search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    ராகுலை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க அதிரடி திட்டம்

    ராகுல்காந்தி மீண்டும் தலைவர் பதவியை ஏற்பார் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
    புதுடெல்லி:

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். அமேதியில் தோல்வியை தழுவினார்.

    காங்கிரஸ் பெற்ற தோல்வியை அடுத்து ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியாகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதன்பிறகு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கொரோனா பரவல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலையொட்டி புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த சூழ்நிலையில் தற்போது காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை அக்கட்சி தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சேர்க்கை முகாம் வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக ஒரு மாதம் உறுப்பினர் சேர்க்கையை நீட்டிக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது. இன்னும் 3 மாதங்களில் உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்துவிட்டு புதிய தலைவர் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினரை பொறுத்தவரை ராகுல்காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என விரும்புகின்றனர்.

    ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தபோது அவர் மீண்டும் தலைவர் பதவியை ஏற்கவேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.

    ஆனாலும் அவர் மவுனம் காத்து வந்தார். ஆனாலும் ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க அதிரடி திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அவரை சம்மதிக்க வைத்து காங்கிரஸ் தலைவராக்க அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்பார் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    இன்னும் 3 மாதங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் உள்பட 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×