search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நரபலி வழக்கில் வீட்டின் பிரிட்ஜில் 10 கிலோ நர மாமிசம் பதுக்கியது அம்பலம்- தோட்டத்தில் எலும்புகளும் சிக்கின
    X

    வீட்டு தோட்டத்தில் முகமது சபி அடையாளம் காட்டிய போது எடுத்த படம்.

    நரபலி வழக்கில் வீட்டின் பிரிட்ஜில் 10 கிலோ நர மாமிசம் பதுக்கியது அம்பலம்- தோட்டத்தில் எலும்புகளும் சிக்கின

    • 2 பெண்களை நரபலி கொடுத்த பின்னர் அவர்களது உடல்களை 56 துண்டுகளாக வெட்டிய மந்திரவாதி உள்பட 3 பேரும் அதனை வீட்டின் பிரிட்ஜில் வைத்துள்ளனர்.
    • உடல்களை அடக்கம் செய்வதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்ட தொழிலாளி ஒருவரை வரவழைத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி மற்றும் தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா என்ற 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி, அவரது நண்பர் சித்த வைத்தியர் பகவல் சிங், பகவல் சிங்கின் மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்திய போது, 2 பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தி பின்னர் நரபலி கொடுத்ததும், நர மாமிசம் சாப்பிட்டதாகவும் தகவல் கிடைத்தது. இதற்கிடையில் கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களை விசாரணைக்காக போலீசார் காவலில் எடுத்தனர். 3 பேரையும் 12 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இதனைத் தொடர்ந்து நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பகவல் சிங்கின் வீட்டுக்கு 3 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு கொச்சி போலீஸ் துணை கமிஷனர் சசிதரன் முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பகவல் சிங்கின் வீட்டில் சில இடங்களிலும், பிரிட்ஜிலும் ரத்தக்கறைகள் காணப்பட்டன. இதுபற்றி போலீசார் அவர்களிடம் கேட்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    2 பெண்களை நரபலி கொடுத்த பின்னர் அவர்களது உடல்களை 56 துண்டுகளாக வெட்டிய மந்திரவாதி உள்பட 3 பேரும் அதனை வீட்டின் பிரிட்ஜில் வைத்துள்ளனர். உடல்களை அடக்கம் செய்வதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்ட தொழிலாளி ஒருவரை வரவழைத்துள்ளனர்.

    அதனால் நீண்ட நேரமாக பிரிட்ஜில் உடல் பாகங்கள் வைக்கப்பட்டதாக விசாரணையின் போது கைதானவர்கள் தெரிவித்தனர். தற்போது நடைபெற்ற சோதனையின் போது பிரிசரில் இருந்து மாமிச துண்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் தான் ரத்தக்கறை உறைந்து காணப்பட்டு உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் 2 பெண்கள் தவிர மேலும் சிலரும் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது.

    போலீசாரின் இந்த சந்தேகத்திற்கு, பகவல் சிங்கின் வீட்டு தோட்டத்தில் எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டது தான் காரணம். மேலும் தோட்டத்தில் புதிதாக மஞ்சள் செடிகள் ஆங்காங்கே நட்டு வைக்கப்பட்டு உள்ளன. எனவே மாயமானவர்கள் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    போலீசாரின் இந்த சோதனையின் போது சிறப்பு பயிற்சி பெற்ற மோப்பநாய்கள் பயன்படுத்தப்பட்டன. 40 அடிக்கு கீழ் உடல்கள் அழுகி போய் இருந்தாலும் அதனை கண்டுபிடிக்கும் சக்தி வாய்ந்த மாயா, மர்பி என்ற மோப்பநாய்கள் மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது. தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் நரபலி கொடுக்கப்பட்டது எப்படி? என்பது குறித்து டம்மி உடலை வைத்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி விவரம் சேகரித்தனர்.

    Next Story
    ×