search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்: அத்தப்பூ கோலத்தால் வண்ணமயமாக காட்சியளித்த வீடுகள்

    • சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளத்தின் அறுவடைத்திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
    • அனைத்து வீடுகளின் முன்பும் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்ததால் எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக காட்சியளித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகை ஓணம்.

    மகாபலி சக்கரவர்த்தியை சூழ்ச்சியால் வீழ்த்திட திருமால் வாமனராக அவதரித்து பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாக கேட்டதாகவும், அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்பது வரலாறு.

    அதன்படி மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுக்கு ஒருமுறை மக்களை காண வருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாக திருவோண திருநாளாவை கேரள மக்கள் கொண்டாடுகின்றனர். சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளத்தின் அறுவடைத்திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த 20-ந்தேதி தொடங்கியது. அன்று முதலே கேரள மாநிலம் ஓணம் கொண்டாட்டத்தால் களைகட்ட தொடங்கியது.

    மாநிலத்தில் பல இடங்களில் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளும் நடைபெற்றன. பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் நடந்த ஓணம் கொண்டாட்டங்களில் மாணவ-மாணவிகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் ஓணம் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து மக்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி புத்தாடைகள் அணிந்தனர். பின்பு உறவினர்கள், நண்பர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலில் போடப்படும் அத்தப்பூ என்ற பூக்கோலம் ஆகும். அதன்படி இன்று அனைவரின் வீடுகளின் முன்பும் வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்தன.

    அனைத்து வீடுகளின் முன்பும் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்ததால் எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக காட்சியளித்தது. அது மட்டுமின்றி பல இடங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடந்தன. அதில் வயது வித்தியாசமின்றி அனைவரும் கலந்துகொண்ட ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் தங்களின் வீடுகளில் பல வகையான சிறப்பு உணவுகள் தயார் செய்தனர். ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் பல வகையான உணவுகளை தயாரித்து குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் தங்களின் வீட்டில் தயாரித்த உணவு பதார்த்தங்களை அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தால் கேரள மாநிலம் முழுவதும் இன்று களை கட்டி காணப்பட்டது.

    கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவில்லை. அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளின் படியே ஓணம் கொண்டாடப்பட்டது. வீட்டில் இருந்தாலும் முகக்கவசம் அணிந்தபடியே அனைவரும் காணப்பட்டனர். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று இல்லாத காரணத்தால் 3 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் முகக்கவசம் அணியாமல் ஓணம் பண்டிகை கொண்டாடியதை காண முடிந்தது.

    Next Story
    ×