என் மலர்
புதுச்சேரி
- வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்ப அயர்ச்சி (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- காரைக்கால் பகுதிகளில் இதுவரை மது போதையில் வெயில் மயக்கத்துடன் 6 பேர் சுருண்டு விழுந்து பலியாகி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முழுவதும் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது.
புதுச்சேரியில் நேற்று 96.1 டிகிரி வெயில் பதிவானது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 10-ந் தேதி வரை 96.8 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்ப அயர்ச்சி (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து நேரலாம்.
இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள பகல் நேரங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
புதுவை, காரைக்கால் பகுதிகளில் இதுவரை மது போதையில் வெயில் மயக்கத்துடன் 6 பேர் சுருண்டு விழுந்து பலியாகி உள்ளனர்.
புதுவையில் வெயிலின் தாக்கத்தில் மயக்கம் அடைப வர்களுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிகளில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தற்போது கதிர் காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 5 படுக்கைகள் கொண்ட வார்டும், ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட வார்டும், அரசு பொது மருத்துவமனையில் 2 படுக்கைகள் கொண்ட வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. போதுமான மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அங்கு பணியில் இருப்பார்கள்.
வெப்ப அயர்ச்சியால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்களை சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயபிரிய குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் ரங்கசாமி லே அவுட்டை சேர்ந்தவர் ஜெயராமன்.
இவரது இளைய மகன் விஜயபிரியகுமார் (வயது 47) இவர் பல் மருத்துவ படிப்பு 3ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது மன நோயால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கடந்த 9 ஆண்டுகளாக அரியாங்குப்பம் மணவெளியில் உள்ள மனநல மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை அவரது உறவினர்கள் அவ்வப்போது சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதியம் விஜயபிரிய குமாரின் சித்தப்பா ராமகிருஷ்ணன் மனநல மையம் சென்று அவரை பார்த்து பேசிவிட்டு வந்தார்.
அவர் வந்து சென்ற சிறிது நேரத்தில் விஜயபிரிய குமார் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் 2-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனே கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயபிரிய குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப படகின் விலைகள் உள்ளன.
- தற்போது அந்தமான், மாலத்தீவு உள்ளிட்ட கடல் சுற்றுலா பகுதிகளில் இந்த படகிற்கான தேவை அதிகளவு உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர்கள் டெலிவரி செய்யும் பணி நடந்து வந்தது.
திடீரென இந்த சேவை நிறுத்தப்பட்டு, இதற்கு பயன்படுத்தப்பட்ட ஹோப்செவன் கப்பல் பயன்பாடின்றி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துறைமுக வளாகத்தில் பின்புறம் தனியார் நிறுவனம் சொகுசு படகுகளை தயார் செய்து அந்தமான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது.
அதிகபட்சமாக 'செமி சம்மெரின் பாட்டம் கிளாஸ்' என்ற சொகுசு படகுகளை தயாரிக்கிறது.
நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தால் எப்படி ஆழ்கடல் அதிசயங்களை காணமுடியுமோ அதே போல் இந்த படகில் கடலில் பயணம் செய்யும் போது படகில் மூழ்கி இருக்கும் கீழ் பகுதியில் பயணிகள் அமர்ந்து கொண்டு ஆழ்கடலை ரசித்தவாறே பயணிக்கலாம்.
இதற்காக படகின் கீழ், பகுதியில் ஏ.சி. வசதியுடன் பயணிகள் அமர்ந்து கொண்டு கண்ணாடி வழியே பார்க்கும் வகையில், இந்த படகு தயார் செய்யப்படுகிறது. 12 மீட்டர் நீளம் 2.9 மீட்டர் அகலத்தில் 16 பேர் பயணம் செய்யும் வகையில் ஒரு படகு தயாரிக்க ரூ.70 லட்சம் ஆகிறது.
பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப படகின் விலைகள் உள்ளன. தற்போது அந்தமான், மாலத்தீவு உள்ளிட்ட கடல் சுற்றுலா பகுதிகளில் இந்த படகிற்கான தேவை அதிகளவு உள்ளது. அதன் காரணமாக புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் அந்தமானிற்கு கொண்டு செல்ல 4 செமிசம்மெரின் பாட்டம் கிளாஸ் படகுகள் வேகமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.
மாலத்தீவிற்கும் இதே போன்று படகுகள் விரைவில் தயார் செய்து அனுப்பப்படுகிறது. சொகுசு படகுகள் தயார் செய்யும் மையமாக புதுச்சேரி மாறி வருகிறது.
- புதுச்சேரியில் தலைமை நூலகம் உட்பட 55 கிளை நூலகம், காரைக்காலில் 19, மாகியில் 4, ஏனாமில் 3 உட்பட மொத்தம் 81 கிளை நூலகம் பயன்பாட்டில் உள்ளது.
- சிறுவர் பிரிவிற்கு ரூ.20 லட்சம் மதிப்பில் நூல்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
புதுச்சேரி கலை, பண்பாட்டு துறையின் கீழ்,197 ஆண்டு பழமைவாய்ந்த ரோமன் ரோலண்ட் நூலகம் உள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு உள்பட பல மொழிகளில் 4 லட்சம் நூல்கள் உள்ளன.
நூலகத்தில் பெரியவர்கள் பிரிவில் உறுப்பினர்களாக 54,924 பேரும், சிறுவர்கள் பிரிவில் 9,696 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
புதுச்சேரியில் தலைமை நூலகம் உட்பட 55 கிளை நூலகம், காரைக்காலில் 19, மாகியில் 4, ஏனாமில் 3 உட்பட மொத்தம் 81 கிளை நூலகம் பயன்பாட்டில் உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்கள், அரசு நூலகங்களுக்கு வாங்கப்படாமல் இருந்து வந்தது. முன்னாள் கவர்னர் தமிழிசை மாணவர்களிடையே நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரியில் 23 தொகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு உபகரணங்களுடன், சிறு நூலகங்களை அமைப்பதற்கும், கிளை நூலக சிறுவர் பிரிவில் விளையாட்டு உபகரணங்களுடன் இயங்கவும் கலை, பண்பாட்டு துறைக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் 2023- 24-ம் ஆண்டிற்கான அரசு நூலகங்களுக்கு, புதுச்சேரியை சேர்ந்த 211 எழுத்தாளர்களின் 21,100 நூல்கள் ரூ.40 லட்சத்துக்கும், பொது பிரிவில் பல்வேறு எழுத்தாளர்களின் நூல்கள் ரூ.40 லட்சத்திற்கும் வாங்கப்பட்டுள்ளது.
சிறுவர் பிரிவிற்கு ரூ.20 லட்சம் மதிப்பில் நூல்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என மொத்தம் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இதில், புதுச்சேரி வெங்கட்டா நகர் சிறுவர் பூங்கா, லாஸ்பேட்டை அசோக்நகர் பூங்கா, ஏர்போர்ட் சாலை, பொன்னியம்மன் கோவில் பூங்கா ஆகிய 3 இடங்களில் முதல் கட்டமாக விளையாட்டு உபகரணங்களுடன் சிறுவர் மகிழ்ச்சி நூலகம் அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.
இது தவிர கிளை நூலகத்தில் உள்ள சிறுவர் பிரிவிலேயே விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதையொட்டி கிளை நூலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அனுப்பும் பணி ரோமன் ரோலண்ட் நூலகத்தில் வேகமாக நடந்து வருகிறது.
- அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமற்ற சத்து மாத்திரைகளால் மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
- மோசடி குறித்து சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி , லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் 2018-19-ம் ஆண்டுகளில் கர்ப்பிணிகளுக்கு தரமற்ற மருந்துகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
அதேபோல் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமற்ற சத்து மாத்திரைகளால் மாணவர்களும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பிட்ட இரு தனியார் ஏஜென்ஸிகள் இந்த தரமற்ற மருந்து, மாத்திரைகளை வழங்கியதும், புதுச்சேரி தேசிய ஊரக சுகாதார இயக்க (என்.ஆர்.எச்.எம்.) மருந்தாளுநர் நடராஜன் மற்றும் என்ஆர்எச்எம் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
மருந்தாளுநர் நடராஜனின் மனைவி மற்றும் நண்பரின் ஏஜென்ஸிகள் மூலமாக இந்த மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதும், இதன் மூலமாக அரசுக்கு ரூ.44 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, மருந்தாளுநர் நடராஜன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த மோசடி குறித்து சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் மருந்தாளுநர் நடராஜன் மற்றும் என்.ஆர்.எச்.எம் அதிகாரிகள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மருந்தாளுநர் நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனிடையே புதுச்சேரி சட்டப்பேரவை அருகேயுள்ள மாநில சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள மருந்து, மாத்திரை கொள்முதல் செய்யும் பிரிவில் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் என்.ஆர்.எச்.எம். அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மருந்துகளையும் அங்கிருந்து பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து மருந்து கொள்முதல் வழக்கு தொடர்பாக இந்திய தணிக்கை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய தணிக்கை குழுவினர் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள என்.ஆர்.எச்.எம் பிரிவு அதிகாரிகள், ஊழியர்களிடம் கடந்த 4 நாட்களாக விசாணை நடத்தி வருகின்றனர்.
மத்திய தணிக்கை குழு விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்த பிறகு இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது. மத்திய தணிக்கை குழுவினரின் அதிரடி விசாரணையால் புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
- தற்போது கோடை விடுமுறை என்பதால் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
- பூங்காவுக்கு வருவோர் செல்போன்களில் படம் எடுக்க எந்த தடையுமில்லை.
புதுச்சேரி:
பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என அழைக்கப்படும் புதுவையில் அழகிய வீதிகள், பூங்காக்கள், ரம்மியமான கடற்கரை, பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்கள், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சுற்றுலா பயணிகளை கவருகிறது.
அழகிய சுற்றுலா தளமான புதுச்சேரிக்கு ஜெர்மன், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரியின் அழகை ரசிப்பதற்கு படையெடுத்து வருகிறார்கள்.
மேலும் புதிதாக திருமணம் செய்பவர்கள் மற்றும் பல்வேறு விசேஷங்களுக்கு போட்டோஷூட் எடுக்க விரும்புபவர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
அவர்கள் பிரெஞ்சு கலாச்சாரம் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் முன்பும் நின்று அழகிய கலைநயம் மிக்க போட்டோஷூட் மற்றும் வீடியோ எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை சாலை அருகே உள்ள மிகவும் பிரபலமான புகழ்வாய்ந்த பாரதி பூங்காவிலும் பல்வேறு தரப்பு மக்கள் போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பாரதி பூங்காவில் போட்டோஷூட் மற்றும் வீடியோ எடுக்க நகராட்சியில் வருவாய் பிரிவை அணுகி அனுமதி பெற வேண்டும் எனவும் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும் அப்போதுதான் அனுமதி வழங்கப்படும் என்று பாரதி பூங்காவின் நுழைவு வாயில் முன்பு நகராட்சி சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் பூங்காவுக்கு வருவோர் செல்போன்களில் படம் எடுக்க எந்த தடையுமில்லை என்றும் கேமராக்கள் மூலம் படம் எடுக்க மட்டுமே கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்.
புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது19), விவேகானந்தன்(59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியன் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிக்கையை முத்தியால்பேட்டை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
குற்றப்பத்திரிகையை கிழக்கு கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா, ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தாக்கல் செய்து வருகின்றனர்.
- கோடை வெயில் தொடங்கிய நிலையில் புதுவையில் வெயில் அளவு 95 டிகிரிக்குள்ளேயே இருந்து வந்தது
- சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தமிழகம், புதுவையில் கடந்த ஆண்டுகளில் இல்லாததைவிட தற்போது அதிக அளவில் வெயில் கொளுத்தி வருகிறது. இயல்பைவிட 9 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோடை வெயில் தொடங்கிய நிலையில் புதுவையில் வெயில் அளவு 95 டிகிரிக்குள்ளேயே இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 98.6 டிகிரி என பதிவானது. நேற்று 100.4 டிகிரியாக வெயில் பதிவானது. இதன்மூலம் இந்த ஆண்டு முதல்முறையாக 100 டிகிரியை வெயில் தாண்டி உள்ளது.
வழக்கத்தை விட காலை 10 மணிக்கு மேல் பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது. நேற்று மே தின விடுமுறை என்பதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே வந்தவர்கள் தகிக்கும் வெயிலால் தவித்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை நிர்வாகம் எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள அதிதி சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரையை அமைத்துள்ளது.
சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திலும் சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 100 மீட்டருக்கு 1 சிக்னல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க முடியாமல் தவித்து வந்தனர். சிக்னலில் தவிக்கும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க காவல் துறை சார்பில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பட்டால் சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி, புதுச்சேரியை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் சிக்னலில் தற்காலிக பச்சை நிற மேற்கூரை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- கடும் வெயிலின் காரணமாக காமேசுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
- மும்பையில் இருந்து காமேசை ஆம்புலன்சில் கொண்டு வர ரூ.82 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.
திருக்கனூர்:
புதுச்சேரியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். பலரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி திருக்கனூர் புதுநகரை சேர்ந்தவர் முருகன் ராமசாமி. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளைய மகன் காமேஷ் (வயது 23) மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். வேலை தேடி காமேஷ் கடந்த மாதம் மும்பைக்கு சென்றார்.
அங்கு ஒரு அறையில் வாடகைக்கு தங்கி பல நிறுவனங்களுக்கு வெயிலில் சென்று அலைந்து திரிந்து வேலை தேடியுள்ளார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடும் வெயிலின் காரணமாக காமேசுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மும்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படாததால் முருகன் ராமசாமி காமேசை மும்பையில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
மும்பையில் இருந்து காமேசை ஆம்புலன்சில் கொண்டு வர ரூ.82 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.
அந்த பணத்தையே முருகன் ராமசாமி கடன் வாங்கி செலுத்திய நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் பல லட்சம் செலவாகும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.
வறுமையில் வாடும் முருகன் ராமசாமி தனது மகனின் உயிர் காக்க தன்னார்வலர்களும் புதுச்சேரி அரசும் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
திருக்கனூர் இளைஞர் மும்பையில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திருக்கனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.
- கருவி பொருத்தப்பட்டதும் தினந்தோறும் கூடுதலாக 100 புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி செயல்படுகிறது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.
இதற்கிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஏற்கனவே அதிநவீன கதிரியக்க கருவி உள்ளது. ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் இருந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஜிப்மரில் புற்று நோயாளிகளுக்கு விரைந்து கதிரியக்க சிகிச்சை அளித்திடும் வகையில் ரூ.30 கோடியில் அதிநவீன கருவி வாங்க மத்திய சுகாதாரத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த கருவி பொருத்தப்பட்டதும் தினந்தோறும் கூடுதலாக 100 புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கவும் மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
- டி.என்.ஏ. மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
- திருத்தங்கள் மேற் கொண்டு உடனே போக்சோ விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி, முத்தியால் பேட்டை, சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மாதம் 2-ந் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தால் புதுவை முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த படுகொலை தொடர் பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா ஆசாமிகளான விவேகானந்தன் (57) மற்றும் கருணாஸ் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தடவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தில் சேகரித்த தடயங்கள், குற்றவாளிகளின் கைரேகைகள் மற்றும் ரத்த பரிசோதனை அறிக்கை, தடயவியல் ஆய்வு பரிசோதனை, டி.என்.ஏ. மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
போக்சோ வழக்குகளில் 60 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். எனவெ சிறுமி பாலியல் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழு வினரும், கிழக்கு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் லட்சுமி தலைமையில் முத் தியால்பேட்டை போலீ சாரும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் சிறுமி கொலை வழக்கு குற்றப்பத்திரிகையை போலீசார் தயாரித்து முடித்துள்ளனர்.
இவ்வழக்கு விசாரணையை டி.ஜி.பி.ஸ்ரீனிவாஸ் நேரடியாக கவனித்து வரும் நிலையில் சுமார், 600 பக்க விசாரணை அறிக்கை டி.ஜி.பி. மற்றும் சட்டத்துறையின் ஆலோசனை பெற அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்கள் ஆலோசனை பெற்றவுடன் திருத்தங்கள் ஏதேனும் வந்தால், அதன்படி திருத்தங்கள் மேற் கொண்டு உடனே போக்சோ விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கின்றனர்.
- ஆளும்கட்சியினர் ஏனாம் போன்ற தொகுதிகளை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த வாக்கும் பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது என கூறுகின்றனர்.
- சில இடங்களில் பா.ஜனதாவினர் காங்கிரசாரை பணி செய்யாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி முடிவடைந்தது. புதுவை பாராளுமன்ற தொகுதியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்துக்கும், இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். அதோடு நேரடியாக பா.ஜனதா இந்த முறை களத்தில் இறங்கியதால் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோரின் சுமார் 2 லட்சம் வாக்குகள் பா.ஜனதாவுக்கு கிடைக்காது என காங்கிரசார் கருதினர்.
இதனால் தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே பா.ஜனதாவின் வாக்கு ஒன்று என ஆரம்பிப்பதை, காங்கிரசார் 2 லட்சத்து ஒன்று என ஆரம்பிப்போம் என தெரிவித்தனர். தற்போது தேர்தல் முடிவு வெளியாக 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு ஒரு தகவல்கள் உலா வருகிறது. சில தொகுதிகளில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீதான எதிர்ப்பால் வாக்குகள் காங்கிரசுக்கு விழுந்துள்ளதாக கூறுகின்றனர்.
அதேநேரத்தில் ஆளும்கட்சியினர் ஏனாம் போன்ற தொகுதிகளை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த வாக்கும் பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது என கூறுகின்றனர். சில இடங்களில் பா.ஜனதாவினர் காங்கிரசாரை பணி செய்யாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இதனால் மாறி, மாறி நாள்தோறும் உலா வரும் தகவல்கள் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள வயிற்றில் நெருப்போடு இருதரப்பினரும் காத்திருக்கின்றனர்.






