search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தனி நபர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள்
    X

    தனி நபர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள்

    • ரிஸ்க் வெயிட் காரணமாக வீட்டு கடன், கல்வி கடன், நகை கடன், வாகன கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
    • தற்போதைய நிலவரப்படி கடந்த செப்டம்பர் மாதம் வரை 2.17 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையாக கிரிடிட் கார்டுகளுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சமீபகாலமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் தனி நபர்களுக்கு (பர்சனல் லோன்) கடன் வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் தளர்வு ஏற்பட்டன. இதன் காரணமாக இந்த வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நேரில் சந்திக்காமலே ஆன்லைன் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனிநபர் கடன்களை தாராளமாக வழங்கி வந்தது.

    இதன் காரணமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் அதிக அளவில் கடன் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. தனிநபர்களை அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு சிபில் அடிப்படையில் கடன் வேண்டுமா? என்று நச்சரிப்பதும். விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு எவ்வித ஆவணமும் இன்றி உடனே கடன் கொடுக்கும் நிலையும் உள்ளது. இதனால் பல நன்மைகள் இருந்தாலும் பொருளாதார ரீதியில் வங்கிகள் மற்றும் வங்கிகள் சாரா நிதி நிறுவனங்களுக்கு பல்வேறு வகைகளில் நிதி இழப்புகள் ஏற்பட்டன.

    இந்த நிலையில் ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கிகள் சாரா நிதி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தனி நபர்களுக்கான கடன் வழங்குவதற்கு உரிய ரிஸ்க் வெயிட் 100 சதவீதம் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பற்ற முறையில் தனி நபர்களுக்கு கடன் வழங்குவது நிறுத்தப்படும் மேலும் கடன் வழங்குவதற்காக வங்கிகள் வைத்திருக்கும் இருப்பில் 12 லட்சம் கோடி ரூபாய் வரை கட்டுப்படுத்தவும் இது ஏதுவாக அமையும்.

    தற்போது வழக்கமாக 100 ரூபாயில் 9 ரூபாய் தனி நபர்களுக்கான கடன் வழங்குவதற்கான மூலதனமாக வைப்பு வைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மூலதன இருப்பு ரூ.11. 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதன் மூலம் வங்கிகள் தனி நபர்களுக்கு கடன் வழங்கும் திறனை கட்டுப்படுத்த எதுவாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

    இந்த ரிஸ்க் வெயிட் காரணமாக வீட்டு கடன், கல்வி கடன், நகை கடன், வாகன கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான சேவை எந்த வகையிலும் பாதிக்கப்படாது. அது வழக்கம் போல வழங்கப்படும் என்றும் இந்த கடன்களுக்காக ரிஸ்க் வெயிட் 100 சதவீதமாகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    தனிநபர் கடன்களுக்கான ரிஸ்க் வெயிட் மட்டுமே கூடுதலாக 25 சதவீதம் அதிகரித்துள்ளதால் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இனிமேல் பெர்சனல் லோன் என்று அழைக்கப்படும் தனிநபர் கடன்களை வழங்குவதில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனி நபர்கள் கடன் வழங்குவதற்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் தெரியவரும்.

    இதன் காரணமாக தனிநபர் கடன்கள் வழங்குவது குறைக்கப்பட்டு மற்ற கடன் சேவைகள் கூடுதலாக கிடைக்க உரிய விதிமுறைகளை வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் தீவிரமாக கண்காணிக்கும் படியும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக கிரெடிட் கார்டு வழங்குவதிலும் பல்வேறு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி கடைபிடிக்க வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி கடந்த செப்டம்பர் மாதம் வரை 2.17 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையாக கிரிடிட் கார்டுகளுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்களின் அன்றாட சேவைகளில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த கிரெடிட் கார்டு வர்த்தகங்களையும் தீவிரமாக கண்காணித்து அதனையும் குறிப்பிட்ட இலக்குகளுடன் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    இதனால் வருங்காலங்களில் கிரிடிட் கார்டு வழங்குவது மற்றும் அதில் உள்ள லிமிடேஜ் தொகை தொடர்பாகவும் அதிரடி மாற்றங்களை கொண்டு வர வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Next Story
    ×