என் மலர்
புதுச்சேரி
- உள்ளூர் மக்கள் வெளிநாட்டு மாணவர்களை தாக்கி வருகின்றனர்.
- வெளிநாட்டு மாணவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் புதுவையை சேர்ந்த 2 மாணவ-மாணவிகளும் அடங்குவர். இந்த நிலையில் கிர்கிஸ்தான் நாட்டில் கடந்த 13-ந் தேதி உள்ளூர் மக்களுக்கும் எகிப்து மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் வெளிநாட்டு மாணவர்களை தாக்கி வருகின்றனர்.
இதையடுத்து வெளிநாட்டு மாணவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் புதுச்சேரியில் இருந்து கிர்கிஸ்தான் நாட்டில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகள் சவுமியா, சரவணன் ஆகியோர் தங்களை மீட்ககோரி ஆடியோவில் பதிவு செய்து பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் செல்போனில் செய்தி அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து மாணவ-மாணவியின் பெற்றோர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கிர்கிஸ்தான் நாட்டில் தவிக்கும் தங்களது பிள்ளைகளை மீட்டு தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
- கோடை விடுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
- வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
தற்போது கோடை விடுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியின் பிரதான சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலை, 100 அடி சாலை, புதுச்சேரி-கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு, ராஜீவ்காந்தி மற்றும் இந்திராகாந்தி சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆங்காங்கே வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறினர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இதற்கிடையே மரப் பாலம் சந்திப்பில் நீண்ட நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வம் வாகன ஓட்டிகளை சமாதானம் செய்தார். அதன்பின் அப்பகுதியில் முதலியார்பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீசாரின் உதவியுடன் போக்குவரத்தை சரி செய்தனர்.
- மதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ரேம்போவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
- இறுதி சடங்கு நிகழ்ச்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமத்தைச் சேர்ந்தவர் மதி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு டாபர்மேன் நாய்க்குட்டி ஒன்றை ஆசையாக வாங்கி அதற்கு ரேம்போ என பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார். ரேம்போ அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே கடந்த 10 ஆண்டாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் ரேம்போவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் ரேம்போ திடீரென உயிரிழந்தது.
ரேம்போவின் மறைவு மதியின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது குடும்பத்தில் ஒருவராக இருந்து இறந்த செல்லப்பிராணி ரேம்போவுக்கு மனிதர்களுக்கு செய்யும் இறுதி சடங்குகள் போல் செய்து அடக்கம் செய்ய மதி குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதற்காக ரேம்போ இறந்ததை தெரியப்படுத்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர். தொடர்ந்து வீட்டின் முன்பு பந்தல் அமைத்து சவப்பெட்டியில் ரேம்போவின் உடலை வைத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ரேம்போவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் மதியின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினர். இதனையடுத்து ரேம்போவுக்கு இறுதி சடங்குகள் செய்து வீட்டிற்குள்ளேயே அடக்கம் செய்தனர். இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள் தங்கள் வாகனங்களை 3-ம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு போக்கு வரத்துத்துறை துணை ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி மோட்டார் வாகன சட்டம் 1988 விதி எண் 146-ன் படி இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் 3-ம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட அனைத்து மோட்டார் வாகனங்களும் தனது 100 சதவீத 3-ம் நபர் காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எனினும் பல மோட்டார் வாகனங்கள் 3-ம் நபர் காப்பீடு இல்லாமல் தொடர்ந்து இயங்குகின்றன. இது சட்டத்திற்கு முரண்பாடானது.
எனவே 3-ம் நபர் காப்பீடு இல்லாத வாகனங்களை கண்டறிந்து மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 196-ன் படி அபராதம் விதிக்கவேண்டும். அதாவது முதல் முறை குற்றத்திற்கு ரூ.2 ஆயிரம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும், குற்றம் தொடர்ந்தால் ரூ.4 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே பொதுமக்கள் தங்கள் வாகனங்களை 3-ம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்.
- மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடாமல் தேர்ச்சி பெற்றவர் பட்டியலை மட்டும் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசு 3 ஆண்டாக ஜி.எஸ்.டி. உட்பட வரிகள் மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் வேதனையாக உள்ளது. வீதிகள் தோறும் ரெஸ்டோ பார்களை திறப்பது சமுதாய சீரழிவை உண்டாக்குகிறது. போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். போதைப் பொருட்களை தடுக்க சிறப்பு காவல்பிரிவு அமைக்க வேண்டும்.
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தால் அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். இதனால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைகிறது. இதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் பணிபுரியும் யூ.டி.சி.க்களுக்கு பதவி உயர்வு வழங்க உதவியாளர் பணிக்கு துறை சார்ந்த தேர்வு நடத்தப்பட்டது. இதன் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடாமல் தேர்ச்சி பெற்றவர் பட்டியலை மட்டும் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே மதிப்பெண் பட்டியல், விடைத்தாளர் வெளியிட்டு தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் சி.பி.ஐ. வசம் புகார் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முழு பார்வையற்ற சண்முகப்பிரியா, ஒன்றாம் வகுப்பு முதல் சிறப்புப் பள்ளியில் படித்து வருகிறார்.
- எங்களை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு இம்மாதிரியான பள்ளிகளை கட்டிய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அடுத்த பிள்ளை சாவடியில் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஆனந்தரங்கப்பிள்ளை அரசு சிறப்புப் பள்ளியில் பயின்று வரும் கண் பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 442 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.
முழு பார்வையற்ற சண்முகப்பிரியா, ஒன்றாம் வகுப்பு முதல் சிறப்புப் பள்ளியில் படித்து வருகிறார்.
எங்களை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு இம்மாதிரியான பள்ளிகளை கட்டிய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.
- ஓட்டலில் இருந்த ஆறுமுகத்தின் மகன் லோகேஸ்வரனுக்கும், அஜித்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
- தகவல் அறிந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓட்டலுக்கு திரண்டு வந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே வில்லியனூர் தட்டாஞ் சாவடிபகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வில்லியனூர் அருகே உள்ள பத்துக்கண்ணு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (வயது 24) என்பவர் ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்க வந்தார். அப்போது அவர் கூடுதலாக ஒரு சாம்பார் பாக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஓட்டலில் இருந்த ஆறுமுகத்தின் மகன்லோகேஸ்வரனுக்கும், அஜித்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதலாக மாறியது.
அப்போது ஆத்திரமடைந்த லோகேஸ்வரன் கையில் வைத்திருந்த அரிவாளால் அஜித்குமாரை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓட்டலுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஓட்டலில் திரண்டு இருந்த அஜித் குமாரின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- வங்கி மூலம் மகளிர் சுய உதவி கடன்கள், விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- ரமேஷ் மற்றும் வங்கி மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதகடிப்பட்டு:
புதுச்சேரி திருபுவனையில் விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் சுமார் 11 கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 6,500 பேர் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.
வங்கி மூலம் மகளிர் சுய உதவி கடன்கள், விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வங்கியில் உறுப்பினராக உள்ள கலித்தீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த முருகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வங்கி சார்பில் வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்து தகவல் பெற்றார்.
அதில் பெரும்பாலான நபர்கள் விவசாயிகளே இல்லாமல் கடன் பெற்றதும், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் கையெழுத்து மற்றும் அரசு முத்திரைகள் இட்டு போலியாக சான்றிதழ்கள் பெறப்பட்டு அதன் மூலம் கடன் பெற்றது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் கலிதீர்த்தாள் குப்பம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் அந்த வங்கியில் மேலாளராக பணியாற்றும் ஜெயக்குமார் என்பவரும் 50 நபர்கள் மீது போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்து சுமார் ரூ.35 லட்சம் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து முருகன் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரணை மேற்கொண்டதில் போலியாக சான்றிதழ் கொடுத்து கடன் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து ரமேஷ் மற்றும் வங்கி மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி சான்றிதழ் கொடுத்து வங்கியில் ரூ.35 லட்சம் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செல்போன்களை அவற்றின் ஐ.பி. முகவரி மற்றும் ஐ.எம்.இ.ஐ எண்கள் மூலம் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட இடங்களில் முகாமிட்டு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 25 செல்போன்களை மீட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி வில்லியனூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செல்போன்கள் திருடுபோவது அதிகரித்துள்ளது. செல்போன்களை பறிகொடுத்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வில்லியனூர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதில் அந்த பகுதியை சேர்ந்த வளர்மதி என்ற நரிகுறவ பெண்ணும் செல்போன் திருடு குறித்து புகார் செய்திருந்தார். தனது கணவருக்கு ஆசையாக தவணை முறையில் வாங்கிய செல்போன் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் கடை வைத்திருந்த போது திருடு போனதாக புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சைபர் கிரைம் பிரிவு போலீசார் உதவியுடன் காணாமல் போன செல்போன்களை அவற்றின் ஐ.பி. முகவரி மற்றும் ஐ.எம்.இ.ஐ எண்கள் மூலம் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களிலும் கேரளாவிலும் திருடு போன செல்போன்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட இடங்களில் முகாமிட்டு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 25 செல்போன்களை மீட்டனர். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வில்லியனூர் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
அப்போது பொதுமக்கள் செல்போன்களை பாது காப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அஜாக்கிரதையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறினார். காணாமல் போன செல்போனை பெற்ற நரிக்குறவர் பெண் வளர்மதி கூறியதாவது:-
ஒவ்வொரு ரூபாயாக பாசிமணி விற்ற பணத்தை கொண்டு தவணை முறையில் ரூ.47 ஆயிரம் மதிப்பில் ஆசையாக கணவருக்கு வாங்கி கொடுத்த செல்போன் தொலைந்தது. இதனால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அதனை குறுகிய நாட்களில் போலீசார் கண்டுபிடித்து கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறி போலீசாருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
- புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 553 மாணவர்கள் பாட வாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
- அறிவியலில் 3 பேரும், சமூகவியலில் 4 பேர் என 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது.
இதில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 289 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 590 மாணவர்கள், 7 ஆயிரத்து 362 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 952 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 6 ஆயிரத்து 527 மாணவர்கள், 6 ஆயிரத்து 801 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 328 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.14 ஆகும்.
இதில் புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 924 மாணவர்கள், 3 ஆயிரத்து 99 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 23 பேர் தேர்வு எழுதினர். இதில் 2 ஆயிரத்து 86 மாணவர்கள், 2 ஆயிரத்து 617 மாணவிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 703 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில் மட்டும் 78.08 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவையில் மட்டும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 267 மாணவர்கள், 2 ஆயிரத்து 430 மாணவிகள் என 4 ஆயிரத்து 697 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆயிரத்து 713 மாணவர்கள், 2 ஆயிரத்து 124 மாணவிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 837 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுவையில் அரசு பள்ளிகள் மட்டும் 81.69 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
காரைக்காலில் 657 மாணவர்கள், 669 மாணவிகள் என மொத்தம் 1,326 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 373 மாணவர்கள், 493 மாணவிகள் என மொத்தம் 866 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காரைக்காலில் அரசு பள்ளிகளில் 65.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 289 அரசு, தனியார் பள்ளிகள் 107 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் 90 பள்ளிகளும், காரைக்காலில் 17 பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 108 அரசு பள்ளிகளில் 8 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் 7, காரைக்காலில் ஒரு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 553 மாணவர்கள் பாட வாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 20 பேர், கணிதம் 355 பேர், அறிவியல் 77 பேர்,சமூகவியலில் 101 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் புதுவை, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளில் கணிதத்தில் 15 பேரும், அறிவியலில் 3 பேரும், சமூகவியலில் 4 பேர் என 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
- கடந்த 5 ஆண்டில் 7 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளது.
- 2000-ம் ஆண்டில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு கிடைத்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் 2019-ம் ஆண்டில் 2 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் 17 தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் இருந்தன.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் 7 ஆயிரம் பி.டெக். இடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டில் 7 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சென்டாக் கவுன்சிலிங்கில் 10 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மட்டுமே பங்கேற்றுள்ளது.
இதில் 3 கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் நிரம்புமா? என்பதே சந்தேகமாக உள்ளது. எனவே இந்த 3 கல்லூரிகளும் விரைவில் மூடப்படும் சூழ்நிலை உள்ளது. பி.டெக். படிப்புகள் மீது மாணவர்களிடையே மோகம் குறைந்துள்ளது.
2000-ம் ஆண்டில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பொருளாதார மந்த நிலையின்போது வேலை வாய்ப்பு குறைந்தது. தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தவர்கள் ரூ.15 ஆயிரம் சம்பளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனால் என்ஜினியரிங் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்தது. அதேநேரம் கலை, அறிவியல் படிப்புகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியாமல் சில என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டன.
இதனால் கடந்த 5 ஆண்டில் 7 என்ஜினீயரிங் கல்லூரிகள் கலை கல்லூரிகளாக மாறிவிட்டன. இந்த ஆண்டு 3 அரசு என்ஜினீயரிங் கல்லூரி, 10 தனியார் கல்லூரிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 264 இடங்கள் உள்ளன.
இதில் 50 சதவீத இடங்களாவது நிரம்பினால்தான் கல்லூரிகளை நடத்த முடியும். இல்லாவிட்டால் கல்லூரிகளை நடத்த முடியாது. இதனால் அரசு ஒதுக்கீடு இடங்களும் குறையும். மாதந்தோறும் தொழில்நுட்பம் மாறுகிறது.
அதற்கு ஏற்ப மாணவர்களை கல்லூரிகள் தயார்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோரிடம் எழுந்துள்ளது.
- முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை கவுரவிக்கும் வகையில், போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அழைத்தார்.
- பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கவுரவப்படுத்தினார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 6-ந் தேதி வெளியானது.
இதில் புதுச்சேரியில் ஒரு அரசு பள்ளி உள்பட 55 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி போலீசார் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவி களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தலை வாழை இலை போட்டு விருந்தளித்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. புதுச்சேரி திருபுவனை போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்து முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை கவுரவிக்கும் வகை யில், திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அழைத்தார்.
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கவுரவப்படுத்தினார்.
மேலும் தனது கையால் தலை வாழை இலை போட்டு வடை, பாயாசம், கூட்டு, பொரியல், காரக்குழம்பு, சாம்பார், மோர், ரசம் என அறுசுவையோடு உணவு பரிமாறி மாணவ- மாணவி களையும் பெற்றோர்களையும் நெகிழ வைத்தார்.
வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்று லட்சியம் வைத்திருக்கிறீர்களோ அதை நோக்கியே உங்களது பார்வை இருக்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ அறிவுரை வழங்கினார்.
இந்தவீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பாராட்டும் குவிந்து வருகிறது.






