search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆளுங்கட்சி-எதிர்கட்சியினர் அமளி: பாராளுமன்ற 2 அவைகளும் 4வது நாளாக முடங்கியது
    X

    ஆளுங்கட்சி-எதிர்கட்சியினர் அமளி: பாராளுமன்ற 2 அவைகளும் 4வது நாளாக முடங்கியது

    • அதானி குழும விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு விவகாரம் பாராளுமன்ற மேல்சபையிலும் எதிரொலித்தது.
    • இரு அவைகளும் இன்று 2-வது நாளாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதால் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது.

    புதுடெல்லி:

    அதானி குழும முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் கடந்த 3 நாட்களாக இரு சபைகளும் முடங்கியது.

    விவாதம் எதுவும் நடைபெறாமல் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த பிரச்சினை இன்றும் நீடித்தது. இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையில் பதாகையுடன் அவையின் மையப்பகுதிக்கு சென்று அதானி குழும முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் இந்திய ஜனநாயகம் குறித்து இழிவாக பேசியதாக கூறி அதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

    உடனே சபாநாயகர் ஓம்பிர்லா நான் சபையை நடத்த விரும்புகிறேன். உறுப்பினர்களுக்கு போதுமான அளவு பேச அனுமதி அளிக்கப்படும். இதனால் அனைவரும் அமைதியாக இருக்கையில் அமருங்கள். சபை அமைதியாக நடைபெற ஒத்துழையுங்கள் என்று கூறினார்.

    ஆனால் ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் அவரது பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கூச்சலிட்டவாறு இருந்தனர். தங்கள் முடிவில் அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனால் பாராளுமன்றத்தில் கூச்சலும், அமளியும் நிலவியது. விவாதங்கள் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து சபாநாயகர் ஓம்பிர்லா சபையை 2 மணி வரை ஒத்திவைத்தார். உறுப்பினர்களின் அமளியால் சபை தொடங்கிய 5 நிமிடங்களில் விவாதம் எதுவும் நடைபெறாமல் ஒத்திவைக்கபட்டது. இதனால் இன்று 4-வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது.

    அதானி குழும விவகாரம், ராகுல் காந்தி மன்னிப்பு விவகாரம் பாராளுமன்ற மேல்சபையிலும் எதிரொலித்தது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சபை கூடியதும் கோஷம் எழுப்பி கொண்டு இருந்தனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் தங்களை பேச அனுமதிப்பது இல்லை எனக்கோரி கோஷமிட்டனர். அவர்கள் முகத்தில் கறுப்பு துணி கட்டி வந்திருந்தனர். அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை சபை தலைவர் ஜெகதீப்தன்கர் அவர்களை அமைதியாக இருக்கும்படி சொல்லியும் அவர்கள் அதை கேட்கவில்லை.

    இதனால் மேல்-சபையும் தொடங்கிய சில நிமிடங்களில் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இரு அவைகளும் இன்று 2-வது நாளாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதால் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற முடியாத நிலை உருவாகி உள்ளது.

    முன்னதாக பிரதமர் மோடி மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஸ்கோயல், அனுராக் தாக்கூர் உள்ளிட்ட மூத்த மந்திரிகளுடன் பாராளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பாராளுமன்றத்தில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து விவாதித்தார்.

    Next Story
    ×