search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குரங்கு அம்மை நோய் பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 11 பேர் கண்காணிப்பு
    X

    குரங்கு அம்மை நோய் பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 11 பேர் கண்காணிப்பு

    • திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர், இங்கிருந்து ஒரு கார் மூலம் தனது சொந்த ஊரான கொல்லத்துக்கு சென்றுள்ளார்.
    • வீட்டிற்கு சென்ற பின்பு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் ஒரு ஆட்டோவில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    உலகை மிரட்டிய கொரோனா பாதிப்பு இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் தான் கண்டறியப்பட்டது.

    இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் புதிய வகை வைரஸ் நோயான குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

    தற்போது 55 நாடுகளில் இந்த நோய் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்க்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    குரங்கு அம்மை நோய் பற்றிய விபரங்கள் வெளியானதும், அதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

    அதன்படி அனைத்து மாநிலங்களும் குரங்கு அம்மை நோய் பாதிப்பை தடுக்க கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டது. இதில் 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த நபரின் ரத்தம், சிறுநீர் ஆகியவை பூனாவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனை கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டவருக்கு இணை நோய்கள் எதுவும் இல்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் விரைவில் குணமடைவார் என நம்புகிறோம்.

    பாதிப்புக்கு ஆளான நபர் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளா வந்துள்ளார். திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர், இங்கிருந்து ஒரு கார் மூலம் தனது சொந்த ஊரான கொல்லத்துக்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பின்பு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் ஒரு ஆட்டோவில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்.

    தற்போது அவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதியாகி இருப்பதால் அந்த டிரைவர்கள் இருவருக்கும் நோய் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல அந்த நபரின் குடும்பத்தாரும் அவரது நண்பர்கள் என நெருங்கிய தொடர்பில் இருந்த 11 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நோய் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    இதில் யாருக்காவது நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள்.

    இதுபோல நோய் பாதித்தவருடன் விமானத்தில் பயணம் செய்தவர்களையும் பரிசோதிக்க முடிவு செய்துள்ளோம்.

    குரங்கு அம்மை நோய் மற்றவர்களுக்கு பரவும் சாத்திய கூறுகள் மிகமிக குறைவு. எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×