search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- பலத்த மழையால் வீடுகளை இழந்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்
    X

    கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- பலத்த மழையால் வீடுகளை இழந்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்

    • மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 22 பேர் பலியாகி உள்ளனர். 250-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
    • மழையால் வீடுகளை இழந்தவர்களுக்காக மாநிலம் முழுவதும் 221 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    மத்திய மற்றும் வடக்கு கேரளா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது பெய்து வரும் மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    இதன் காரணமாக திருச்சூர், இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் அதிக மழை பெய்யும் என்று கூறப்பட்டிருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

    மழை அதிகம் பெய்யும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்களுடன் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    இவர்கள் மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து வருகிறார்கள்.

    மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 22 பேர் பலியாகி உள்ளனர். 250-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

    மழையால் வீடுகளை இழந்தவர்களுக்காக மாநிலம் முழுவதும் 221 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 7 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து கொடுத்துள்ளது.

    கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இடுக்கி அணை, பெரிங்கல்குத்து அணை அணைகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். இந்த அணைகளில் இருந்து தற்போது உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கேரளாவில் மழை அதிகம் பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளிக்க மாநில அரசு அறிவுறுத்தி இருந்தது.

    அதன்படி ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை விடப்படுவதாக நேற்று முன்தினம் இரவே அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து விட்டனர்.

    ஆனால் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் நேற்று காலையில் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த தகவல் மக்களை சென்றடையும் முன்பு பெரும்பாலான பள்ளி மாணவ, மாணவிகள் பலரும் பள்ளிக்கு சென்று விட்டனர்.

    இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் அதிருப்தி தெரிவித்தனர். கலெக்டரின் நடவடிக்கையையும் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த வக்கீல் ஒருவர் இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தாமதமாக விடுமுறை வழங்கிய எர்ணாகுளம் கலெக்டரிடம் விளக்கம் கேட்க வேண்டும், விடுமுறை அறிவிப்புக்கான சரியான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×