search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பேரை நரபலி கொடுத்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த முக்கிய பிரமுகர்கள்
    X

    கைதான லைலா, பகவல் சிங், முகமது ஷபி.

    கேரளாவில் தமிழக பெண் உள்பட 2 பேரை நரபலி கொடுத்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த முக்கிய பிரமுகர்கள்

    • முகமது ஷபியின் செல்போன் எண்ணை கைப்பற்றி அதில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
    • செல்போனில் பதிவான தகவல்களை கண்டுபிடித்தால் அவருக்கு யார்-யாரிடம் தொடர்பு இருந்தது, நரபலி நடந்த வீட்டிற்கு வந்து சென்ற முக்கிய பிரமுகர்கள் பற்றிய விபரம் தெரியவரும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி மற்றும் தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா. இந்த 2 பெண்கள் 56 துண்டுகளாக வெட்டப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டனர்.

    நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி, அவரது நண்பர் பகவல் சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதும், நரபலி கொடுத்த பின்பு அவர்களின் மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து கைதான 3 பேரையும் போலீசார் 12 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    பத்தினம்திட்டா பகுதியில் உள்ள பகவல் சிங்கின் வீட்டில் வைத்துதான் 2 பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த வீட்டிற்கு 3 பேரையும் அழைத்து சென்று போலீசார் சோதனை நடத்தினர். மேலும் நரபலி கொடுக்கப்பட்ட அறை, பெண்களின் உடல் பாகங்கள் புதைக்கப்பட்ட பகுதிகளில் போலீசாரும், கைரேகை நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதோடு அக்கம்பக்கத்தினரிடமும் பகவல் சிங், அவரது மனைவி லைலா குறித்து ரகசியமாக விசாரித்தனர். இதில் பகவல் சிங், கை நாடி பார்த்து வைத்தியம் செய்து வந்ததாகவும், அவரது வீட்டிற்கு அடிக்கடி சொகுசு கார்களில் பலர் வந்து சென்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்தது.

    பகவல் சிங் வைத்திய தொழிலுடன் மசாஜ் செய்வதிலும் வல்லவர் எனக்கூறப்படுகிறது. எனவே இவரிடம் மசாஜ் செய்து கொள்ள பல முக்கிய பிரமுகர்கள் வந்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர்.

    மேலும் இரவு நேரங்களில் பெண்களும் இங்கு வந்து சென்றுள்ளனர். அவர்களை வைத்து பகவல் சிங்கும், முகமது ஷபியும் விபசாரம் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தியதில் பகவல் சிங்கின் வீட்டிற்கு 2 மாணவிகள் வந்து சென்ற தகவல் கிடைத்தது. அந்த மாணவிகளுக்கு முகமது ஷபி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து அந்த மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக மகளிர் போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும் நேற்று மந்திரவாதி முகமது ஷபியின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது முகமது ஷபியின் செல்போனை கேட்டனர். ஆனால் அதை அவர் உடைத்து விட்டதாக அவர்கள் கூறினர்.

    எனவே முகமது ஷபியின் செல்போன் எண்ணை கைப்பற்றி அதில் உள்ள தகவல்களை மீட்டெடுக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். செல்போனில் பதிவான தகவல்களை கண்டுபிடித்தால் அவருக்கு யார்-யாரிடம் தொடர்பு இருந்தது, நரபலி நடந்த வீட்டிற்கு வந்து சென்ற முக்கிய பிரமுகர்கள் பற்றிய விபரம் தெரியவரும்.

    அப்போது இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×