search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒமைக்ரான் வைரஸ்
    X
    ஒமைக்ரான் வைரஸ்

    ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீள சாதாரண சிகிச்சையே போதும்: மருத்துவ நிபுணர்

    ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும், இது லேசான பாதிப்பையே ஏற்படுத்தி வருவதாகவும், ஆஸ்பத்திரி சேர்க்கையும், இறப்பும் குறைவாகவே இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
    புதுடெல்லி

    கர்நாடகத்தில் கடந்த 2-ந் தேதி 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த 23 நாளில் நாட்டின் 17 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது. பல நூறு பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    தலைநகர் டெல்லி, ஒமைக்ரான் பாதிப்பில் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானவர்கள், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள்.

    அவர்களுக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை பற்றி மூத்த டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

    டெல்லி விமானநிலையம் வந்திறங்குகிற பயணிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர். அவர்களில் பெரும்பாலானவரகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். நான்கில் மூன்று பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்தான்.

    ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகிறவர்களில் 90 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் அறிகுறியில்லாதவர்கள். எஞ்சியவர்கள் தொண்டை வலி, லேசான காய்ச்சல், உடல்வலி ஆகியவற்றால் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்.

    இவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் மற்றும் காய்ச்சல் சிகிச்சைக்கான பாரசிட்டமால் மாத்திரைகளைத் தருகிறோம். அவர்களுக்கு வேறு எந்த மருந்துகளும் தர வேண்டிய தேவை ஏற்படும் என்று நாங்கள் கருதவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தலைமை மருத்துவ அதிகாரி ரிது சக்சேனா கூறுகையில், “நாங்கள் இதுவரை 40 பேரை அனுமதித்துள்ளோம். 2 பேருக்கு மட்டுமே தொண்டை வலி, லேசான காய்ச்சல், உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு பாரசிட்டமால், ஆன்டிபயாடடிக் மருந்துகள் கொடுத்தோம். அறிகுறிகள் இல்லாத மற்ற நோயாளிகளுக்கு பல்வேறு வைட்டமின் மாத்திரைகளையே கொடுத்தோம்” என்றார்.

    சர் கங்காராம் ஆஸ்பத்திர, மேக்ஸ் ஆஸ்பத்திரி, போர்டடிஸ் ஆஸ்பத்திரி, பத்ரா ஆஸ்பத்திரி ஆகியவற்றில் ஒமைக்ரான் சந்தேக நோயாளிகளை சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தினமும் 1 லட்சம் நோயாளிகளை கையாள்வதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தினந்தோறும் 3 லட்சம் சோதனைகள் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

    ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும், இது லேசான பாதிப்பையே ஏற்படுத்தி வருவதாகவும், ஆஸ்பத்திரி சேர்க்கையும், இறப்பும் குறைவாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×