search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்றத்தில் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை- மக்களவை சபாநாயகர் விளக்கம்
    X

    பாராளுமன்றத்தில் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை- மக்களவை சபாநாயகர் விளக்கம்

    • பல்வேறு வார்த்தைகள் பாராளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என கூறப்பட்டிருந்தது
    • எதிர்க்கட்சியினர் சரியாக படித்திருந்தால் தவறான கருத்தை பரப்பியிருக்க மாட்டார்கள் என சபாநாயகர் தகவல்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

    அதில், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், குரூரமானவர், கிரிமினல், ரவுடித்தனம் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என கூறப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட கடுமையாக விமர்சிப்பதற்கு பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளும் இதில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த வார்த்தைகளை பேசினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் விமர்சனம் எழுந்தது. பாஜக எவ்வாறு இந்தியாவை அழிக்கிறது என்பதை விவரிக்க பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையையும் பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாதவை என பட்டியலிட்டு தடை செய்திருப்பதாக குற்றம்சாட்டின. இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் எதிர்க்கட்சியினர் தாறுமாறாக விமர்சனங்களை முன்வைத்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்தார். அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பை மட்டுமே வெளியிட்டிருப்பதாகவும், எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    "இதற்கு முன்பும் இதுபோன்ற அன்பார்லிமென்டரி வார்த்தைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. காகிதங்கள் வீணாகாமல் இருக்க இப்போது அதை இணையத்தில் வெளியிட்டோம். எந்த வார்த்தைகளும் தடை செய்யப்படவில்லை. நீக்கப்பட்ட சொற்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளோம். இது வழக்கமான நடைமுறைதான்.

    1100 பக்கங்கள் கொண்ட இந்த அகராதியை அவர்கள் (எதிர்க்கட்சியினர்) படித்திருப்பார்களா? படித்திருந்தால் இப்படி தவறான கருத்தை பரப்பியிருக்க மாட்டார்கள். இதற்கு முன்னர் 1954, 1986, 1992, 1999, 2004, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. 2010இல் இருந்து ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

    உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளது. அதே நேரத்தில் அவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். நீக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியால் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நீக்குவது கிடையாது" என்றார் சபாநாயகர் ஓம் பிர்லா.

    Next Story
    ×