search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
    X

    கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

    • நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • 39 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனியார் ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தற்போது மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இருவர் காய்ச்சல் பாதித்து தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து இறந்தனர்.

    தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்துவம் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

    நிபா வைரஸ் பாதிப்பு மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் கேரளா வந்தனர். மத்திய சுகாதாரக்குழுவின் மூத்த ஆலோசகரும், நுண்ணுயிரியல் நிபுணருமான மால சாப்ரா தலைமையிலான 6 பேர் குழு சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கோழிக்கோடு மாலட்ட கலெக்டர் கீதா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    அவர்களிடம் கோழிக்கோடு மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்த மத்திய குழுவினர், தொற்று பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். தொற்று பாதிப்புக்கு உள்ளான மருதோன்கரை உள்ளிட்ட இடங்களில் மத்திய குழுவினர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் நிபா வைரஸ் தொற்று கண்டறிவதை தீவிரப்படுத்தும் விதமாக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் இருந்து 2 நடமாடும் ஆய்வக வாகனங்கள் கோழிக்கோட்டுக்கு வந்துள்ளன. அதில் நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு நிபா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கேரளாவின் வடக்கு மாவட்டங்களான மலப்புரம், வயநாடு, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    அந்த மாவட்டங்களில் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் பார்வையாளர்களை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    மேலும் மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறையினருக்கு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 39 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தனியார் ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி, புனேவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த நடமாடும் ஆய்வக வாகனத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவருடன் தொடர்பில் இருந்து வந்த நபர்களின் பட்டியலை சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகின்றனர். மேலும் ஒரு நபருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×