search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2 நாட்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை- பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
    X

    2 நாட்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை- பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

    • காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளி உடலில் நேரடியாக படுவதை தவிர்க்க வேண்டும்.
    • பகலில் மது, காபி, டீ மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் உள்ளிட்டவைகளை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கம்போல் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது. அப்போது அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. சில மாவட்டங்களில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    ஆனால் பருவமழை சில வாரங்களே நீடித்தது. அதன்பிறகு மழை பெய்யவில்லை. இதனால் வழக்கத்தை விட அங்கு வெயில் அதிகமாக அடித்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் இன்றும், நாளையும் அதிக வெப்ப நிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கேரள மாநிலத்தில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், 9 மாவட்டங்களில் 34 முதல் 36 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் 36 டிகிரி செல்சியசும், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் பாலக்காட்டில் 35 டிகிரி செல்சியசும், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 34 டிகரி செல்சியசும் வெப்பம் பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதிகரிக்கும் வெப்ப நிலையை கருத்தில் கொண்டு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

    காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளி உடலில் நேரடியாக படுவதை தவிர்க்க வேண்டும், நீரிழப்பை தடுக்க கையில் குடிநீர் பாட்டில் வைத்திருக்க வேண்டும், தாகம் இல்லாவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    பகலில் மது, காபி, டீ மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் உள்ளிட்டவைகளை குடிப்பதை தவிர்க்க வேண்டும், வெளியில் செல்லும்போது தளர்வான மற்றும் வெளிர் நிற ஆடைகள் அணிய வேண்டும், குடை அல்லது தொப்பி பயன்படுத்துவது நல்லது.

    மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உடலில் சூரிய ஒளி படுவதை தவிர்க்க வேண்டும்.

    காட்டுத்தீயை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் இந்த காலக்கட்டத்தில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

    மேற்கண்டவை உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    Next Story
    ×