search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    5 மணி நேரம் விடாமல் பலத்த மழை- பெங்களூரு வெள்ளத்தில் மிதக்கிறது
    X

    5 மணி நேரம் விடாமல் பலத்த மழை- பெங்களூரு வெள்ளத்தில் மிதக்கிறது

    • பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் இடுப்பு அளவுக்கு தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • மாரத்தஹள்ளி-சர்ஜா புரா அவுட்டர் ரிங் ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட பல மாவட்டங்களில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பெங்களூரு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்ய தொடங்கியது. நகரின் பல இடங்களில் சுமார் 5 மணி நேரம் கனமழை கொட்டியது.

    இரவு முழுவதும் பெய்த மழையால் பெங்களூரின் அனைத்து சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் இடுப்பு அளவுக்கு தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மாரத்தஹள்ளி-சர்ஜா புரா அவுட்டர் ரிங் ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    அடுக்குமாடி குடியிருப்புகளின் அடித்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. ஈகோஸ்பேஸ் அருகே வெளிவட்ட சாலை, பெல்லந்தூர், கே.ஆர்.மார்க்கெட், சில்க் போர்ட் சந்திப்பு, வர்தூர் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்குள் மழை நீர் புகுந்தது.

    பழைய விமான நிலைய சாலையில் வெள்ளத்தில் பஸ்கள் சிக்கி கொண்டன. சாலை வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மிதந்தன. பாலகெரே பானத்தூர் சாலை ஆறு போல் காட்சி அளிக்கிறது.

    கனமழை-வெள்ளம் காரணமாக பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர தேவைகள் தவிர, வீடுகளை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு நகர் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

    பெங்களூரு புறநகரில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. பல பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்தன.

    பெங்களூரு நகரம் கடந்த ஒரு வாரத்தில் 2-வது முறையாக வெள்ளத்தில் மிதந்து வருகிறது. கடந்த 30-ந்தேதி பெய்த பலத்த மழையால் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மீண்டும் பலத்த மழை பெய்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    வருகிற 7-ந்தேதி வரை பெங்களூரு, பெங்களூரு ரூரல், சிக்கபள்ளாப்பூர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவங்கேரே, ஹாசன், கோலார், ராமநகரா, குடகு, சாமராஜா நகர், மாண்டியா, மைசூர், ஷிமோகா மற்றும் தும்கூர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடலோர மற்றும் வட உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை இலாகா தெரிவித்துள்ளது. இதற்கிடையே மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழை வெள்ள சேதத்தை கணக்கிடும்படி வருவாய்த்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×