிச் சர்ச்சைகள் நிலவுகின்றன. அந்த வெண்பாக்களின் இலக்கிய அழகு நெஞ்சை அள்ளுகிறது:

    'அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்

    வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில்

    ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்

    முருகா என்று ஓதுவார் முன்!'

    'முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

    மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்

    தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

    நம்பியே கைதொழுவேன் நான்!'

    * சங்க கால நூல் போலவே, இடைக்கால நூல் ஒன்றும் முருகன் புகழ் பாடுகின்றது. 'திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்' என்ற அந்நூலை இயற்றியவர் பகழிக் கூத்தர்.

    பிள்ளைத்தமிழ் என்ற இலக்கிய வகை, 96 வகைப் பிரபந்தங்களில் ஒன்று. ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் எனப் பிள்ளைத் தமிழ் இரண்டு வகைப்படும்.

    'காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்' என்ற பத்துப் பருவங்களை ஆண் குழந்தைக்கு உரியதாக்கிப் பாடுவதே ஆண்பால் பிள்ளைத் தமிழ்.

    பகழிக் கூத்தர் முருகக் கடவுளைக் குழந்தையாக்கி, தாலாட்டுப் பாடி முத்தம் தருமாறு வேண்டி, நிலவைக் காட்டிச் சோறூட்டி என இன்னும் பல வகைகளில் பக்திப் பரவசத்துடன் பாடுகிறார். திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் பக்தி இலக்கிய வரலாற்றில் முத்திரை பதிக்கிறது.

    * காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தில் அர்ச்சகராக விளங்கிய கச்சியப்ப சிவாசாரியார், கந்தபுராணம் முழுவதையும் தமிழில் செய்யுள் நூலாகப் படைத்துள்ளார். குமரக் கோட்டத்தில் அதை நாள்தோறும் ஒரு பகுதியாகப் படித்து அரங்கேற்றினார்.

    அந்த அரங்கேற்றம் முற்றுப்பெற்றபோது, கச்சியப்ப சிவாசாரியாரை பொற்சிவிகையில் அமரவைத்து தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு வேளாளர்களும் சிவிகையைத் தாங்கி, சாமரம் வீசி வீதிவலம் வந்து நூலையும் ஆசிரியரையும் சிறப்புச் செய்ததாக படிக்காசுப் புலவரின் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

    * முருகனைப் பற்றிய தோத்திரங்களில் பாலன் தேவராயன் என்ற புலவரால் எழுதப்பட்ட கந்த சஷ்டி கவசம் பெரும்புகழ் பெற்றது. இந்த பாலன் தேவராயன் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் குருவான மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் இன்னொரு மாணவராவார்.

    'சிரகிரி வேலவன் சீக்கிரம் காக்க' என இதில் வரும் வரியில் சிரகிரி என்பது சென்னிமலையைக் குறிப்பது. சென்னிமலை முருகனைக் குறித்துப் பாடப்பட்ட நூல்தான் கந்தசஷ்டி கவசம்.

    தொடக்கத்தில் நேரிசை வெண்பா, அதன்பின் குறள் வெண்பா, அதன்பின் நிலைமண்டில ஆசிரியப்பா என்ற பாவகையில் புனையப்பட்ட இந்நூல் மொத்தம் 238 அடிகளைக் கொண்டது.

    தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். கணக்கர் வேலை பார்த்த வீரசாமிப் பிள்ளையின் புதல்வர். 'தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேடமலை மாலை' போன்ற நூல்களை தேவராயர் இயற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவர் நூல்களில் புகழ்பெற்றது கந்த சஷ்டி கவசமே.

    முருகன் நடந்துவரும்போது ஏற்படும் கால்கொலுசின் ஒலியை உற்றுக்கேட்கிறார் தேவராயர். அந்த ஒலியை அப்படியே தம் நூலில் ஒலிக்குறிப்புச் சொற்களாக வைக்கிறார்.

    'செககண செககண செககண செகென

    மொகமொக மொகமொக மொகமொக மொகென

    நகநக நகநக நகநக நகென'

    எனத் தொடங்கி வரும் சொற்கள் மந்திர சக்தி நிறைந்தவை. பாராயணம் செய்பவர்களுக்கு உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் ஒருங்கே தரக்கூடியவை.

    *சம்ஸ்கிருதத்திலும் முருகனைப் பற்றிய புகழ்பெற்ற தோத்திரங்கள் உள்ளன. ஆதிசங்கரர் அருளிய நூல்களில் முக்கியமான ஒரு நூல் 'ஸதாபால ரூபாபி' எனத் தொடங்கும் சுப்ரமண்ய புஜங்கம். ஆதி சங்கரருக்கு வயிற்று வலி இருந்ததாகவும் அது நீங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு திருச்செந்தூர் முருகள்மேல் அவர் இந்த சுலோகத்தைப் படைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

    அவர் இந்த சுலோகத்தைச் சொல்லத் தொடங்கியபோது திருச்செந்தூர் முருகன் சந்நிதியிலிருந்து ஒரு பாம்பு வெளிப்பட்டு ஊர்ந்து சென்றதாம். அதனால் பாம்பு ஊர்ந்து செல்வதைப் போன்றே வளைந்து வளைந்து அமைந்துள்ள ஓசையில் சங்கரர் இந்நூலைப் படைத்தார்.

    இன்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சன்னிதிக்கு முன்பாக இருபுறமும் அமைந்துள்ள தூண்களில் ஒரு தூணில் ஆதிசங்கரர் சிலை செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

    கந்தசஷ்டியன்று முருகனைத் துதித்து இம்மைப் பயன், மறுமைப் பயன் இரண்டையும் பெறலாம்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    ×