search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜ் தாக்கரே
    X
    ராஜ் தாக்கரே

    ராஜ் தாக்கரேயின் அயோத்தி பயணம் திடீர் ரத்து

    நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே வருகிற 5-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தார்.
    மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து சிவசேனா ஆட்சி நடத்தி வரும் நிலையில், சிவசேனாவிடம் இருந்து இந்துக்களின் வாக்குகளை தட்டிப்பறிக்கும் முனைப்பில் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே வருகிற 5-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தார்.

    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரே அயோத்தி செல்ல உள்ளதாக அறிவித்த நிலையில், இவரின் அறிவிப்பு அவருக்கு போட்டியாக அமைந்தது. ஆனால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங், ராஜ் தாக்கரேவின் அயோத்தி பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கடந்த காலங்களில் வட இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை உத்தரபிரதேசத்திற்குள் அவரை நுழைய விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்தநிலையில் திடீரென ராஜ் தாக்கரே தனது அயோத்தி பயணத்தை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அயோத்தி நகரத்திற்கு மேற்கொள்ள இருந்த எனது சுற்றுப்பயணத்தை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளேன்.

    வருகிற 22-ந் தேதி காலை புனேயில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இதை பற்றி நான் பேசுவேன்" என தெரிவித்துள்ளார். ராஜ் தாக்கரேவுக்கு உடல்நிலை சரியில்லை என தகவல்கள் வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

    இந்தநிலையில் ராஜ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து குறித்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

    ராஜ் தாக்கரேவின் உடல்நிலை சீராக வேண்டும் என்று ராமரை பிரார்த்திக்கிறேன். இந்த பயணம் விளம்பரம் செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதில், சில அரசியல் காரணங்கள் இருக்கலாம். பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் 'யூஸ் அண்டு துரோ' கொள்கைக்கு பா.ஜனதா பெயர் பெற்றது.

    சிவசேனா 25 ஆண்டுகள் இந்த பிரச்சினையை அனுபவித்த பிறகு கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. மந்திரி ஆதித்ய தாக்கரே முன்னர் அறிவித்த அட்டவணைப்படி ஜூன் 15-ந் தேதி அயோத்திக்கு பயணம் செல்வார். இது அரசியல் பயணம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×