search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அகிலேஷ் யாதவ்
    X
    அகிலேஷ் யாதவ்

    காலி இருக்கைகளை பார்த்து பேச பிரதமரை அனுப்பியிருக்க வேண்டும் - அகிலேஷ் யாதவ் கிண்டல்

    பிரதமருக்கான பாதுகாப்பு குறைபாடு குறித்த குற்றச்சாட்டை கிண்டலடிக்கும் வகையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசி உள்ளார்.
    கோண்டா:

    பிரதமர் மோடி பஞ்சாப் சென்றபோது விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பிரதமரின் வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலத்தில் 20 நிமிடங்களுக்கும் மேல் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. பிரதமர் அங்கிருந்து டெல்லி திரும்பினார். 

    பிரதமருக்கான பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். பஞ்சாப் அரசு திட்டமிட்டே அலட்சியமாக செயல்பட்டதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனார். 

    மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட பிரதமரின் வாகனம்

    ஆனால்,  பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பொதுக்கூட்டத்திற்கு போடப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்ததாலும், ஆட்களே வரவில்லை என்பதாலும் பிரதமர் திரும்பிச் சென்றதாக பஞ்சாப் முதல்வர் கூறினார். இது விவாதப்பொருளாக மாறி உள்ளது.

    இந்நிலையில், பிரதமருக்கான பாதுகாப்பு குறைபாடு குறித்த குற்றச்சாட்டை கிண்டலடிக்கும் வகையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசி உள்ளார். அவர் பேசியதாவது:-

    பஞ்சாப் மக்களும் விவசாயிகளும் பிரதமரை அவர் பேசவிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வர அனுமதித்திருக்க வேண்டும். அவர் (மோடி) காலியாக கிடக்கும் இருக்கைகளை பார்த்து உணர்ந்திருப்பார். உத்தர பிரதேசத்திலும் அவரது கூட்டங்களில் இருக்கைகள் காலியாக இருந்ததுபோல், பெரோஸ்பூர் கூட்டத்திலும் காலியாக இருக்கைகளைப் பார்த்து உரையாற்றியிருக்க வேண்டும்.

    ஜார்க்கண்ட் மாநிலம் கோடர்மாவில் எனது கட்சிக்  கூட்டத்திற்கு போதிய மக்கள் வராததால், தொண்டர்கள் என்னை நான்கு மணி நேரம் பேசவிடாமல் தடுத்து வைத்தனர். ஆனால், நான் 25 பேர் மட்டுமே இருந்த நிலையில் பேசிவிட்டு வந்தேன். அதனால்தான் சொல்கிறேன், பிரதமர் காலியாக இருந்த மேடை மற்றும் காலியாக கிடந்த நாற்காலிகளை பார்க்க விவசாயிகள் அனுமதித்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பஞ்சாபில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் பாதுகாப்பு குளறுபடி தொடர்பான பிரச்சினை பஞ்சாப் மாநில அரசியலில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×