search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலங்களுக்கு  ஜி.எஸ்.டி. பாக்கியா?: நிர்மலா சீதாராமன் விளக்கம்
    X

    மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. பாக்கியா?: நிர்மலா சீதாராமன் விளக்கம்

    • ஜி.எஸ்.டி. தொகையை விடுவிப்பதற்கு பொது கணக்காயரின் சான்றிதழ் கட்டாயம்.
    • 2022-2023 நிதியாண்டுக்கான பொது கணக்காயர் சான்றிதழை கர்நாடகாவை தவிர, எந்த மாநிலமும் அனுப்பவில்லை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில், கேள்வி நேரத்தின்போது, மேற்கு வங்காளத்துக்கு ஜி.எஸ்.டி. பாக்கி வைத்திருப்பது ஏன்? என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே துணை கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இல்லை. ஜி.எஸ்.டி. தொகையை விடுவிப்பதற்கு பொது கணக்காயரின் சான்றிதழ் கட்டாயம். அந்த சான்றிதழ் இல்லாவிட்டால், நாங்கள் தொகையை விடுவிக்க முடியாது.

    எனவே, மத்திய அரசு தரப்பில் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறுவது சரியல்ல. அது தவறான வார்த்தை.

    எந்தெந்த மாநிலங்கள் பொது கணக்காயர் சான்றிதழை அனுப்பவில்லை என்று பெயர் குறிப்பிட்டே சொல்கிறேன். அப்போதுதான் மக்கள் மனதில் சந்தேகம் எழாது.

    மேற்கு வங்காளம் 2019-2020 நிதியாண்டுக்கான சான்றிதழ் முதல், 2022-2023 நிதியாண்டின் முதல் காலாண்டு வரை சான்றிதழ் அனுப்பவில்லை. அதனால், மேற்கு வங்காளத்துக்கு பாக்கித்தொகை விடுவிக்கப்படவில்லை. முதலில், சான்றிதழ் அனுப்பட்டும். பிறகு நாங்கள் விடுவிக்கிறோம்.

    கேரள மாநிலம், சான்றிதழ் அனுப்பி வைத்தபோதிலும், புள்ளிவிவரங்களை சரிபார்க்கும் வரை தொகையை விடுவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. எனவே, மத்திய அரசு தரப்பில் நிலுவை வைக்கவில்லை.

    2022-2023 நிதியாண்டுக்கான பொது கணக்காயர் சான்றிதழை கர்நாடகாவை தவிர, எந்த மாநிலமும் அனுப்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ''கைது செய்யும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வியாபாரிகளிடம் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வரம்புமீறி நடந்து கொண்டால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    மக்களவையில், நடப்பு நிதியாண்டில், ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் கோடி கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் கோரும் துணை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதற்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    நமது பொருளாதாரம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் ஏற்பட்ட 7.6 சதவீத வளர்ச்சி, உலகிலேயே அதிகம். பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக உயர்ந்துள்ளோம்.

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தற்போதைய நிலைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சியே காரணம். அந்நிறுவனத்துக்கு ரூ.11 ஆயிரத்து 850 கோடி ஒதுக்கி இருக்கிறோம்.

    100 நாள் வேலை திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.80 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளோம்.

    வெங்காயம் பிரச்சினையை பொறுத்தவரை, விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலன்களை சீர்தூக்கி செயல்பட்டு வருகிறோம். வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால், நுகர்வோரின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், துணை மானிய கோரிக்கை நிறைவேறியது.

    Next Story
    ×