என் மலர்
புதுச்சேரி
- ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
- உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது.
புதுச்சேரி:
கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்டு சிறுவன் துடிதுடித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஸ்மோக் பிஸ்கெட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம். அது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்து, அதனை தடுக்க, தனிப்படை களம் இறக்கியுள்ளது.
புதுச்சேரியிலும் இந்த வகை ஸ்மோக் பிஸ்கெட்டுகள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திருமண விழாக்கள், பொருட்காட்சிகள் போன்ற இடங்களிலும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்மோக் உணவு கிடைக்கிறது.
திரவ நைட்ரஜன் தான் தற்போது வித்தியாசமான உணவு என்ற பெயரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. காக்டெய்ல், மிட்டாய்கள், பிஸ்கெட்டுகள் அல்லது திரவ நைட்ரஜன் கலந்து செய்யப்படும் எந்த உணவாக இருந்தாலும் அது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு அதனை வாங்கி கொடுக்கிறார்கள்.
உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க தடை உள்ளது. இந்த டிரை ஐஸ்களை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.
இதுதொடர்பாக, தமிழக அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஸ்மோக் பிஸ்கெட் விஷயத்தில் புதுச்சேரி அரசும், உணவு பாதுகாப்பு துறையும் மவுனமாக உள்ளது.
இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் உணவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? காரில் ஏன் சன் ஸ்கிரின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அபராதம் விதிக்கின்றனர்.
- போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணித்து உரிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரியின் மாநில வருவாய் சுற்றுலா துறையை நம்பி உள்ளது.
வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்தால் தான் வியாபாரம் அதிகரிக்கும். தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்ட், மதுபான விற்பனை அனைத்தும் வெளிமாநில சுற்றுலா பயணிகளையே நம்பி உள்ளது.
தற்போது கோடை விடுமுறையொட்டி, புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
அப்படி வரும் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.
குறிப்பாக சிக்னல்களில் நிற்கும் போக்குவரத்து போலீசார், சிக்னலை கடக்க வரும் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநில கார்களை உடனே நிறுத்தி விடுகின்றனர். அவர்களிடம், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் ஆவணங்களை கேட்கின்றனர்.
அனைத்தும் இருந்தாலும் கூட, ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? காரில் ஏன் சன் ஸ்கிரின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளீர்கள் என கேள்வி மேல் கேள்வி கேட்டு அபராதம் விதிக்கின்றனர்.
அதேபோன்று, கடலுார் சாலையில் மாநில எல்லையான முள்ளோடையில், வாகன சோதனை என்ற பெயரில் புதுச்சேரி போலீசார் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை மட்டும் நிறுத்தி சோதனை நடத்தி அபராதம் விதித்தும் வருகின்றனர்.
போக்குவரத்து சட்டப்படி விதிமீறலில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பது தவறில்லை.
ஆனால், வெளி மாநில வாகனங்களை மட்டும் குறி வைத்து அபராதம் விதிப்பதும், அவர்களை விரட்டுவதும், புதுச்சேரி அரசு மீது அவப்பெயரை ஏற்படுத்தும்.
சுற்றுலா பயணிகளின் வருகையும் குறையும். எனவே, போலீஸ் உயர் அதிகாரிகள் கண்காணித்து உரிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து போலீசா ருக்கு வழங்க வேண்டும் என வெளிமாநில சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.
- புதுச்சேரி கடற்கரை சாலையில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வருபவர் அருண்.
- சேவை தொடர வேண்டும் என்று காவல் துறையினர் வாழ்த்தி கைகுலுக்கி அனுப்பி வைக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொது மக்கள் வெயிலுக்கு பயந்து வீட்டிலே முடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வருபவர் அருண்.
சமூக ஆர்வலரான இவர் சில நாட்களாக தன்னுடைய வாகனத்தில் ஐஸ் பெட்டியை பின்புறம் கட்டி அதில் மோர், நன்னாரி சர்பத், இளநீர், குடிநீர், லெமன் ஜூஸ் ஆகியவற்றுடன் புதுச்சேரி நகர பகுதியில் வலம் வருகிறார்.
இதனை கடும் வெயிலில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், போக்குவரத்தை சீரமைக்கும் போலீசார் ஆகியோருக்கு அவர்கள் பணிபுரியும் இடத்துக்கே சென்று வெப்பத்தை தணிக்கும் வகையில் அவர்கள் விரும்பிய குளிர்பானங்களை கொடுத்து வருகிறார்.
இவருடைய சேவை தொடர வேண்டும் என்று காவல் துறையினர் வாழ்த்தி கைகுலுக்கி அனுப்பி வைக்கின்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
- மர்ம நபர் போன் செய்து, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் விமான நிலையங்களில் குண்டு வெடிக்கப்போகிறது என மிரட்டல் விடுத்திருந்தார்.
- விமான நிலையத்தை சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு மர்ம நபர் போன் செய்து, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் விமான நிலையங்களில் குண்டு வெடிக்கப்போகிறது என மிரட்டல் விடுத்திருந்தார்.
இதையடுத்து இந்திய விமான ஆணையம் உடனடியாக அனைத்து விமானநிலையங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சோதனை நடத்த உத்தரவிட்டது.
இதன்படி புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விமான நிலையத்தை சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சடலங்களை பாதுகாக்க முடியாமல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- குளிர் சாதன வசதி இல்லாததால் இந்த சடலங்கள் அழுகிப்போய் துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிணவறை உள்ளது. இங்கு விபத்து, கொலை, தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் உடல்களை பிணவறையில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து காவல் துறை விசாரணை முடிந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.
அதன்படி புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நேரத்தில் 24 சடலங்களை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து பாதுகாக்க வசதி உள்ளது. இதுபோன்ற சூழல்களில் தற்போது அடிக்கும் வெயிலில் பிணவறையில் அமைக்கப்பட்ட குளிர்சாதன எந்திரங்கள் திணறுவதால், குளிரூட்டப்படுவது குறைகிறது.
இதனால் சடலங்களை பாதுகாக்க முடியாமல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து சடலங்கள் அழுகுவது, துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்குள்ள 3 குளிர்சாதன எந்திரங்களை சரி பார்க்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குளிர்சாதன எந்திரங்கள் பழுது பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் நிலைமை சீராக வில்லை. குறிப்பாக புதுச்சேரிக்கு வந்து ஆதரவற்றவர்களாக இறந்து கிடப்போரின் சடலங்களை உறவினர்கள் உரிமை கோருவதற்கு வசதியாக 15 நாட்கள் வரை வைத்திருக்க வேண்டியுள்ளது.
தற்போது பிணவறையில் ஆதரவற்றவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு போதுமான குளிர் சாதன வசதி இல்லாததால் இந்த சடலங்கள் அழுகிப்போய் துர்நாற்றம் வீசுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி கூறியதாவது:-
தற்போது கடும் வெயிலால் பிணவறையில் குளிர் சாதன எந்திரங்கள் திணறுகிறது. மேலும் வெளிப்புற வெப்பமும் பிணவறைகளில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் சீதோஷ்ண நிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தொழில் நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, எந்திரங்களை சர்வீஸ் செய்துள்ளோம். தற்போது ஓரளவு நிலைமை சீராகியுள்ளது. இருப்பினும் சடலங்கள் அழுகுவது என்பது, ஆதரவற்றவர்களின் சடலங்களால்தான் நிகழ்கிறது.
இத்தகைய சடலங்கள் இறந்து, 10 நாட்கள் அல்லது அதற்கு மேல்தான் கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படுகிறது.
ஏற்கனவே அழுகிய நிலையில், ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் இத்தகைய சடலங்களை உறவினர்கள் உரிமை கோருவதற்கு வசதியாக விதிப்படி 15 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும்.
அப்படி நீண்ட நாட்கள் பாதுகாக்கப்படும்போது சடலங்கள் மேலும் அழுகி விடுகிறது. இருப்பினும் வெளிப்புற சீதோஷ்ண நிலை உள்ளே பாதிக்காத வகையில் உள் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றார்.
- தேர்தலின் போது வாக்குகளை பெற சாதி அல்லது மதவகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடக்கூடாது.
- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் புதுச்சேரி சமூக அமைப்பினர் புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான குலோத்துங்கனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தேர்தலின் போது வாக்குகளை பெற சாதி அல்லது மதவகுப்புவாத உணர்வுகளை தூண்டிவிடக்கூடாது. ஆனால் பிரதமர் மோடி ராஜஸ்தான் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். அவரது பேச்சின் தாக்கம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இருவரது மனங்களிலும் எத்தகைய தாக்கம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டியுள்ளது.
தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக திட்டமிட்டு இந்தியாவில் மத வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அவரது தேர்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வெளியீடு.
- அரசு, தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மேற்குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய குறிப்புடன், புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநரால் வெளியிடப்பட்ட தீவிர வெப்பம் / வெப்ப அலைக்கான பொது சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக, அனைத்து அரசுகளுக்கும்/தனியார்/சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறைகள் 29.04.2024 முதல் தொடங்கும்.
இதேபோல், கோவை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.
- புலி வேட நாய் கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலாவி வருகிறது.
புதுச்சேரி:
புலியை பார்த்து பூனை சூடுபோட்ட விடுகதை மாதிரி நாயை புலியாக மாற்ற அதை புலிபோல் பெயிண்ட் அடித்து வீதியில் உலாவவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.
மலைவனப்பகுதியாக இருந்தால் புலி வரும் இங்கு எப்படி புலி வந்தது என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்தது. உண்மையிலேயே புலி தான் வருகிறதா? அதனை பார்த்துவிட வேண்டும் என்று இளைஞர்கள் திட்டமிட்டனர்.
அப்போது புலி வருகிறது என்று சிலர் அங்கு கூச்சலிட்டவாறு சென்றனர்.
இதனை கேட்ட இளைஞர்கள் சிலர் அங்கு திரண்டு சென்றனர். அவர்கள் புலி என்று சொன்ன விலங்கை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஏனென்றால் அது புலி அல்ல புலி வேஷத்தில் இருந்த நாய்.
அந்தப் பகுதியை சேர்ந்த சில விஷமிகள் தெரு நாய் உடலில் புலியைப் போல கோடுகளை பெயிண்டில் வரைந்து நாயை வீதிகளில் உலாவ விட்டுள்ளனர்.
இந்த புலி வேட நாய் கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலாவி வருகிறது. இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாய்க்கு புலிவேஷ மிட்ட விஷமிகள் யார்? என்று அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர்.
- ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் 350-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன.
புதுவையில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், ஜின், ஓட்கா, டக்கீலா என 1000-க்கும் மேற்பட்ட விதவிதமான பிராண்டு மதுவகைகள் விற்பனையாகிறது. புதுச்சேரியில் கிடைக்கும் மதுரகங்களை ருசி பார்க்க என நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதேபோல் புதுச்சேரியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிராண்டுகள் உள்பட 35 வகையான பீர்கள் முழு பாட்டில்களில் கிடைக்கிறது.
டின் மற்றும் பின்ட் பாட்டில்களிலும் பீர் சிறிய அளவிலும் கிடைக்கிறது. புதுச்சேரியில் பீருக்கு என தனித்துவமான பார்கள் உள்ளது.
கோடை காலம் வந்துவிட்டால் மது பிரியர்கள் வெப்பத்தின் தாக்கம், நாவறட்சியில் இருந்து தப்பிக்க பீருக்கு மாறுவது வழக்கம். இதனால் பீருக்கு கடும் கிராக்கி ஏற்படுகிறது.
மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர். வழக்கமான காலத்தை விட கோடை காலத்தில் 3 முதல் 5 மடங்கு பீர்கள் விற்பனையாகிறது.
வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த ஒவ்வொரு கோடையிலும் புதிய பீர்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் அதுபோல் புதிய ரக 2 பீர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. வெயில் தாக்கம் அதிகரிப்பால் பீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பொதுவாகவே பீர்களை சில் கூலிங்காக குடிப்பது தனி ருசி தரும். இதனால் பீர் கேட்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சில் கூலிங் பீர் கேட்கின்றனர். கொஞ்சம் குறைவான சில் கூலிங் இருந்தாலும் வாடிக்கையாளர் பீரை மாற்றி புல் சில் தரும்படி கேட்கின்றனர்.
இதனால் கூலர்களில் தொடர்ந்து பீர்களை போட்டு கடை விற்பனையாளர்கள் நிரப்பி வருகின்றனர். கடைகளில் உள்ள கூலர்களை விட வாடிக்கையாளர் கோரிக்கை அதிகம் என்பதால் விற்பனையாளர்கள் திணறுகின்றனர்.
சில கடைகளில் பீரை கூலிங் செய்ய அதிக கூலர்கள் இல்லாதது சில் கூலிங் பீருக்கு தடுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில் கூல் பீர் கிடைப்பதில்லை என்ற புகார் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.
- ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
- அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியர்.
இவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு (வயது 26). இதில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் பணியில் உள்ளார்.
இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நல்ல படங்கள் எப்போது வெளிவந்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையே ‘கில்லி’ படம் காட்டுகிறது.
- சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளார்கள்.
புதுச்சேரி:
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த 'ரத்னம்' திரைப்படம் நாளை மறுநாள் 26-ந்தேதி வெளியாக உள்ளது.
புதுவையிலும் 'ரத்னம்' திரைப்படம் வெளியாகிறது. திரைப்படம் வெளியாக உள்ள சண்முகா திரையரங்குக்கு வந்த இயக்குனர் ஹரி, விஷால் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதன்பின் இயக்குனர் ஹரி நிருபர்களிடம் கூறியதாவது:-
விஷாலுக்கு 3-வது திரைப்படமாக இந்த படத்தை இயக்கி உள்ளேன். மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் கொடுக்கும். மக்கள் அனைவரும் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்க வேண்டும். சாலையில் செல்லும்போது ஒரு பிரச்சனையை கண்டால் யாரும் உதவ முன்வருவதில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அப்படி உதவும் இளைஞனின் ஒரு கதை தான் இது. 'கில்லி' திரைப்படம் மறுபடியும் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. நல்ல படங்கள் எப்போது வெளிவந்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையே இந்த படம் காட்டுகிறது.
இது போன்ற படங்களை பார்க்கும்போது நாமும் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்று இயக்குனர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர்களுக்கு ஒரு தரப்பினர் மட்டுமே ரசிகர்களாக இருப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டுமே அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக உள்ளார்கள். தலைவர் படம் என்றால் சொல்ல தேவையில்லை. அவர் படம் எப்போது வந்தாலும் முதல் நாளில் பார்ப்பேன். எந்த ஒரு இயக்குனரும் சாதிகளை முன்வைத்து படங்களை இயக்குவதில்லை.
நாட்டில் நடக்கும் சாதிய சிந்தனைகளை வைத்து மட்டுமே படங்கள் எடுக்கிறார்கள். சினிமா என்பது சாதி, மதம், மொழி என இதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து விஷால் ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து நகர பகுதிக்கு வந்த இயக்குனர் ஹரி நேரு வீதி, பாரதி வீதி, குபேர் அங்காடி பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த வியாபாரிகளிடம் 'ரத்னம்' படம் பற்றி கூறி திரையரங்கில் பார்க்க அழைப்பு விடுத்தார்.
- வழக்கமாக தேர்தலுக்கு முன்பு மதுபான கடைகள் இரவு 11 மணிவரை செயல்பட்டன.
- தேர்தல் முடிந்துள்ள நிலையிலும் தற்போது வரை மதுபான கடைகள் இரவு 10 மணியோடு மூடப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி:
புதுவையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மதுக்கடைகள் இரவு 10 மணிக்கே மூடதேர்தல் துறை உத்தரவிட்டது. மேலும் 10 மணிக்கு மேல் மது கடைகள் திறந்து இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று புதுவை கலால் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் மதுகடை உரிமையாளர்கள் இரவு 9.30 மணிக்கே மதுகடைகளை மூடிவிடுகின்றனர். தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்ந்துள்ளது.
வழக்கமாக தேர்தலுக்கு முன்பு மதுபான கடைகள் இரவு 11 மணிவரை செயல்பட்டன. சுற்றுலா உரிமம் பெற்ற மதுபார்கள் இரவு 12 மணி வரை இயங்கின.
தேர்தல் முடிந்துள்ள நிலையிலும் தற்போது வரை மதுபான கடைகள் இரவு 10 மணியோடு மூடப்பட்டு வருகின்றன. இதனால் வியாபாரம் பாதித்து அரசுக்கு கிடைக்கும் வருமானமும் குறைகிறது.
இதைத் தொடர்ந்து மதுபான விற்பனை நேரத்தை முன்பு போல் இரவு 11 மணி வரை மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி கலால்துறை தேர்தல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.






