search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாஜக
    X
    பாஜக

    தேர்தலில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி- கட்சி தாவ தயாராகும் பாஜக தலைவர்கள்

    அதிருப்தி தலைவர்களின் மனநிலையை உணர்ந்த பாஜக தலைமை, இதுபோன்ற அதிருப்தி இயற்கையானது என்றும், ஓரிரு நாட்களில் நிலைமை சரியாகும் என்றும் கூறுகிறது.
    டேராடூன்:

    பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜக தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் நேற்று முன்தினம் 59 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். முதல்வர் புஷ்கர் சிங் தாமி கதிமா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 

    இந்நிலையில், வேட்பாளர் தேர்வில் பல தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், அவர்கள் கட்சியை விட்டு வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளனர். சிலர் வேறு கட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். சிலர், சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். 

    உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

    அதிருப்தி தலைவர்கள் தேர்தல் களத்தில் இறங்கினால், அதிகாரப்பூர்வ பாஜக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் பறிபோய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு கட்சியில் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது. 

    பல தொகுதிகளில் அர்ப்பணிப்புள்ள கட்சி உறுப்பினர்களை விட காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர்களுக்கே கட்சி தலைமை முன்னுரிமை கொடுத்திருப்பதாக சிலர் கூறி உள்ளனர். அவர்களில் தரலி தொகுதி எம்எல்ஏ முன்னி தேவி ஷா, துவாரகா எம்எல்ஏ மகேஷ் நேகி ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். 

    தனக்கு டிக்கெட் மறுத்தது தொடர்பாக மத்திய கட்சி தலைமை விளக்க வேண்டும் என்று கூறிய முன்னி தேவி, மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதுடன், எனது தொகுதியில் கணிசமான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளேன் என்றார். 

    கட்சி தலைமை, விசுவாசமான கட்சி தொண்டரை வேட்பாளராக நிறுத்தியிருந்தால் நான் வருத்தப்பட மாட்டேன். ஆனால் அது காங்கிரசில் இருந்து வந்தவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதை தாங்க முடியவில்லை என்றும் முன்னி தேவி கூறினார்.

    கட்சிக்குள் இருக்கும் இந்த அதிருப்தி தலைவர்களின் மனநிலையை உணர்ந்த பாஜக தலைமை, இதுபோன்ற அதிருப்தி இயற்கையானது என்றும், ஓரிரு நாட்களில் நிலைமை சரியாகும் என்றும் கூறுகிறது.

    இதுபற்றி மாநில பாஜக தலைவர் மதன் கவுசிக் கூறுகையில், ‘போட்டியிட வாய்ப்பு கேட்டு ஒரு தொகுதிக்கு பலர் முயற்சி செய்யலாம். ஆனால் அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு ஒருவருக்கு மட்டுமே சீட் கொடுக்க முடியும். கட்சி தலைமையின் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும். பாஜக ஒரு ஒழுக்கமான கட்டுக்கோப்பான கட்சி. இது, வாய்ப்பு கிடைக்காதவர்களின் ஆரம்ப எதிர்வினைதான். விரைவில் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என்றார்.

    Next Story
    ×