search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி வாலிபர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    புதுச்சேரி வாலிபர் "ஹீட் ஸ்ட்ரோக்கால்" பாதிக்கப்பட்டு சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி

    • கடும் வெயிலின் காரணமாக காமேசுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
    • மும்பையில் இருந்து காமேசை ஆம்புலன்சில் கொண்டு வர ரூ.82 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.

    திருக்கனூர்:

    புதுச்சேரியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். பலரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி திருக்கனூர் புதுநகரை சேர்ந்தவர் முருகன் ராமசாமி. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளைய மகன் காமேஷ் (வயது 23) மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். வேலை தேடி காமேஷ் கடந்த மாதம் மும்பைக்கு சென்றார்.

    அங்கு ஒரு அறையில் வாடகைக்கு தங்கி பல நிறுவனங்களுக்கு வெயிலில் சென்று அலைந்து திரிந்து வேலை தேடியுள்ளார். ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கடும் வெயிலின் காரணமாக காமேசுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மும்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படாததால் முருகன் ராமசாமி காமேசை மும்பையில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

    மும்பையில் இருந்து காமேசை ஆம்புலன்சில் கொண்டு வர ரூ.82 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.

    அந்த பணத்தையே முருகன் ராமசாமி கடன் வாங்கி செலுத்திய நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் பல லட்சம் செலவாகும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.

    வறுமையில் வாடும் முருகன் ராமசாமி தனது மகனின் உயிர் காக்க தன்னார்வலர்களும் புதுச்சேரி அரசும் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருக்கனூர் இளைஞர் மும்பையில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திருக்கனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×